Thursday, 28 March 2013

பெத்தவங்களை போற்றுங்க
கற்றதனால் மறக்குமோ
பெற்றோரின் கடமைகள்
காசுக்கெங்கும் கிடைக்குமோ-அன்பு
கடையிலும் கிடைக்குமோ

கனிவுடனே பேர்சொல்ல
கண்குளிரப் பார்த்திருக்க
மீண்டும் வந்து பிறப்பாரா
மகிழ்ச்சியோடு அழைப்பாரா

மற்றவரும் நினைப்பாரோ
மகிழ்ச்சியாக சிரிப்பாரோ
உற்றாரும் வாருவாரோ
உடனிருந்து பார்ப்பாரா

கருவுற்ற நாள்முதல்
கண்ணுறக்கம் பாராமல்
உருவாக்கி வளர்த்தாரே
உதிரத்தை உணவாக்கி

பெத்தவங்களை போற்றினாலே
பேரிண்ப தடையேது  மகிழ்ச்சி
பெற்றதனால் பிள்ளைகளின்
பெருமைக்கு வேறென்ன புகழ் ஈடு


Wednesday, 27 March 2013

பட்டகாலில் படும் கெட்டகுடி கெடும்

              பட்டகாலில் படும் கெட்டகுடி கெடும்

                                                             ***********


"பட்டகாலில்படும் கெட்ட குடி கெடும்" இது பழமொழி என்பது எல்லோரும் அறிந்ததே .ஆம் நண்பர்களே  நேரத்தில் இந்த பழமொழியை  பொருத்தமான தருணத்தில் நினைவுறுத்துகிறேன்.நமது தமிழ்ச்  சொந்தங்களை இழந்து தவிக்கும் நம் மக்களின்மீது மீண்டும் குற்றம் சுமத்தி கொல்லும் செயலுக்கு நம்மினத்தவர்களே துணைபோகலாமா? நம் தமிழ் மக்ககளே குடிகெட்டு கஷ்டப்படுகிறார்கள் 

நம்மைக் கெடுத்து நம்மவரையே கொன்று இன்று நம் நாட்டில் நல்லவர்போல் 
நடிக்கும் திறமை யாருக்கு வரும்  அரசியல் என்ற போர்வையில் ஆளுக்கொரு நியாயம்  அவசியமா ? தகுமா?அதிலும் தமிழனே சாதனைப் படைக்கிறான்.
மற்ற இனத்தினர் வேடிக்கைப் பார்க்க நம் மக்களே சண்டை போட்டுக் கொள்ளும் கொள்ளும் போக்கு தேவைதானா?

இன்றைய சூழலில்சொந்தங்களை இழந்து சொத்துக்களையும் இழந்து தவிக்கும் நம் மக்களுக்கு உதவ முன்வராதவர்களே நம் மக்களைப் பழித்தும் இழித்தும் பேசும் நிலை தேவைதானா ? அரசியல் ரீதியான போராட்டத்திற்கு அரசியலே தீர்வே அன்றி இத்தனைபேர் உயிர்துறக்கும்  இழிநிலைக்கு துணை புரியும் கொடுமை எங்கேனும் உள்ளதா? 

எத்தனை உயிர்கள் ஏதுமறியா நிலையில் எண்ணிலடங்கா குழந்தைகள் பெரியவர்கள் என்ன  தவறிழைத்தார்கள்.உயிர்பிழைக்கவேன்டியே ஒளிவிடம் தேடியவர்களை  கொத்துக் கொத்தாய் கொன்றது நியாயமா?போன உயிர் திரும்ப வராது ஆனால்  அந்த ஆன்மாக்கள் அவர்களைச் சும்மா விடுமா?

எல்லா மதமும் ,இனமும் கொலை,கொள்ளை  பாவம் செய்வதை  தவறென்றே  சொல்கிறது.ஆனால் நம்மினம் மட்டுமே அதையும் நியாயப்படுத்துகிறது.ஏன் இந்த முரண்பாடு அரசியல் பிழைப்புக்காக அம்மா.அப்பா,அண்ணன் ,தம்பி ,அக்கா,தங்கை போன்ற உறவுகளையே  இழந்தும் அதை நியாயப்படுத்துவது  சரியா? முறையா?

மீண்டும் மீண்டும் நம்மீதே பழிசுமத்தி நமக்குள்ளே ஒற்றுமையை  நசுக்கி காரியம் சாதிக்கும் கயவர்கள் நிச்சயம் உலக மக்களால் பழிக்கப்படுவார்கள் .அதன்பின் பாவத்தின் கொடுமையை நிச்சயம் அனுபவிப்பார்கள்,காலமும் மாறும் ஒருநாள் காட்சியும் மாறும் சற்றே சிந்திப்பீர் கொடுமையா?அரசியல் கோட்பாடா? நியாயமில்லையே

ஆம் தமிழா நமக்காக அப்போதே இந்த பழமொழியை சொன்னார்களோ .இப்போது நடக்கும் எல்லா நிகழ்வுகளுமே நம்மினத்தைக் கொண்டே நம்மையே அழிக்கும் இச்செயலுக்கு நம்மவர்களே  நம் மக்களையே  காட்டிக் கெடுக்கலாமா? எனவே சிதறுண்டு கிடக்கும் நம் மக்கள் மனதால் மேலும் சிதைக்கப் படாமல்  ஒற்றுமையாய் வாழ  மறுவாழ்வுக்கு உதவ வேண்டும்.

தமிழ்க் குடிக் கெடக்கூடாது  ஒன்றுபடுவோம் ...வெல்வோம்.... தமிழால் உயர்வோம் .

*** கவியாழி***
      சென்னை

Monday, 25 March 2013

புறப்படு தமிழா ! புறப்படு !!புறப்படு புறப்படு
புயலென விரைந்திடு
புதைந்தவர் கனவினை
புரிந்திட்டுப் புறப்படு

வதைபடு உதைபடு
வாழ்பவர் துயர்நீக்க
வந்திடும் சிரமங்கள்
வென்றிடப் புறப்படு

எழுந்திடும் உணர்வுகள்
இணைந்திடப் புறப்படு
எம்மினம் என்றே
உணர்வுடன் புறப்படு

மாணவர் உணர்ச்சியை
மழுக்கிட முடியாது
மக்களின் உணர்ச்சியை
மறுத்திடக் கூடாது

மாணவர் கிளர்ச்சியே
மனதுக்கு மகிழ்ச்சியே
மாண்டிட்ட மக்களின்
மறுபடி எழுச்சியே

Friday, 22 March 2013

துரோகியே மடிவாய் நீயே

அழுகின்ற குரலென்றும்
அடங்காமல் போகாது
அடக்குமுறை எந்நாளும்
அறவழியாய் ஆகாது

துடிக்கின்ற உயிரென்றும்
துணையின்றிப் போகாது
துன்பமே எல்லோர்க்கும்
வழித்துணையாய்  மாறாது

விழுகின்ற நொடிஎல்லாம்
விரல்துடிக்க மறவாது
விழுந்தாலும் மனதால்-உணர்வை
வீழ்த்திவிட முடியாது

கடுமையான வார்த்தையாலே
நெடுந்துயரம் தீராது
கயவனாகி போனதனால்-உனக்கு
கண்ணுறக்கம் இனியேது

காற்றடிக்கும் திசையெங்கும்
கண்டபடிச் செய்திட்ட
கற்பனைகெட்டாத காரியத்தால்
தூற்றித் துறத்தும் காலம் தூரமில்லை

நேற்றுவரைச் செய்ததை
நினைத்துப் பார்த்து
தோற்றுவித்த துரோகத்தை
ஏற்றுக்கொண்டு மடிவாய்  நீயே

கவியாழி.
Monday, 18 March 2013

நேர்மையே நிம்மதி

நேர்மையாய் வாழ்வதனால்
நிம்மதியேக் கெட்டிடாது
நெறிகெட்டு வாழ்வதாலே
நெடுந்துயரம் தவிர்த்திடாது

பாடுபட்டுச் சேர்த்தப் பொருள்
பயனின்றி வீண்ப்போகாது
பழிசொல்லால் உண்மை
பயங்கொண்டு ஓளிந்திடாது

கடின உழைப்புக்குப் பலன்
கண்டிப்பாய் மறைந்திடாது
கஷ்டப்பட்டு சேர்த்தப் பணம்
கடைசிவரைத் தீர்ந்திடாது

குறுக்கு வழியில் நடத்தும்
குடும்ப வாழ்க்கை இனித்திடாது
கூ ட்டுக் குடும்ப வாழ்க்கைமுறை
கடைசிவரைக் கைவிடாது

Saturday, 16 March 2013

புது மொழிகள்-நிஜமா?


புதுமொழிகள்எதிர்பார்த்த நேரத்தில் உதவிக் கிடைக்காவிடில்
அவன் ஏழையாகக் கருதப்படுவான்.

அடுத்தவனைக் கெடுத்து ஆயிரங்கள் பலசேர்
ஆயுள்வரை  தவறில்லை.

கொடுத்து வாழ்வதை விட பிறரை
கெடுத்தும் வாழ் துயரில்லை.

உதவி கேட்பவன் தகுதியைப் பார்
 உலகை தெரிய அறிவுரை கூர்.

வட்டித் தொழில் மட்டுமே  பணம்
உழைக்காமல் கிடைக்கும்

பாவம் செய்யாதவன் பைத்தியம்
பரிதாபமாய் விரட்டி விடு.

குறுக்குவழியே கோடி நன்மை
குடிவளர்க்கும் உண்மை

பதுக்குறவன் ஊர் போற்றும் புத்திசாலி
பதுக்காதவன் முட்டாளாய்  ஏமாளி

திருடி வாழாதான் வாழ்க்கை இறுதியில்
தினமும் தொடரும் கஷ்டம்தான்

Friday, 15 March 2013

கோழையாக சாகிறான்.

பணம் உள்ளவன் பதுக்கி வாழுறான்
பாசத்தை மறந்து பணத்தையே காக்கிறான்
குணம் உள்ளவன் கொடுக்க நினைத்தும்-இல்லாமல்
குடும்ப நலனை மட்டும் பார்க்கிறான்

கள்ள வழியில் காசுப் பார்கிறான்
கண்டபடி செலவும் செய்யுறான்
உள்ளபடி சொல்ல போனால் -நேர்மையற்ற
ஊழியத்தை  தொழிலாகச் செய்யுறான்  

நல்லவரைக் கண்டு நையாண்டி செய்யுறான்
நாலுகாசு பாதுகாக்க நாயைபோலக் காக்கிறான்
இல்லாததை  ஏளனமாய் சொல்லுறான்-இறுதியில்
இல்லாமை அறிந்து சொன்னார்கள் என்கிறான்

சொந்தமும் பந்தம்மும்  சுற்றம் மறந்து
சொத்து நிறைய  சேர்த்து வைக்கிறான் 
எந்த உணவும் தின்ன முடியாது-நோய்
வந்ததாலே மாத்திரை மட்டுமே  திங்குறான்

சின்னப் புத்தியால் செய்வதை மறக்கிறான்
சிறந்தோரை  இழந்து   சாபத்தையும் சேர்கிறான்
உள்ளபடிச் சொல்லப்போனால் உறக்கமின்றி-கோழையாக
ஊர்வாயை உலைவாயை கொண்டே சாகிறான்


Thursday, 14 March 2013

அந்த நேரங்களில்.......

யாரும் பார்க்காத  நேரத்தில்
எப்படி நீ முத்தமிட்டாய்

நான் பேசாமல் இருந்தபோது
பிறகெப்படி கட்டியனைதாய்

தூங்காமல் நடிக்கும்போது ஏன்
துணையாக சேர்த்தனைதாய்

தீண்டாத நேரத்தில் நீ
தீயைஏன்  தூண்டிவிட்டாய்

வேண்டாமென நினைத்தபோது
வேண்டுமென்று அடம்பிடித்தாய்

வேண்டியதை  தூண்டிவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறாயே

தூண்டிலில் மண்புழுவாய்
துடிக்கவைத்து ரசிக்கிறாயே

இருநிமிட மௌனத்தில்
இடையிடையே கதைபடித்தாய்

இன்னுமின்று வேண்டினாலே
எதையோ பார்த்து சிரிக்கிறாயே

Wednesday, 13 March 2013

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

ஆத்திரக் காரனுக்கு புத்திமட்டு  என்ற பழமொழி  பெரும்பாலானவர்களுக்கு தெரிந்ததே  இருப்பினும் இன்றைய தலைமுறையினரில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அதனால் எனக்கு தெரிந்த சிலவற்றை உதாரணங்களுடன்  இங்கு கூற உள்ளேன்.

 அவசரக்காரனும் ஆத்திரக்காரனும் ஒண்ணுதான் .அதனால்தான் புத்தி மட்டு என்று சொல்கிறார்கள் மட்டு என்றால் குறைவு அதாவது அறிவு குறைவு என்று அர்த்தம். அவசரத்திலும் ஆத்திரத்திலும் செய்யும்  செயல்கள் சரியான முடிவைத்தராது. திட்டமிடல் இல்லாததனால் எல்லாமே நிகழ்வுகளும் நிச்சயமான வெற்றியைத் தராது.அதனால் யோசித்து செய்யும் செயல்கள் சரியாய் இருக்கும்.

தொழில் ,படிப்பு ,பயணம்,ஆராய்ச்சி,படிப்பில் ஆர்வமுள்ள அனைவருமே திட்டமிட்டு  நல்ல வெற்றியை பெறுகிறார்கள் அதனால் அவர்கள் செய்த உழைப்பு எல்லோருக்குமே பயனுள்ளதாய் இருக்கும்.இதில் ஆத்திரமோ அவசரமோ இல்லாததினால் எல்லாமே வெற்றியை முடிகிறது ,இங்கு அவசரமாய் எந்த முடிவும் எடுப்பதில்லை ஆழ்ந்து  சிந்தித்து செய்கிறார்கள்

 பெரும்பாலான அசம்பாவிதங்கள் கொலை.கொள்ளை , கற்பழிப்பு ,திருட்டு போன்றவைகள் இங்கு நான் குறிப்பிட்டபழமொழிக்குப்பொருந்தும்.
குறிப்பிட்ட எல்லாமே ஆத்திரத்திலும் அவசரத்திலும் செய்வன ஆகும். பெரும்பாலும் அந்த நேரங்களில் மனச் சிதைவு ஏற்பட்டே நடைபெறுகிறது.
ஏதேனும் ஒரு சிறு நிகழ்வே  இவ்வாறானவர்களை செய்ய தூண்டுகிறது.

இதில் கொள்ளை திருட்டு இரண்டும் தனி ரகம் இதில் திட்டமிடல் இருந்தாலும்
அவசரத்தில் செய்யும் காரியத்தினால் ஏதாவதொரு துப்பு கிடைத்து விடும். வெளியில் யாரேனும் பார்த்து விடுவார்கள் அல்லது பலபேரிடம் சில சமயம் அல்லது கூட்டத்தில் ஒருவராவது எங்கேனும் உளறி மாட்டிக்கொள்வார்கள்

கொலை,கற்பழிப்பு இரண்டுமே அவசரத்தில் அள்ளிதெளித்தக் கோலம்போல் எதிர்பாராமல் நிகழ்ந்துவிடும்.உணர்ச்சி வசப்பட்டு எதையும் யோசிக்காமல் செய்யும் செயலே இவ்வாறான நிகழ்வுக்கு அச்சாரமாய் அமைந்துவிடுகிறது இதனால் இழப்பு இருபக்கமும் இருந்தாலும் பாதிக்கப் பாடுபவரின் இழப்பு அதிகமானதாயும் வருத்தமானதாயும் இருக்கும்.

ஆதலால் எதிலும் ஆத்திரமோ அவசரமோ இல்லாமல் புத்திசாலிதனமாக ஈடுபட்டால் நல்ல விஷயம் எதிலும் வெற்றிதான் . அதே சமயம் அழிவுக்கு காரணம் அவசரமும் ,ஆத்திரப் படுதலே ஆகும் .எல்லாமே நன்றாக அமைய ஆத்திரப்படாமலும் அவசரப்படமாலும் இருந்தால் நல்லது.

இங்கு சிலவற்றைத்தான் கூற முடிந்தது  பலவற்றை தொலைகாட்சி,
வானொலி,செய்தித்தாள் மூலமாக பலரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு அதில் நாள் குறிப்பிட்டுள்ள பழமொழியின் அர்த்தம் புரிந்துவிடும்.

Tuesday, 12 March 2013

பருகச்சொல்லி அழைப்பாரா.....

இமை இரண்டும் சேர்ந்திருக்க
இதழிரண்டில் தேனொழுக
அமைதியான ஆற்றலுடன் -அவன்
அடியெடுத்து வைத்தவுடன்

தடைசொல்லி மறுப்பாரா
தயவினையும் வெறுப்பாரா
இடையிடையே சிணுங்கி-இன்பமதை
இறுக்கமின்றி விடுவாரா

சிரிப்புடனே செவ்விதழை
சினுங்காமல் கடிப்பாரா
சின்னச்சின்ன அசைவுகளை-வெறுத்து
சினத்துடனே இழப்பாரா

கதை தொடர காத்திருந்து
கதவை மூடி வைப்பாரா
படையெடுத்து வருபவரை-ஏற்று
பாங்குடனே வைப்பாரா

பத்துமாதம் முடியுமுன்னே
பாசமதை தடுப்பாரா
பழுத்துவிட்ட கனியதனை-குழந்தையை
பருகச்சொல்லி அழைப்பாரா


Monday, 11 March 2013

இன்பமான வாழ்க்கைக்கு...

    கடந்த வாரம்  எனது நண்பர்வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது.அதற்காக காலை ஐந்து மணிக்கே எழுந்து  எனது இருசக்கர வாகனத்தில காலையிலேயே ரயில் நிலையம் சென்றேன் .அந்த பொழுதே மிகவும் ரம்மியமாக இருந்தது அதுவும் சொந்த ஊருக்குப் போவதற்கு கசக்கவா செய்யும்.

      விடிந்தும் வெளிச்சம் தர மறுத்த சூரியன்,அதிகாலை தென்றல் காற்று ஆஹா எத்தனை சுகம் எனக்கு மெதுவாக அந்த காற்றை சுவாசித்தபபடியே சென்றேன்.நேரமாவதுகூட தெரியாமல் மெதுவாக காற்றின் ரிதம் கலையக்கூடாதென  சென்றது மனதுக்கு இதமாய் இருந்தது.

      எத்தனைமுறை சொந்த ஊர் சென்றாலும் எங்கிருந்தோ இனம் புரியாத ஆனந்தம் எப்படி வருகிறது  புரியவில்லை. சொந்த ஊரில் சொந்தங்களோடும் நண்பர்களோடும் பழகிய நாட்கள் இடங்கள் எல்லாம் பறந்துவந்து கதைச் சொல்வது எல்லாமே மகிழ்ச்சியாய் உள்ளதேன்.

      அன்றும் அப்படித்தான் அசைபோட்டுச் செல்லும்போது அருகிலேயே
அவருக்கு - 75அந்தம்மாவுக்கு -70  எடை 50  கிலோவுக்கு குறைவாகவும் ஒல்லியான தேகத்தோடும்  இருந்தார்கள் .மனமொத்த தம்பதிகள் இருவரும் மனமகிழ்ந்து பேசுவதும் சிரிப்பதும் கண்டு எனக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது. ஒருவருக்கொருவர் உணவு பரிமாறி  உள்ளன்போடு இன்னும் கொஞ்சம் நீங்க சாப்பிடுங்க என்று மாறிமாறி பகிர்ந்து சாப்பிட்டார்கள் .

     அதேபோல் நம்ம மருமக நல்லா கவனிச்சா ,பேரக் குழந்தைகளும் நம்மோடு நல்லா அன்னியோன்யமா இருந்தாங்க மகனும் நல்ல கவனிச்சானே என்று அந்தம்மா சொல்ல அவரும் தலையாட்டி எனக்கு சந்தோசம் உனக்கு என்று இருவரும் பேசிவந்தது  அவர்கள் முழுமகிழ்ச்சியாய்  பேசிக்கொண்டு வந்தது எனக்கும் கேட்டது. இங்கு அவர்களின் சந்தோசமும் குடும்ப உறவும் மேலும் வலுவாகியது
   
          இன்றைய இளையத் தலைமுறையினர் மூன்று மாதம் முழுதாய் குடும்பம் நடத்தத் முடியாமல் மணமுறிவு ஏற்பட்டு சண்டையிட்டு நல்ல நிலையில் வாழ்ந்துவரும் பெற்றோரையும் நடுத்தெருவுக்கு  வரவழைத்து  மொத்த குடும்பமே வெட்கித் தலைகுனிந்து  வருவதையும் அதைப் பற்றி கவலைபடாமல் இன்றைய தலைமுறையினர் செல்வதையும் பார்க்கிறோம்.

         திடீரென எனது  சொந்த ஊர் செல்லும் நிகழ்வுகளை மறந்து  இன்றைய சமுதாயம் ஏன் ஒற்றுமையின்றி இருக்கிறார்கள் என்று சற்று சிந்தித்தேன்.
ஆம், அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாய் இருக்கக் காரணம் அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு உள்ளன்போடு பேசுவதும் பகிர்ந்து உண்ணுவதுமே அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு காரணமென என்னால் புரிந்துகொள்ள முடிகிறது அப்போதே சில தீர்மானங்களை பேசி தெளிவுபடுத்திக் கொண்டால் எல்லோருமே அவர்களைப்போல் சந்தோசமாய் வாழலாம்.

      நம் வாழ்க்கை .நம் குடும்பம். நம்ம சந்தோசம் என்று இருவருமே  சுயநலத்தோடு உணர்ந்தால் எல்லோர் வாழ்வும் இன்பமாக இருக்கும்.முக்கியமாக விட்டுக் கொடுத்து வாழ்வதும் பிரச்சனையாகிவிடும் என்று தெரிந்தால் அதைத் தவிர்க்கவும் வேண்டும்.பணத்துக்காகவும் பகட்டுக்காகவும் வாழ்வதை விட்டு மகிழ்ச்சியாய் வாழ விரும்ப வேண்டும்.

       பிரச்சனையை தூண்டிவிடும் சொந்தங்களை தூர வைக்கவேண்டும். பெற்றோரே சொன்னாலும் ஒருவரையொருவர் புரிந்து,விட்டுக் கொடுத்து
வாழ வேண்டும் .வாழ்க்கை என்ற அத்தியாயம் சந்தோசமாக இருக்க அதன் சூட்சுமத்தை புரிந்து கொண்டவரே நல்ல வாழ்க்கையை சந்தோசமாய் வாழ்கிறார்கள்.

       நான் கண்ட வயதில் மூத்த தம்பதிகளைப் போல சந்தோசமாய்  வாழுங்கள் வாழ்கையில் வெற்றி பெறுங்கள்.
 
      இன்று எனது  23  வது திருமண நாளில் நானும் அவ்வாறு மனதொத்த தம்பதிகளாய் வாழ்ந்து காட்டுவேன் என்றும் விட்டுக் கொடுத்து வாழ்க்கையை கெட்டிக்காரனாய் வாழ்ந்துக் காட்டுவேன் என்று உறுதிக் கூறுகிறேன்

Saturday, 9 March 2013

மீண்டும் அந்தநாள் வாராதோ !

11.03.1990 அந்தநாள் ஞாபகம்
11.03.2013  அன்றும் வருவதால்
வாழ்ந்த நாள் எண்ணிக்கையில்
வருடம் இருபத்து மூன்றாகிறது

கொஞ்சநாள் வாழ்க்கையில்லை
குறைவான மகிழ்ச்சியில்லை
நிறைவான நாட்களிலே-எங்களுக்கு
நெடுந்தூரப் பயணமிது

எல்லாமும் பார்த்துவிட்டோம்
ஏழ்மையைத்  தாண்டிவிட்டோம்
எங்களுக்கு ஒரே பெண்ணென-இறைவன்
எழுதியதாய் நிறுத்திவிட்டோம்

தொலைவானப் பயணத்திலே
தோல்விகளும் பார்த்திருந்தும்
இனிதான வாழ்க்கைக்கு-இனியும்
இணைந்தே வாழ உள்ளோம்

இந்நாளில் எல்லோரும்
இனிய வாழ்த்துச் சொல்லி
இனிவரும் நாட்களையும்-சேர்ந்து
இன்பமாக்க வாழ்த்துங்களேன்

Friday, 8 March 2013

அவள்தான் மனைவி........

வாலிப வயது வந்தவுடன்
வாழ்கையை முடிவு செய்து
வளர்த்த வீட்டை மறந்து-இன்பமாய்
வாழ்ந்திட துடித்திடுவாள்

பெற்றோரின் முன்னிலையில்
பேரின்பம் காண வேண்டி
பொறுமையாய்  இருந்திடுவாள்-ஆதலால்
பெண்மையை காத்திடுவாள்

திருமணம் முடிந்ததும்
திரும்பியே கையசைத்து
விரும்பிய வாழ்க்கைக்கு-கணவருடன்
விருப்பமுடன் சென்றிடுவாள்

எண்ணியதை தந்திடுவாள்
எண்ணமதை அறிந்திடுவாள்
கண்குளிர அமர்ந்து கொஞ்சி-அவனின்
கண்மூடி விளையாடி டுவாள்

பொன்னே மணியே என்று
போதையை ஏற்றிடுவாள்
பெண்மையை தருவதற்கு-நித்தம்
பொறுமையை வென்றிடுவாள்.

அன்புடன் தந்திடுவாள்
ஆசையாய் உணவளிப்பாள்
அத்தனையும் பகிர்ந்துவிட்டு
அருகிலேயே துணையிருப்பாள்

அவள்தான்  மனைவி ! ஆயுட்காலத் துணைவி !!


Thursday, 7 March 2013

அன்னையாய் போற்றுவோம் பெண்மையை !

இன்ப இரவை இனிமையாக முடித்துவிட்டு
இன்றைய வேலையென்ன என்றெழுந்து
இருப்பவரைத்  தெய்வமாக வணங்கி-தினமும்
இதயம் மகிழத் தொடங்குவாள் சமையலை

என்பிள்ளை என்குடும்பம் என்வீடென
எந்திரமாய் இல்லாமல் அறிவார்ந்து
நல்லாள் செய்வாள் நல்லுணவு சமைப்பாள்-எல்லோரும்
நலம்வாழ  இறைவனையும் வணங்கிடுவாள்

கணவனின் துயர் நீக்கும் காசுக்காக
கண்ணியமான வேலைக்கும் சேர்ந்திடுவாள்
கருத்தாகங்கே களப்பணியும் செய்திட்டு-எப்போதும்
கருணையே வடிவான பெண்மையும்  போற்றிடுவாள்

விரைவாக வந்திடுவாள் விழுதுகளைக் கண்டவுடன்
வீட்டிற்குள் ஆனந்தமாய் நுழைந்திடுவாள்
விரும்பியதை  ஊட்டி மகிழ்வாள்- பிள்ளைக்கு
வீட்டுப்பாடம் சொல்லியும் துணைபுரிவாள்.

அன்பையே போதிக்கும்  அன்னைய வளுக்கு
ஆத்திரமே வந்திட்டால் அத்தனையும் நாசமாகும்
அகமறிந்து செய்திட்டால் அன்பே நிரந்தரமாம்-பெண்ணிடம்
அன்போடு இருப்போம் அன்னையாய்ப் போற்றுவோம்


Tuesday, 5 March 2013

பாவி என்றால் யார்?

           பொதுவாக வழக்கத்தில் எல்லோருமே சொல்லக்கூடிய இந்த வார்த்தை ஆச்சர்யமாக வழக்கத்தில் சொல்வது.இதன் உண்மையான முழுப்பொருளும் தெரியுமா? பெரும்பாலும் எல்லோராலும் இவ்வார்த்தை தவிர்க்க முடியாத வார்த்தையாகி விட்டது.

           அடப்பாவமே ,அடப்பாவி ,அடிப்பாவியே  என்று யாரையெல்லாம் அழைக்கிறோம் ஏன்? அவ்வாறு அழைக்கிறோம்  பாவி என்றால் என்ன பொருள்? என்ன அர்த்தம் ?. அடப்பாவமே என்றால் வருத்தப் படுவதாகவும்,
அடப்பாவி என்று கொடுஞ்சொல்லால்  திட்டுவதுபோலவும் அடிப்பாவியே எனும்போது மட்டும் தவறு செய்ததாக சொல்லுவதாயும் அழைப்பதேன் ?

        பாவி,படுபாவி ,கொடும்பாவி என்று திட்டுவதற்கும் சொல்வழக்கம் உண்டு .ஏன் இங்கு திட்டுவதற்கு பாவி,படுபாவி,கொடும்பாவி என்று சொல்லுகிறோம் இதெல்லாம் எனக்கு விளங்கவில்லை  ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனி அர்த்தங்கள் இருந்தாலும் எல்லா வார்த்தைகளும் தவறான அர்த்தத்தை கொடுப்பதேன்.

        தெரிந்தால் சொல்லுங்கள் அல்லது எனக்கு தெரிந்தப் பின்னர் நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்

Sunday, 3 March 2013

வண்டின்சுவைத் தெரிவாயா ?.........

வண்டின் சுவைத் தெரிவாயா?
--------------------------------------------

மல்லிகைப் பூ தொடுத்து
மலராக அசைந்து வந்து
சொல்லாமல்ச் சொல்லியதாய்
செல்லமாய்ச் சீண்டுகிறாய்
சிறைபிடித்துத் தாண்டுகிறாய்

துள்ளி ஒடும் மானைப்போல
தோகைவிரித்த மயிலைப்போல
மேல்லபேசும் தேனிப்போல
மெதுவாய் சொல்லும் வார்த்தையாலே
மேனியெல்லாம் சிலிர்க்குதடி

காரிகையே கற்கண்டே
காலம் சொல்லும் பூச்செண்டே
கற்பனையை கடந்து வந்து
கட்டியணைக்க மாட்டாயா
கனிரசத்தை உணர்வாயா

உள்ளமெல்லாம் புஞ்சையாக
உழவனுக்கு மழையாக
எண்ணிகொள்ளத் தோனுதாடி
ஏக்கமின்னும் கூடுதடி
என்னருகே செல்லும்போது

வானமின்று வெளிச்சமழை
வந்திறங்கும் நேரமுன்னே
வாசமுல்லை மார்கழியே
வந்தென்னை அணைப்பாயா
வண்டின்சுவைத் தெரிவாயா

Saturday, 2 March 2013

அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

   இந்த பழமொழி உண்மையா? தெய்வத்திற்கு பரிகாரம் செய்தால் சரியாகிவிடாதோ? அப்புறம் எப்படி இந்த பழமொழி சரியானதாகும்.அந்த காலத்தில் சொன்ன பழமொழி  அனைத்துக்கும்  அர்த்தம் உண்டென்றால்  அருகிலுள்ள உறவுகளை அழித்தவனுக்கு என்ன தண்டனையை தெய்வம் தரப்போகிறது.
  
      சின்னஞ்சிறுசு முதல் பெண்கள், ஊனமுற்றவர்கள், சிறப்பாக வாழ்ந்திருந்த முதியவர்கள் வரை எண்ணிலடங்கா மனித உயிர்களை அழித்தொழித்த படுபாதகனுக்கு  அந்த ஆண்டவன் என்ன தண்டனையை கொடுக்கப் போகிறார்

     அதற்காக பரிகாரம் செய்தால் எல்லாமே சரியாகிவிடுமே இதுதானே இந்து புராணங்களும் இதிகாசங்களும் சொல்கிறது. பெரும்பாலும் எல்லா மதங்களும் வருந்தி பாவமன்னிப்புக் கேட்டு விட்டால் சரியாகி விடுவதாகவே 
சொல்கிறது. அப்புறம் எப்படி தெய்வம்  தண்டனை கொடுக்கும் அவன் எப்படி அழிவான் .இறந்தவர்களின் ஆத்மா எப்படி சாந்தியடையும்.

       ஒருத்தனை பத்துபேர் சேர்ந்து கொல்வதும் பச்சிளங் குழந்தையை தெருவில் வீசிவிட்டு செல்வோர்க்கும் கற்பழிப்பு குற்றம் செய்வோருக்கும்  கலப்படம், கொள்ளை, பதுக்கல் இன்னும் நாட்டில் நடைபெறும் எத்தனையோ  குற்றங்களுக்கும் யார் தண்டனை தரப்போகிறார்கள்

       எல்லோர்மனதிலும் ஏன் இந்த கேள்வியை மறந்து விடுகிறார்கள்..காலமாற்றதிற்கேற்ப கடவுளும் மாறிவிட்டாரா? அல்லது மறந்துவிட்டாரா? எங்கெங்கு காணிலும் ஏற்றதாழ்வுகள் எப்படி வந்தது.எல்லோரும் வணங்கும் தெய்வம் ஏன் பாரபட்சணை காட்டுது.

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்
உலகுக்கு உண்மையை உணர்த்துங்கள்
கடவுளின் மகிமையை காட்டுங்கள் -இலங்கையில்
கஷ்டப்படுவோருக்கு கஷ்டம் தீர்க்க
கடவுளுக்கு சிபாரிசு சொல்லுங்கள்

    இந்த பழமொழியின் தாக்கம் எல்லா இடத்திலும் இருந்தாலும் இப்போதைக்கு  நாம் சொந்தகளுக்கு  மட்டுமே கேள்வியாய் கேட்கிறேன் .

இது உண்மையா? பொய்யா? சொல்லுங்களேன்

Friday, 1 March 2013

ஆட்டோக்கார அண்ணாச்சி....

ஆட்டோக்கார அண்ணாசி
அறிவியல் கணக்கு என்னாச்சி
ஆயில் அதிகமா போடுறதாலே-கண்ணு
அரிப்பு அதிகமா போயிடுச்சி

சந்துபொந்தா போகுறீங்க
சாகசமெல்லாம் செய்யுறீங்க
கண்ணு எரியும் புகைய விட்டு-மக்களுக்கு
கண்ணீரையும் வரவைக்கிறீங்க

மோட்டார் சைக்கிலபோறவங்க
முகத்திரையும் வீனா போச்சு
மூச்சு முட்டி நிக்கிறதும்-திட்டி
முனகிகிட்டே போக வைக்கிறீங்க

சுவாசகோளாறு உள்ளவங்க
மூச்சுவிட முடியலிங்க
சுற்று சூழல் பாதுகாக்க-நீங்களும்
சுகாதாரம் பற்றி யோசிங்க
Thursday, 28 February 2013

கவியாழி : இன்கம்டாக்ஸ் நிறைய போட்டு

கவியாழி : இன்கம்டாக்ஸ் நிறைய போட்டு: விண்ணில் ஏவிட்ட ராக்கெட்டு விடையொன்று சொல்லுது மெனக்கெட்டு ரயில்வே தந்திட்ட பட்ஜெட்டு-ஏழையின் ராத்திரி தூக்கமும் போயிட்டு இன்னும்...

Wednesday, 27 February 2013

இன்கம்டாக்ஸ் நிறைய போட்டு


விண்ணில் ஏவிட்ட ராக்கெட்டு
விடையொன்று சொல்லுது மெனக்கெட்டு
ரயில்வே தந்திட்ட பட்ஜெட்டு-ஏழையின்
ராத்திரி தூக்கமும் போயிட்டு

இன்னும் ஏதோ வருதாமே
இந்த ஆண்டு பட்ஜெட்டு
இருக்கிறதையும் புடுங்வாங்களோ-இனி
இன்கம்டாக்ஸ் நிறைய போட்டு

ஊழியனுக்கு  மூணுமாசம்
உடனடி டாக்ஸ் பிடித்திட்டு
வருத்தத்தோட வருவதோ -பயந்து
வீட்டுக்கு மிட்நைட்டு

கண்ணிலே தெரிவதில்லை
கடன்காரன் ஹார்ட்பீட்டு
கண்டதெல்லாம் பேசுறானே-வட்டி
கட்டினாலும் குட்டிப் போட்டு

இத்தனையும் கட்டிபுட்டு
இல்லறத்துக்கு வருது வெட்டு
இல்லாததும் பொல்லாததும்-வரும்
இனிமே வீட்டுல திட்டுTuesday, 26 February 2013

கவியாழி : புன்னகை செய்யுங்கள் புத்துணர்வாய் வாழுங்கள்

கவியாழி : புன்னகை செய்யுங்கள் புத்துணர்வாய் வாழுங்கள்: முன்மண்டை வழுக்கைதனை முகமலர்ந்தா ஏற்கிறோம் முக சுருக்கமதையும் தவறாய் முதிர்ச்சியாக எண்ணுகிறோம் சொல்வளர்க்கும் கவிதையினை சொல்லி தந்தா ...

Monday, 25 February 2013

புன்னகை செய்யுங்கள் புத்துணர்வாய் வாழுங்கள்

முன்மண்டை வழுக்கைதனை
முகமலர்ந்தா ஏற்கிறோம்
முக சுருக்கமதையும் தவறாய்
முதிர்ச்சியாக எண்ணுகிறோம்

சொல்வளர்க்கும் கவிதையினை
சொல்லி தந்தா எழுதுகிறோம்
சொல்லவேண்டிய கருத்துக்களை
சொல்லித்தந்தே வாழுகிறோம்

கவிதை படைத்து தினமும்
கடையில் விற்பதில்லை
காசுக்காக நாளும்
கையேந்தி எழுதுவதில்லை

உள்மனதைப் பாருங்கள்
உணர்ச்சிதனை கேளுங்கள்
நல்லொழுக்கம் படித்து
நற்றமிழைக் காணுங்கள்

புன்னகை செய்யுங்கள்
புதியதாக எண்ணுங்கள்
புகழுக்காக அன்றி
புத்துணர்வாய் வாழுங்கள்Saturday, 23 February 2013

நம்பிக்கை வார்த்தைகளை கூறுங்கள்.......

பிரச்சனை என்னவென்று கேளுங்கள்
பிள்ளையுடன் நண்பனாக பழகுங்கள்
நல்லவற்றை நாலுமுறை பேசுங்கள்-அன்பாய்
நம்பிக்கை வார்த்தைகளை  கூறுங்கள்

உள்ளபடி வாழ்வுதனை வாழ்வதற்கு
உண்மையாக தகுந்த வழிகாட்டுங்கள்
சொல்லுவதை சரியாக சொல்லுங்கள்-பிறர்
சொல்லும்படி நீங்களுமே வாழுங்கள்

கஷ்டத்தை மட்டுமே சொல்லாமல்
கடன் வாங்கி வந்தவழி கூறுங்கள்
இல்லையென்று எப்போதும் -சொல்லாமல்
இருப்பதை எடுத்துரைத்து காட்டுங்கள்

நல்லவற்றை நாடவேண்டி எப்போதும்
நயமாக நல்லொழுக்கம் புகட்டுங்கள்
நாலுபேர் மத்தியிலே உயர்வாக -வாழ்க்கை
நம்பிக்கை வார்த்தைகளை விதையுங்கள்

Thursday, 21 February 2013

பருவமறியா பாலகன்.பாலச்சந்திரன்

 பிரபாகரன் மகன் கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரம் 
உண்மையானது- சேனல் 4


பருவமறியா பாலகனை கொன்ற
இருள் மனது கொலைகாரன்
மடிவானா மக்களை இழப்பானா-வீட்டில்
இடிவிழுந்து இலங்கையில் இறப்பானா

குடிகெட்டு மதியிழந்து திரிவானா
குடும்பமே பைத்தியமாய் அலைவாரோ
இடுகாட்டில் தலை புதைத்து-தவறால்
சுடும் தீயில் விழுந்து மடிவானா

பிணம் தின்னும் குணம் மாறி 
மனம் திருந்தி வருந்து வானா
மக்களை பார்த்து மண்டியிட்டுக்-கதறி
மற்ற நாளையும் சிறையில் கழிப்பானா

ஈர நெஞ்சமுள்லோர்அவன்
கோர முகத்தை கிழித்து
 தீரத்தீர அடித்து துரத்தி-கோழையின்
குடும்பமே அழியாதோ மடியாதோ

Tuesday, 19 February 2013

பேராசைப் பெரும் நஷ்டம்

             "  பேராசைப் பெரும் நஷ்டம்"

              அதிகமா ஆசைப்படுவதை பேராசை என்று சொல்வார்கள். இதைப்
பற்றி நிறைய நீதி கதைகளும் கட்டுரைகளும்  உதாரனங்களும் உண்டு.
அளவுக்கதிகமாக ஆசைபடுவதும் பொருள் சேர்த்து வைப்பதும்  தவறு. இங்கு தவறான வழியில் பணம் சேர்த்த அரசியல்வாதிப் பற்றியே குறிப்பிடுகிறேன்
     
         எல்லா மதமும் இதைப்பற்றி தவறாகவே சுட்டிக்காட்டுகிறது  இருந்தாலும் நம்மில் எத்தனைபேர் கடைபிடிக்கிறார்கள் மிக சொற்பமான சிலரே.பலபேர் இதைப்பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை .பணம் சேர்ப்பதிலேயே மேலும் மேலும் குறியாய் அக்கறையாய் இருப்பார்கள்

        இவ்வாறானவர்கள் நேர்வழியில் சேர்த்திருக்க மாட்டார்கள் தவறான வழியே தடமாக எண்ணி லஞ்சம், கலப்படம், பதுக்கல், வட்டி வசூலித்தல் , வழிப்பறிக் கொள்ளை,  ஏமாற்றிப் பணம் பறித்தல் போன்ற தவறான வழியிலேயே சேர்த்திருப்பார்கள் இதையே தொழிலாகவும் செய்வார்கள்.

       அவசியமற்ற செலவுகளும் ஆர்பாட்டம் கேளிக்கையுடன்  சமூக அக்கறை உள்ளவர்களாய் பொதுமக்களிடம் காட்டிக்கொள்வார்கள்.ஏழைகளிடம் பிடுங்கியதை ஏழைகளுக்கு தர்மம் செய்வதுபோல் நடிப்பார்கள்.அதற்காக விளம்பரபடுத்தி மகிழ்வார்கள்
   
        இவர்களின் வருவாய்க்கு சரியான கணக்கிருக்காது. அரசுக்கும் முறையான கணக்கை காட்டி வரிசெலுத்த மாட்டார்கள் காரணம் இது நேர்வழியில் உழைத்து சம்பாதிக்கவில்லையே அதனால் முறையட்ற கணக்காக வைத்திருந்து முறையின்றி செலவழிப்பார்கள்.
 
      கடவுளின் பெயரால் விழா எடுப்பதாய் சொல்லி பணம் வசூலித்து  நாட்டியம் ,கச்சேரி,வானவேடிக்கை மேளதாளம் போன்ற மக்களை மகிழ்ச்சியூட்டும் நிகழ்சிகளை நடத்தி மக்களின் மனதை திசைதிருப்பி நல்லவர்களாக  காட்டிக்கொள்வார்கள்.

        அரசியலில் நுழைந்து அதிகம்  சம்பாதிக்க ஆசைப்பட்டு தேர்தலிலே ஒரு கட்சியின் வேட்பாளராக நிற்பார்கள் .மாற்று வழியில் சேமித்ததை தேர்தலில் செலவு செய்து எப்படியும் ஜெயித்திடலாம் என்றெண்ணி எல்லாவற்றையும் கடன் வாங்கியும்  நகை சொத்து அடமானம் வைத்து  செலவு செய்வார்கள்.

        மக்களுக்கு தெரியாதா இம்மாதிரியான வேட்பாளரின் யோக்கியதை  கொடுத்ததை வாங்கிக் கொண்டு நேர்மையாக நியாயமாக வாக்களித்து .முறையற்றோரின் வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைப்பார்கள் .

      இறுதியில் எல்லாவற்றையும் இழந்து வந்த வழியை பார்த்து மீண்டும்  ஏழையாக வாழ்க்கையை  தொடர்வார்கள் தவறாக சேர்த்தப் பணம் தானாகவே நஷ்டமாய் ஓடிவிடும்.முறையாக சேர்த்தப் பணம் முப்பொழுதும் நம்மைக் காப்பாற்றும்.எனவே பேராசைப் பட்டு  பெரும் துன்பம் சேர்க்க வேண்டாம்


              


Saturday, 16 February 2013

காதலி ! காதலா ! காதல்!
ஒருதலைக் காதல் ஜெயித்ததில்லை
உணர்வுள்ள காதல் தோற்றதில்லை
மறு பிறப்பு மீண்டும் வருவதில்லை-காதல்
மறந்து போனதாய் சரித்திரமில்லை

மனம் பார்த்து வருவதே காதல்
மிகையான பணம் பார்த்த தல்ல
குணம் மாற்றியும் வரலாம்-காதல்
கொள்கை உறுதி யோடும் வரலாம்

அவசர காதல் அழிந்ததுண்டு
அவசிய காதல் முறிந்ததுண்டு
ரகசிய காதல் ஜெயித்ததில்லை-காதல்
ரசனை மட்டுமே தகுதியில்லை

மனதை மாற்ற போராடு
மகிழ்ச்சியோடு அதை நீ நாடு
புதிதாய் செய்வோர் புனிதத்தை -அன்பாய்
புகழ்ந்து வாழ்த்தி  நீ சொல்லு

பிரியும் காதல் தொடர்ந்ததில்லை
பிரிக்கின்ற காதல் அழிவதில்லை
புரிகின்றோர் காதல் முடிவதில்லை-வெற்றி
புரிந்தோர் அதையும் தடுப்பதில்லை

Thursday, 14 February 2013

இன்றும் உன்னைத் தேடுது

ஏங்கி ஏங்கியே
என் இளமையை கழித்தேன்
இன்னும் வேண்டியே-அதனால்
இன்றும் நான் தவித்தேன்

கனவினால் தினமும்
தூங்க மறுத்தேன்
காதலால் உன்னை -அங்கும்
தேடியே  அலைந்தேன்

சின்ன குழந்தைகள்
சிறைபிடிக்குது
செல்லமாய் கொஞ்ச-மீண்டும்
உள்ளம் ஏங்குது

ஆசை ஏனோ
அடங்க மறுக்குது
அணைக்க வேண்டியே-இன்றும்
உன்னை தேடுது

நீ வருவாயோ
நிழல் தருவாயோ
பூவுடன் வந்து-என்னை
போர் தொடுப்பாயா

Wednesday, 13 February 2013

"மனிதமே" இறந்ததோ?
மனிதமே இறந்ததோ
மனசாட்சி அழிந்ததோ

எங்கெங்கு காணினும்
எண்ணற்ற கொலைகள்

எல்லோரும் தூற்றும்
கற்பழிப்புப் பிழைகள்

வசதி வேண்டியே
வழிப்பறிக் கொள்ளை

வார்த்தை மாறியே
வாழ்க்கைப் பயணம்

பிழை செய்வதே
பெருமையாய் போற்றுதல்

ஊழலில் சேர்த்ததை
ஒளிவின்றி செலவழித்தல்

கள்ளச் சந்தையில்
காசு பணம் சேர்த்தல்

கலப்படத்தை நேர்த்தியாய்
கைதொழிலாய் செய்தல்

இயற்கையே மரித்ததால்
இயலாமை தொடருதோ

எங்கே போனது
மனித நேயம்

எப்படி வாழும்
நீதியும் நியாயமும்

சற்றே யோசிப்பீர்
சந்ததிக்கு வாழ்வளிப்பீர்Monday, 11 February 2013

இன்னும் நீ அழகி !
இந்த வயதிலும்
இன்னும் நீ  அழகி !

இளமை மாறாத-இன்றும்
இன்பந்தரும் அருவி.

பெற்றவன் மகிழும்
சித்திரப் பெண்ணே !

இரவில் மிளிரும் -எதிரில்
தெரியும் நிலவும் நீ !

என்னை தழுவும்
இதமான தென்றலும் நீயே !

மாசியின் மகளே
மாற்றம் தரும்
பகலேஒளியே !

பார்ப்பவர் வியக்கும்
பருவம் தாண்டிய
அகலே!

கனவில் கண்டு
கண் விழித்ததும்
மறைந்து சென்றதேன் ?

மீண்டும் வருக !
மீதமும் தருக !!

Saturday, 9 February 2013

அவளுக்கு அப்படியொரு ஆசை

......... அவளுக்கும் அப்படித்தான் தோன்றியது .

            அதிகாலை வேளையில் கடற்கரை அருகில் அமைதியான சூழலில் காலாற நடக்க வேண்டுமென்று...

          அப்போது அவன் கேட்டான் ,ஆமா  என்னஇங்கு எதுக்கு அடிக்கடி வரீங்க?

           அதையேன் இப்போ கேட்கிறீங்க? அவள் சொன்னாள் .

          உடனே சுதாரித்தவளாய் அங்கே பாருங்க மீன்களெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாய் துள்ளி விளையாடுகிறது

         அந்த அதிகாலையிலும் நிலவும் சந்தோசமாய் வெளிச்சத்தை கடலில் வீச
இனிமையான கடல் காற்றும்  மட்டுமே அவளுக்கு சந்தோசமாய்
இருந்தது.அவளுக்கு அப்படியொரு ஆசை

          நான்  கேட்டேனே பதில் சொல்லவில்லையே?

         உங்க பேரு என்ன எந்த ஊரு?

சற்றே நிதானமாய் அவனை உற்று நோக்கினாள் ஏன்?

    இல்ல தெரிஞ்சுக்கலாமே என்றுதான்,தினமும் அந்த முதியோர் இல்லம்
வரீங்க அங்குள்ளவங்களிடம் ஆதரவா பேசுறீங்க அதனால்

அதனால் ?

நான் என் ஆத்ம திருப்திக்கு மட்டுமல்ல அங்கு எனக்கு
வேண்டியவங்க இருக்காங்க அதுக்குதான் நான் வருகிறேன்

      ஆனால் அவள் உண்மையை மறைக்கிறாள் என்பது அவனுக்கு தெரியும்.

         எனக்கு உறவென்று சொல்லிக்கொள்ள ஒருவரும் எனக்கில்லை
நான் நிம்மதி தேடியே இங்கு வருகிறேன் மனம் விட்டு பேசுகிறேன் அவர்களது ஏக்கத்தையும் அன்பாகப் கேட்கிறேன் இங்குள்ளவர்களிடம் அன்பு செலுத்த ஆளில்லை என்னைப்போல

            அப்படியா?

            எனக்கும் ஆதரவாய் இருக்கிறது என்னிடம் அன்பாய் பேச என்னை எதிர்பார்க்கும் நல்ல உள்ளங்களுக்காக பணத்தை கொடுக்க பலர் இருக்கிறார்கள் அன்பை தேடி நான் வருகிறேன்

       நானும் உங்களைப்போலவே அன்பு அமைதி ஆதரவு வேண்டியே வருகிறேன் ! அவன் சொன்னான்
     
       பணமும் மனமும் உள்ள  மனிதர்களும் இருக்கிறார்கள் என்று!
என்னக்கு பணம்! அவனுக்கு அன்பு! முதியோருக்கு ஆதரவு !


Friday, 8 February 2013

அவனுக்கும் நன்றி சொல்வேன்......
அவனுக்கும் நன்றி சொல்வேன்
ஆகையால் அவனென் அடிமை
காலமெல்லாம் சுறுசுறுப்பாய்
காணுகின்ற புது மலராய்
காத்திருந்து தீண்டும்போது.....

எத்தனை பக்கங்கள்
எழுதிப் பார்த்து உறங்கினாலும்
அத்தனையும் ரசிக்கிறேன்
அன்புடனும் மகிழ்கிறேன்
அதனால் சொல்கிறேன் அவனுக்கு ..

சிலந்திபோல வலை
சிங்காரமாய் பொட்டு
எதிரியென எண்ணாமல்
எல்லா உணவும் சாப்பிட்டு
என் வயிறும் நிறைகிறது.......

மனதின் ஒருபக்கம்
மௌனமான  வலியும்
மருத்துப் போனதால்
பணம் மட்டுமே தேவை
அதையும் கேட்கிறேன் அவனுக்காய்......?>Wednesday, 6 February 2013

எங்கே நிம்மதி !


ஏழெட்டு வீடிறுக்கு
ஏசி  காரும்
நிறைந்திருக்கு

கூவிட்ட குரலுக்கு
கூட்டமாக நிறைய
 வேலையாளிருக்கு

வங்கியிலே பணமிருக்கு
வாங்கி வைத்த
நிலமிருக்கு பொருளிருக்கு

நடைபோக தெம்பிருக்கு
நலம்கேட்க
நட்பிங்கே மட்டுமிருக்கு

இத்தனை  இருந்தும்
இறைவனை நினைத்தும்
தப்பிருக்கே

ஆம்

பெற்றவரை விட்டுவிட்டு
பொறுப்பை மறந்தேனே
தவறு செய்தேனே

நிறைந்த சொந்தமெங்கே
நண்பர்களேங்கே
தமிழே நீயும் எங்கே

இத்தனையும் மறந்து
இங்கே தனியாய் வாழ்வதா
இனிய சொந்தம் மறப்பதா

உண்பதும் உணவா
உறவிழந்து மகிழ்வா
எங்கே நிம்மதி

பணம் பொருள்
போதுமெனக்கு
நேசமும் நிம்மதியும் வேண்டும்

சொந்த நாடே சுகமென்று
வந்தவழி செல்கிறேன்
வாழுமிடம் செல்கின்றேன்

Saturday, 2 February 2013

புறப்பட்டு நீ வா !

தேவைக்கதிகமான பணமுண்டு
தேடாமல் எல்லாமே வீட்டிலுண்டு
பாவைக்கும் நட்பாய் பலருண்டு
பார்பவரெல்லாம் நல்லன்பு கொண்டு

வீதிக்கு வீதி சிலையுண்டு
விடியும்வரை காவலுமுண்டு
வெட்டியாய் நாளும் இருப்பதுண்டு
வீணே நேரத்தை  கழிப்பதுண்டு

இத்தனை இருந்தும் எனக்கு
இனிமை வாழ்வே அல்ல
புத்தகம் எழுதினாலும்
பொழுது போகவே இல்ல

நித்தமும் அருகில்  எனக்கு
நிம்மதி வேண்டும்  துணைக்கு
நினைத்த நேரத்தில் எதையும்
நெருங்கி பேச வேண்டும்

எத்தனைக் கோடி பணமும்
எதற்கு வேண்டும் துணையாய்
எண்ணிய நேரத்தில் உரசி
எழுந்திட வேண்டும் பேசி

வாழ்க்கையை வாழ நீ வா
வசந்தத்தை நாடி நீ வா
போர்க்களம் காண நீ வா
www.kaviyazhi.comபுறப்பட்டு கூடவே  நீ வா

Thursday, 31 January 2013

இதுவும் வாழ்க்கையா?

திருடன்கூட தன்தொழிலை
தெய்வமென போற்றிடுவான்

அரசியல் வாதியும் அவனைப்போல்
அலைந்தே திரிந்தே செய்திடுவான்

பதுக்கல்காரன் பதுக்கியதை
பழகிப்போன தொழிலென்பான்

கல்வியை விற்கும் மோசடியும்
கடவுள் சேவை தொழிலென்பான்

லஞ்சம் கேட்போன் லட்சியமாய்
கொஞ்சம்தானே கொடு என்பான்

வஞ்சகம் செய்வோன் வருத்தமின்றி
வாழ்க்கை பிழைப்பு இதுவென்பான்

தினமும் காலை எழுந்தவுடன்
திரிந்து அலைந்தே செய்திடுவான்

பொருத்தமான தொழிலென்றே
புதிதாய் தொழிலை தேட மாட்டான்

சீ......இதுவும் வாழ்க்கையா?

Wednesday, 30 January 2013

மதமின்றி மனிதனாக முடியுமா?

http://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post.html

Monday, 28 January 2013

ஆம் ! தமிழா .......

வாய்மூடி மௌனியாக
வாழத்தான் வேண்டும்
வந்தோரோயும் சொந்தமாக
வாழ்த்தத்தான் வேண்டும்

கூன் குருடு செவிடு போல
இருக்கத்தான் வேண்டும்
கூடிவாழ்வதில் ஒற்றுமை
கொண்டுத்தான் ஆக வேண்டும்

தொழில் முடங்கி
தொடரத்தான் வேண்டும்
தொல்லைகளைத் தாங்கியும்
சிரிக்கத்தான் வேண்டும்

வந்தோரை வாழச் சொல்லி
வழியின்றி தவிக்க வேண்டும்
வாழ்நாளை  சுருக்கி
வயிரும் காயத்தான் வேண்டும்

சன நாயகம் என்றும்
சகித்துக்கொள்ள வேண்டும்
சமதர்ம சமுதாயம்
போற்றத்தான் வேண்டும்

சாதியும் வேண்டும்
சமத்துவமும் வேண்டும்
மீதியும் கேட்டு மிதிபட்டு
முரண்பட்டும் வாழ வேண்டும்

உண்ண உணவில்லை
உள்ளூரில் சங்கம் வேண்டும்
சாத்திரம் பேசி சகோதர
சண்டையும் வேண்டும்

இருந்தாலும் எல்லாமே
சகித்துவாழ வேண்டும்
எப்போதும் தமிழுக்காக
ஏழ்மையோடும் வாழ வேண்டும்

ஆம் .. தமிழா !
வாழ்ந்துதான் ஆக வேண்டும்Saturday, 26 January 2013

இதழ் வேண்டும் எனக்கு..........

இதழ் வேண்டும் எனக்கு
இதழ் வேண்டும்

இமைமூடிப் பருக
இதழ் வேண்டும்

இணையாகும் முன்னே
இதழ் வேண்டும்

இறுக்கி அணைத்தபடி
இதழ் வேண்டும்

நுனி நாக்கில் சுவைக்க
இதழ் வேண்டும்

நெடுநேரம் முடியாத
இதழ் வேண்டும்

முடியாத நேரமாய்
இதழ் வேண்டும்

முப்பொழுதும் உணவாக
இதழ் வேண்டும்

எப்போதும் சுவையாக
இதழ் வேண்டும்

எழுச்சிப் பெரும் முன்னே
இதழ் வேண்டும்

இனிக்கின்ற  கனியாக
இதழ் வேண்டும்

கட்டுடலை சூடாக்க
இதழ் வேண்டும்

கனிந்தவுடன் முழுவதுமாய்
கடைசிவரை எனக்கு  அது ? வேண்டும்.

Thursday, 24 January 2013

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

மேலே கண்ட பழமொழி எல்லாத  தமிழ் மக்களுக்கும் தெரிந்த ஒன்று.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள்  ஒரு சில நாட்களில்  இப்படி எண்ணி வருந்துவதுண்டு.இது நமது கலாச்சாரம் மட்டுமல்ல உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் ஏற்படும் நிகழ்வும் உண்மையும் கூட.

சிறிய வயதில் பள்ளி செல்லும்போது பார்த்து பத்திரமாய் திரும்பி வா சாலையை கடக்கும்போது இருபுறமும் பார்த்து  வா என்றும். பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டயா ? பள்ளியில் என்ன பாடம் நடத்தினார்கள்  என்றும் அக்கறையோடு விசாரிப்பார்கள் அப்போது நல்ல பிள்ளையாக எல்லாவற்றையும்  ஒன்று விடாமல் சொல்லுவார்கள்.

அதே பிள்ளை கல்லூரிக்கு போகும்போது  நீங்க பத்திரமாய் அலுவலகம் சென்று வாருங்கள் சரியா சாப்பிடுங்கள்என்றும் நான் வீடு திரும்பி  வரும்போது  உங்களுக்கு  ஏதாவது வாங்கி வரட்டுமா என்பது போன்ற  அக்கறையும் அன்பில் முதிர்ச்சியும் தெரியும்.பண்புடன் நடந்து கொள்வார்கள்.
எதிர்காலம் பற்றிய யோசனையையும் கேட்பார்கள்..

வேலைக்கு செல்லும்போது அன்பிற்கு குறைவிருக்காது ,நாம் சாப்பிட விரும்பும்,  விரும்பாததையும் வாங்கி வந்து  நம்மோடு பகிர்ந்துண்டு மகிழ்வார்கள்.சரியாக  ஊதியத்தையும் நம்மிடம் கொடுத்துவிட்டு  செலவுக்கு பணம் கேட்பார்கள். அவ்வளவு பாசமும் நேசமும் பக்தியும் இருக்கும்.நாமும் பெருந்தன்மையாக  செலவுபோக மீதியை வங்கியிலோ  அல்லது முதலீடு செய்ய சொல்லியோ அறிவுறுத்தினால் அதையும் தட்டாது கேட்டு முறைப்படி செய்வார்கள்.

அடுத்தது திருமணம்  இப்போதுதான் நம் அவர்களுக்குள்ள  சுதந்திரத்தை உரிமையை அன்பை பாசத்தை விட்டுக் கொடுக்கும் மன நிலைக்கு நம்மை நாமே தயார்படுத்தி திருமணம் செய்து வைப்பதுவரை கடமை என்ற நிகழ்வில்  நம்மை ஈடுபடுத்திப் பின் அவர்களை தனிமைபடுத்தி விடுகிறோம். குடும்பம் உறவுகள் கடமைகள்  என்ற பந்தத்தை ஏற்படுத்தி விலகி நிற்கவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு வருகிறோம்.

இவ்வளவும் நம்மை நமது பிள்ளைகளுக்காக நம்மை நாமே மனதளவில் ஈடுபடுத்தி அன்புடன் பாசத்துடன்  நம் பிள்ளையே என்றுதான் அனைத்தையும் செய்கிறோம்.அப்படியும் செய்யாத கடமையிலிருந்து தவறும் பெற்றோரும் உண்டு அவர்கள் இவ்வாறான  பந்த பாசத்திற்கு விதிவிலக்கானவர்கள்.சில கட்டாய தவிர்க்க இயலாத சூழ்நிலையில்  இவ்வாறு  இருக்கும் பெற்றோரும் உண்டு.

திருமணம் முடிந்து ஒன்றிரண்டு குழந்தைகள் ஆனபின்பு  அவர்களின் போக்கு மாறியிருக்கும்  அதாவது மனைவி சொல்லே மந்திரம் என்றும் நானும் குடும்பஸ்தன் என்ற பொறுப்பும் அக்கறையும் வந்துவிடும்.அப்போதுதான் தனக்கு தன் குடும்பத்திற்கு  என்ற மனமாறம் ஏற்பட்டு  பெற்றவர்களை விலக்கி வைக்கும் சூழ்நிலைக்குத்  தள்ளப்படுகிறார்கள். மேலும் பணம் சம்பாதிக்க குடும்பத்துடன் வெளியூர் அல்லது வெளிநாடு  சென்று தங்கும் சூழ்நிலை ஏற்படும்

இவ்வாறான சமயங்களில் எதையும் ஆலோசிக்காமல் தனிப்பட்ட முடிவெடுப்பது வயதான பெற்றோர்களை மனம் குமுறவைக்கும்.
அவ்வாறான  நிகழ்வே பிள்ளைகளையும் பெற்றோரையும் பிரிக்கிறது. அதனால் தனிக் குடித்தனம் செல்வார்கள்.அப்போது பெற்றோர் தனிமைபடுத்தி மனம் கலங்கி வருத்தமடைவார்கள்.அப்போதுதான் குடும்ப உறவுகள் பிரிக்கப்பட்டு விடுகிறது.

தனியாக ஏன் கஷ்ட படுகிறீர்கள் நீங்கள் ஏன் முதியோர் இல்லம் செல்லக்கூடாது? அங்கு எல்லா வசதியும் இருக்கிறது,நானும் அடிக்கடி வருவேன் என்றும் அப்படி  வர இயலா விட்டாலும்  கட்டணத்தை கட்டி விடுகிறேன் என்றும் அக்கறையாக சொல்லுவார்கள். அல்லது கவனிக்காமல் உங்களது ஓய்வூதியத்தில் கட்டிவிடுங்கள் என்பார்கள்.

இப்போதுதான் பிள்ளை மனம் கல்லாகிவிடுகிறது.பெற்றோரின்மேல் அக்கறை இருந்தாலும்  பணம் என்னும் சூத்திரதாரி   பாசத்தை விலைப்பேசி "பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு" என்ற  பழமொழியின்  உண்மையான அர்த்ததை உணர்த்துகிறது.
 இப்பழமொழி இன்று நேற்று அல்ல காலங்காலமாய் சொல்லில் இருப்பதுதான்.ஏன் நாளையும் இது தொடரும் என்பதில் ஐய்யமில்லை.

Tuesday, 22 January 2013

"அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?"புத்தக வெளியீட்டு விழா"அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?"
 புத்தக வெளியீட்டு விழா  படங்கள்


திரு,நல்லி குப்புசாமி அவர்களால் நான் (கவியாழி) கௌரவிக்கப்படுகிறேன்

திரு,திருமாவளவன் அவர்களால் மணிமேகலை ப பிரசுரத்தின் சார்பாக நினைவுப் பரிசு  வழங்கப்படுகிறது


 திரு.திருமாவளவன்  அவர்களால்"அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?" புத்தகம் வெளியிடப்பட்டு புலவர்.ராமநுசம் அவர்கள் புத்தகத்தை பெற்று கொள்கிறார்.

இவ்விழாவிற்கு   குடும்பத்தோடும் நண்பர்களோடும் தனியாகவும் வந்திருந்து வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி,

கவியாழி.கண்ணதாசன்

Sunday, 20 January 2013

தற்கொலைத் தண்டனை யாருக்கு?

எண்ண கனவினில்  நாளும் வடிவமைத்து
எத்தனையோ சிந்தனையை முன் நிறுத்தி
அத்தனையும் வண்ணமாய் உருக்கொடுத்து-அன்பாய்
சித்தனாக சிலைபோல நெஞ்சில்  வளர்த்தார்கள்

சிறுஎறும்பும் சீண்டாது பார்த்திருந்து
சிறிய வயதிலே  செம்மையாக நகையணிந்து
உரிய கல்வியையும் உடன் கொடுத்து-ஊர்பேச
பருவ வயதையும் பார்த்து பூரித்திட்டார்கள்

தெருவோரம் நின்று தினமும்  ரசித்து
தினம்தோறும் உணவும் விரும்பிய தீனியும்
மனம்கோனது மகிழ்ச்சியாய் திணித்து-அன்றாடம்
அகமெல்லாம் அன்பொழுக நாளும் பார்த்தார்கள்

இளமை பருவத்திலே எத்தனையோ  கற்று
எளிமை பண்பையும் சொல்லி கொடுத்து
வளமையாக்கி வடிவமைத்து  வாழவேண்டி-நலம்கான
கிழமை தோறும விரதமும் இருந்தார்கள்

இத்தனையும் செய்தும் இழி மனதில்
பித்தனாய் மாறி  பிறள் புத்தியால்
தத்துவம்  பேசி தவறான முடிவை-மனமொடிந்து
சத்தியம் தவறி சாகமட்டும் துணிந்ததால்

புரியவில்லை எனக்கு புதிரோன்றும் அறியவில்லை
புரிந்தவரையும்  காக்க பொருளேதும் சேர்க்கவில்லை
மடையனே மன்னிக்கமுடியாத இடையனே-விடையடைய
மனம்திறந்து  சொன்னாயா மனிதனாக நின்னாயா

மதி  இழந்தோரே  மனபயம்  கொண்டேரே
விதி முடியவில்லை வீணான எண்ணத்தால்
சதியாக சமூகத்தில் கேடாக செய்திட்ட-சண்டாளனே
சாதித்தது என்ன சாக்கடை எண்ணத்தால்?

இதுபோன்ற செய்கையால் எண்ணற்ற உயிர்கள்
இழிவான  பாதைக்கு இடர் தெரியாமல்
மலிவான செய்கையால்  மனம்கெட்டு-தவறாக
மனமுடைந்து  மதிகெட்டு  விதியென்று  சாகிறார்கள்

நஷ்டம் யாருக்கு ? நம்பியோற்கும் தண்டனையா?
கஷ்டமெல்லாம்  வந்ததால்  கடமை மறந்தாயே?
பெற்ற  பிள்ளைக்கு பிரச்னை  வேண்டுமா?-கஷ்டமெல்லாம்
உற்ற துணைவிக்கும் உன்னை வளர்த்த பெற்றோருக்கா?

மனிதனாக இரு  மனிதத்தை  மகிழ்ச்சியாக்கி
மதியோடும் மதிப்போடும் மன தைரியத்தோடும்
புனிதனாக வாழ்ந்து பார் புகழோடு வாழ்த்துவார்-அகிலமே
இனிமையாக ஏற்று எல்லோரையும் போற்றுMonday, 14 January 2013

யுகத்தை ஆளலாம் உன்னுள் காணலாம் !


அகத்தை ஆள ஆணவத்தை அடக்கு 
அகிலமும் உனை பார்க்க நேர்நிறுத்து
சுகத்தை உன்னுள் நேர்த்தி செய்தால்-ஆயுளில்
யுகத்தை ஆளலாம் உன்னுள் காணலாம் !


உன்னில் ஒளிந்திருக்கும் ஒளியரிந்திடும்
உன் கணக்கு என்னவென்று  உடலில்
 வெண்ணை சேர்காதமேனி வெளிர்ந்திடும்-உண்மையாக
கண்ணுள் காட்டிடும்  கனவாக தெரிந்திடும்!

மெய்யும்  பொய்யும் மேனியு  ளதில்லை
மெய்ஞானம் நேரில் பார்த்த தில்லை
சொல்லும்  செயலும்  சேர்ந்தே யன்றி -எளிதில்
சொல்லாத சொல்லால் பயமேதுமில்லை!

இல்லா ராயினும் இறைவனை தேடவேண்டாம்
இல்லாதோருக்கு உதவிட்டால் அங்கே காணலாம்
பொய் சொல்வோரை புறந்தள்ளி பார்த்தாலே-வாழ்வில்
புரிந்திடும்  மெய்ஞானம்தெரிந்திடும் செயலாலே!


நம்பிக்கை வாழ்வில் நல்வழி படுத்தும்
நாணயம் எப்போதும் துணை நிற்கும்
வம்பிலுப்போர்  வாழ்வு நெறிகெட்டு-துன்பமாக
சம்பவிப்பார் சாபங்களை சந்ததிக்கு சேர்ப்பார் !

கஷ்டம் கடக்கும் காலம் வந்தால்
நஷ்டமும் தீரும் நன்மை பெறும்
இஷ்டமாக இனிதே உதவி செய்தால்-இயன்றதை
துஷ்ட மெல்லாம் தூரசென்று  விலகிடும் !

நல்லவனாய் இருப்பதால் நல் மனிதனாவாய்
நன்றியுள்ள ஜீவனுக்கும் நண்பனாவாய் அன்பனாவாய்
இல்லாதவனாய் இருந்தாலும் இன்ப வாழ்வில்-நேர்மையான
இல்லறத்தில் துன்பமில்லா நல் இறைவனாவாய் !

Saturday, 12 January 2013

புத்தக வெளியீடு விழா அழைப்பிதழ்
     அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்


நான் எழுதிய  மேற்கண்டப் புத்தகத்தின் வெளியீட்டு விழா நாளை 13.01.2013 மாலை 4.00 அளவில்  நந்தனம் YMCA  கல்வி வளாகத்தில் நடைபெறும் புத்தகத்திருவிழாவில் மணிமேகலை பிரசுரத்தாரினால் வெளியிடப்பட உள்ளதால் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்

அனைவரும்  வருக ஆதரவு தருக.


கவியாழி
கண்ணதாசன்
சென்னை
கைப்பேசி எண்:9600166699

Thursday, 10 January 2013

இனிய குழந்தைக்கு.........
 
இளமையான நாட்களில் இல்லறம் அமைத்திட்டால்
இனிமையான பிள்ளைப்பேறு இனிதேக்  கிடைத்திட
துணையோடு தோள் சேர்த்து துள்ளலுடன் - விளையாடி
கனியாக அம்பெய்து கணக்காக இணைந்து

விந்துள்ளே சென்றதும் வீரனாய்த் தேடி
சந்தமும் பாட்டும்போல சங்கமம் கூடி
திங்களாய் சேர்ந்தத் திரவியத்தை முத்தாக
ஆழியுள் சேர்த்து அங்கத்துள் வைக்கும்

அன்று முதல் குடத்துள்  கருவாக்கி
அய்ந்தாவது வாரத்தில் அழகாக உருவாகி
பிஞ்சு விரலும் அவயங்களும் பேழைக்குள்-உருவாகி
நஞ்சுக் கொடியுடன் இணைந்து வளரும்

கொஞ்சும் குரலையும்க் குடும்ப உறவையும்
மஞ்சதுள்ளேயே மனதுள் இருத்தியும் கேட்க
பத்துமாதம் முன்னே பாசத்தோர் ஏங்க-பிள்ளை
பரவசம் பொங்க பாரினில் பிறந்திடுமே
 

Wednesday, 9 January 2013

மனச்சிதைவு ஏன்? விடுபட முடியுமா?

      மனச்சிதைவு எதனால் வருகிறது ? யாரால் வருகிறது ? எப்படி போக்க முடியும் ? இது ஒரு புரியாத புதிர் . பலரும் இம்மாதிரியான விஷயங்களில்  சீக்கிரம்  குழம்பி விடுகிறார்கள் அதனால் தங்களின் வாழ்வே பறிபோய்விட்டதாக எண்ணுகிறார்கள் இனிமேல் முடியாது என்னால் முடியாது எப்படி முடியும் என்பதுபோன்ற கேள்வியை தாங்களாகவே நினைத்து தவறான முடிவெடுத்து விடுகிறார்கள்

       இது தவறான நிகழ்ச்சியுமல்ல  இயல்பாக எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு .அதை அவர்கள் அணுகும் முறையில்தான்  மாற்றம் வேண்டும்..ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு குணமுண்டு எல்லோரும் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை  சிரிப்பதில்லை  உறங்குவதில்லை இது எல்லாமே மனம் சார்ந்த விஷயம்.இது தான் நம்மை நாமே வேறுபடுத்தி பார்ப்பதால் ஏற்படும் நிகழ்வு.முடிவு தருணம்.
 
         அணுகுமுறையை மாற்றிகொண்டாலே அத்தனையும் சரியாகிவிடும் பசி தூக்கம் ஏக்கம்போல  அத்தனையும் நடைமுறை நிகழ்வுகளே அதை எல்லோரும் எப்போதும் எல்லோருக்கும் ஏற்படும் நிகழ்வு என்றே எண்ண வேண்டும் .அப்படி மனதில் எண்ண தவறுவதால் ஏற்படும் மன மாற்றமே  மனசிதைவு என்று நான் நம்புகிறேன்.

        பெரும்பாலும் மற்றவரைப் பார்த்து அவர் சந்தோசமானவர்,வசதியானவர் ,தகுதியானவர் அவருக்கு அதிஷ்டம் என்று  தன்னைத்தானே தாழ்த்தி தனிமை படுத்திக் கொள்வதால்தான் பெரும்பாலும் நல்ல சந்தர்பங்களை இழந்து விடுகிறோம்.ஏன் நாமும் முயற்சி செய்யகூடாது முயற்சி என்பது தவறான விஷயமா? இல்லையே முயற்சியும்  முதிர்ச்சியும் இல்லாததாலே  பெரும்பாலான தோல்விகள் ஏற்படுவதுண்டு.

        தற்கொலைகள் அவமானங்கள் அச்சுறுத்தல்கள் எல்லாமே  இதன் எதிரொலியால் ஏற்படுவது,இது அவசியமான முடிவா? இதனால் ஏற்படும்  எதிர் விளைவுகளென்ன  என்பதை சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் இதுதான் மற்ற உயிரினங்களிளிருந்து நம்மை வேறுபடுத்தி காண்பிக்கிறது சிந்திக்க முடிகிறது , செயல்பட முடிகிறது.மாற்றம் என்ற தாரக சொல்லுக்கு எத்தனை  சக்தி உள்ளது என்பதை மாற்றி யோசித்துபாருங்களேன்.
 
       ஒவ்வொருவருக்கும் சமூகக் கடமை என்பது பொதுவானது .குழந்தையை தாய் வளர்ப்பதும் நல்ல படிப்பையும் அறிவையும் கொடுப்பது தந்தையின் கடமையெனவும்  பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டுமென்பதும்  அவர்களே வேலை தேடிக்கொள்ள வேண்டுமென்பதும் நல்ல வாழ்கையை வாழ வேண்டுமென்பது  எல்லோருக்கும் பொதுவானது, உங்கள் வாழ்கையை தீர்மானிப்பது உங்களின் மேல் வைக்கும் நம்பிக்கையே  அக்கறையே.

    .ஆம் எல்லோரும் தனிமனிதனுக்காக மட்டுமன்றி சமூகதிற்காகவும் வாழ வேண்டியுள்ளது. சமூகபொறுப்பு என்பது இயல்பானது நான் ஏற்கனவே சொல்லியதுபோல வளர்ப்பதும் அறிவுறுத்துவதும் படிப்பதும்அவசியம் என்பது போல நமக்கும் சமூகயும் கடமை உள்ளது .இதுதான் மனித
கோட்பாடு ஏன் உயிருள்ள அனைத்து  ஜீவனுக்கும் இதுதான்  செய்கையாகும்

     நாம் செய்ய தவறும் செயல்களே பின்னாளில்  மன உளைச்சலை ஏற்படுத்திவிடுகிறது.இதுபோல பல விஷயங்களில் ஏற்படுத்திக்கொண்ட தவறான முடிவினால் காரணத்தால் செய்கையினால் மனச்சிதைவு காரணமாகிறது.எல்லோருக்கும் இதுபோண்ற தருணங்கள் நிகழ்வதுண்டு.
எப்போது  கோழைத்தனமான முடிவு  செய்கிறோமோ அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை உணரவேண்டும். மனைவி பிள்ளைகள் பெற்றோரும் வருத்தப்படுவார்கள் கஷ்டப்படுவார்கள் நிம்மைதி இழப்பார்கள் பாதிப்படைவார்கள் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

       தீர்வென்ன? முடிவென்ன ? எல்லாமே முடியும் நீங்கள் நீங்களாகவே உங்களுக்காக நீங்களாகவே  யோசித்தால் எல்லாமே  நன்மையாக முடியும் .
அப்படியில்லையெனில்  உங்களின் பெற்றோர் உறவினர்   மனைவி  ஏன் உங்கள் பிள்ளைகள் கூட உங்களின் பிரச்சனைகளுக்கு அழகாக விடை சொல்லுவார்கள் ,இம்மாதிரியான நேரங்களில் யாரையும் உதாசீனம் செய்யகூடாது .கேட்டுத் தெரிந்தால்  தவறில்லை.அப்படியும் தீர்வு கிடைக்க வில்லையெனில் இறுதியில் மருத்துவரிடம்  சென்று உண்மையை சொல்லி  சரியான ஆலோசனையுன் தீர்வு காண முடியும்.

     வாழ்க்கை என்பது நம்பிக்கையின் உடன்பாடே ,வாழ வேண்டுமென்றால்  உங்கள்மேல் நம்பிக்கை வையுங்கள்  உங்களால் முடியும் என்பதை நீங்கள் உண்மையாய் நேர்மையாய் துணிவாய் யோசித்தால் எல்லாமே முடியும் .முடியும் என்ற முடிவே உங்களை இறுதியில் ஜெயிக்க வைக்கும் .உறுதியான இறுதியான சமூக அக்கறையுள்ள முடிவு நிச்சயம் உங்களைக் காப்பாற்றும்.

      மனதை ஒருநிலைப்படுத்த யோகாசனம்,தியானம்,மன அமைதிக்கான பயிற்சி ,நண்பர்கள் மருத்துவ உதவி போன்றவைகளாலும் உங்களை இச்சிதைவிலிருந்து காப்பாற்றும். அல்லது  மலைப்பிரதேசம் கடற்கரை,நல்ல காற்றோட்டமான இயற்கை எழில் சூழ்ந்த இடங்களும் மன அமைதி தரும்.ஆனால் எல்லாமே உங்கள் கையில் வாழ விரும்பினால்  நீங்கள்தான் தெளிவான தீர்க்கமான நம்பிக்கையான முடிவெடுக்க வேண்டும் .உங்கள் வாழ்க்கையை  நீங்களே மனநிறைவோடு வாழுங்கள்.

Monday, 7 January 2013

இளம் வயதிலேயே இன்னலை தீண்டியவளே !

இளம் வயதிலேயே
இன்னலை தீண்டியவளே !

இதற்காகவா பிறந்தாய்
இவ்வளவுநாள் வளர்ந்தாய் !

உனக்காக வாழ்ந்திடு
 உணர்ச்சியை பகிந்திடு !

ஒரு  வருடஇன்பம்
ஒருவருக்கும் திருப்தி இல்லை

கணக்காக நடந்தால்
கண்ணியத்தில் குறையுமில்லை

பிறரருக்காக பார்க்காதே
பிறருக்காக வாழாதே!

இளைமை  என்பது
இன்றைய நாள்தான்

இனிமை என்பது
இளமைக்கும்  தேன்தான்

இன்றைய வாழ்வை
இனிமையாக்க  முயற்சி செய் !

இப்போதும் தப்பில்லை
இனிசொல்ல வழியில்லை

மாண்டு  போனவனுக்காக
மீண்டும் தப்பு செய்யாதே !

கோழைக்காக நீயும்
கேள்விக்குறியாய்  இருந்திடாதே !

நீ தான்  நீதிபதி
நின் வாழ்க்கைக்கு அதிபதி

மறுமணம் தப்பில்லை
மறுவாழ்வு கசப்பதில்லை

உருவாக்கு   புதுயுகம்
உனைபோற்றும் இந்த உலகம்

துணிந்திடு செயல்பாடு
துயரத்தை வென்றிடு !!!

Sunday, 6 January 2013

தற்கொலைத் தண்டனை யாருக்கு?

எண்ண கனவினில்  நாளும் வடிவமைத்து
எத்தனையோ சிந்தனையை முன் நிறுத்தி
அத்தனையும் வண்ணமாய் உருக்கொடுத்து-அன்பாய்
சித்தனாக சிலைபோல நெஞ்சில்  வளர்த்தார்கள்

சிறுஎறும்பும் சீண்டாது பார்த்திருந்து
சிறிய வயதிலே  செம்மையாக நகையணிந்து
உரிய கல்வியையும் உடன் கொடுத்து-ஊர்பேச
பருவ வயதையும் பார்த்து பூரித்திட்டார்கள்

தெருவோரம் நின்று தினமும்  ரசித்து
தினம்தோறும் உணவும் விரும்பிய தீனியும்
மனம்கோனது மகிழ்ச்சியாய் திணித்து-அன்றாடம்
அகமெல்லாம் அன்பொழுக நாளும் பார்த்தார்கள்

இளமை பருவத்திலே எத்தனையோ  கற்று
எளிமை பண்பையும் சொல்லி கொடுத்து
வளமையாக்கி வடிவமைத்து  வாழவேண்டி-நலம்கான
கிழமை தோறும விரதமும் இருந்தார்கள்

இத்தனையும் செய்தும் இழி மனதில்
பித்தனாய் மாறி  பிறள் புத்தியால்
தத்துவம்  பேசி தவறான முடிவை-மனமொடிந்து
சத்தியம் தவறி சாகமட்டும் துணிந்ததால்

புரியவில்லை எனக்கு புதிரோன்றும் அறியவில்லை
புரிந்தவரையும்  காக்க பொருளேதும் சேர்க்கவில்லை
மடையனே மன்னிக்கமுடியாத இடையனே-விடையடைய
மனம்திறந்து  சொன்னாயா மனிதனாக நின்னாயா

மதி  இழந்தோரே  மனபயம்  கொண்டேரே
விதி முடியவில்லை வீணான எண்ணத்தால்
சதியாக சமூகத்தில் கேடாக செய்திட்ட-சண்டாளனே
சாதித்தது என்ன சாக்கடை எண்ணத்தால்?

இதுபோன்ற செய்கையால் எண்ணற்ற உயிர்கள்
இழிவான  பாதைக்கு இடர் தெரியாமல்
மலிவான செய்கையால்  மனம்கெட்டு-தவறாக
மனமுடைந்து  மதிகெட்டு  விதியென்று  சாகிறார்கள்

நஷ்டம் யாருக்கு ? நம்பியோற்கும் தண்டனையா?
கஷ்டமெல்லாம்  வந்ததால்  கடமை மறந்தாயே?
பெற்ற  பிள்ளைக்கு பிரச்னை  வேண்டுமா?-கஷ்டமெல்லாம்
உற்ற துணைவிக்கும் உன்னை வளர்த்த பெற்றோருக்கா?

மனிதனாக இரு  மனிதத்தை  மகிழ்ச்சியாக்கி
மதியோடும் மதிப்போடும் மன தைரியத்தோடும்
புனிதனாக வாழ்ந்து பார் புகழோடு வாழ்த்துவார்-அகிலமே
இனிமையாக ஏற்று எல்லோரையும் போற்றுSaturday, 5 January 2013

இணைந்து வா இறுதி காலத்திலாவது


அன்னைத் தமிழ் நாட்டிலே அன்பாய்
அப்பன் பிள்ளைகள் உறவிழந்து தினம்
துஞ்சுகின்ற நாளை எண்ணித் துயர்-இறுதியில்
தொண்டையைக் கம்ம செய்து  தொடருதே

நடை பயில திறன் மறந்து
நடப்பதற்கு துணை யழைத்து
வளர்த்திட்ட பிள்ளையும்  மறந்து-வாழ்வில்
கிடைத்திட்ட நட்புகளும் இறந்தும்


பஞ்சமில்லை பணம் பொருளுக்கும்
எஞ்சி நின்ற சொத்து மிழந்தும்
தஞ்சமென கிடைத்திட்ட இல்லமே-எனக்கு
மஞ்சமென நான் கிடந்து  மடிவேன்

எந்தன் நண்பர்கள் எல்லோரும் சென்றும்
பந்தமுடன் பாசம் கேட்கும் எனக்கு
தரும்  கடைசி பாலும் கொடுக்க -தவறும்
பிள்ளைகளால் இந்தநிலை ஏன் இறைவா

ஏழுகடல்  தாண்டி என்ன பயன் ?
ஏழுலகம் போற்றி என்ன பலன் ?
படைத்தோரை மறந்த பாவிகளே-உனக்கும்
கிடைக்காதோ நாளை இந்த நிலை

சொந்தமும் சுற்றமும் பெற்றோரு மின்றி
இந்தநிலை  பலர் இழித்தும்  வாழ்வா?
பந்தம் பாசம் பண்பாட்டுடன் நேசமும்-தமிழ்
எந்தம் பண்பென விரைந்து வா

அன்னை தந்தையின் அன்பு வார்த்தையில்
அழகு தமிழின் நல்ல கருத்துக்களை
உன் பிள்ளைகள் மகிழ்ந்து கேட்க - எங்களோடு
இணைந்து  வா இறுதி காலத்திலாவது

Thursday, 3 January 2013

பேரழகி வட்ட நிலவு


 பேரழகி வட்ட நிலவு

ஊரெல்லாம் காணாது 
உன்னை நான் மறைத்திருக்க
உள்விளக்கு எரியாமல்
உன்னோடு சேர்ந்திருக்க

பாரெங்கும் சுத்திவரும்
பேரழகி வட்டநிலவும்
பார்த்து விட்டு போகாமல்
பைந்தமிழ்லாய் பார்பதேனோ

நீ  விடும் முச்சு
நிம்மதியை கெடுபதாலோ
நிலவுக்கே போட்டியாக
நின்னலகை கண்டதாலோ

மான் கூட்டமெல்லாம்
மறுபடியும் பார்க்கவேண்டி
மயிலிறகு தோகையுடன்
மறைந்திருந்து காண்பதேனோ

மலர்படுக்கை மஞ்சத்தில்
பஞ்சனையும் மெதுவாக
கொஞ்சனைக்க  வேண்டியே
கெஞ்சுதடி வஞ்சியே

வீண் பேச்சு பேசாமல்
விடியும்வரை உறங்காமல்
நானுன்னை பருகிடுவேன்
நல்லிரவு விடியும்வரை

ஊர்பார்த்து வந்தவுடன்
உள்ளவர்கள் ஆசியுடன்
பார்போற்ற உன் கை
பற்றிடுவேன்  நங்கையே

தனக்கு மிஞ்சியது பின் தானமும் தர்மமும்

தனக்கு மிஞ்சியது பின் தானமும் தர்மமும்

         தர்மம் பண்றேன் பேர்வழி என்று தனது தேவைக்கில்லாமல்  அடுத்தவருக்கு கொடுப்பது  என்பது ஏமாளித்தனம் என்று நான் சொல்லுவேன்.முதலில் தனது தேவைகளும்,தனது குடும்பத்தினர் தேவைகளையும் அறிந்து பூர்த்தி செய்துவிட்டு அதன்பின் அடுத்தவரை பற்றி யோசிப்பதுதான் உண்மையும் சிறந்ததுமாகும்.அதற்காக கொடுக்க கூடாது என்று சொல்லவில்லை .

        முதலில் தனக்கு தேவையானதை அதாவது தன் குடுபத்திற்கும் சாப்பாட்டு செலவு,பிள்ளைகளின் கல்விக்கான செலவு வீட்டு வாடகை, மற்றும் பிற தேவையான அத்தியாவசியமான செலவுகள் போக சேமிப்பும் முதலீடுட்டுக்கும் ஒதுக்கியது போக செய்வதுதான் இன்றைய சூழ்நிலையில் புத்திசாலிதனமென சொல்லுவேன். 

       தகுதிக்கு மீறி தானமோ தர்மமோ செய்தால் அதன்பின்  தானம் செய்யும் நிலையை இழப்பான் பின் அவனுக்கே உதவி செய்ய ஆளில்லாமல் அடுத்தவரை எதிர்பார்த்து இருப்பான்  அப்படி பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சும் அதனால் வேதனையும் மன உளைச்சலுமே இருக்கும்

      அதற்குப்பின் அவனே ஏன் செய்தோம் என்ற நிலையில் என்னிடம் இருக்கும்போது எவ்வளோவோ யார் யாருக்கோ கொடுத்தேன் இன்று என்னிலையரிந்து யாரும் உதவிட முன் வரவில்லையே என்ற ஆதங்கம் கோபமாகி  எல்லோரையும் சபிக்கும் நிலை ஏற்படும் .

      ஆகவே தனமும் தர்மமும் அவசியமாக இருந்தாலும் தன் சூழ்நிலை செலவுகளை கருத்தில் கொண்டு மீதமுள்ளதை கட்டாயம் சிறிதளவாவது தானமும் தர்மும் செய்திட வேண்டும். இதில் பணமாக கொடுப்பதைவிட பொருளாகவோ உணவாகவோ கொடுப்பதே சிறந்தது என்பது எனது கருத்து..
 
       இன்றைய நாட்களில்  உள்ள நடைமுறையில் அவ்வாறு தானம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது காரணம் ஏமாமற்றுப்பேர்வழிகள் அதிகமாகி விட்டதாலோ என்ற ஐயப்பாடும் உள்ளது.
சுயநலமிக்க வாழ்க்கைக்கு  இதுதான் காரணமோ?