Sunday, 31 March 2013

நண்பனே திரும்பி வா


நண்பனே நண்பனே நலமா
நம்மூரில் எல்லோரும் நலம்
நாடுகடந்த நம் நட்பு
நாதியத்து போனதாலே

வீதியெங்கும் பேசுகிறார்
வேதனையாய் சொல்லுகிறார்
சோதனையான நட்புக்கு-ஆறுதல்
சொல்லும்படி இல்லையே

காடுக் கம்மாய் சுத்தியது
கிணத்துக்குள்ளே மூழ்கியது
திருட்டு மாங்காயும் புளியும்
திரும்பவும் உண்ணத்தோணுது

நம்மூரு உணவுக்கு
நானிங்கே அடிமை
நண்பன் நீ சென்றதாலே
நாக்கும்கூட தனிமை

ஏக்கமாய் உள்ளது
எப்போது நீ வருவாய்
இருவருமே இங்கே-உழைக்க
இணைந்தே செல்லலாமே


சுற்றமும் நட்பும்
சூழ்ந்து வாழ நீ வா
உற்றதுணை எல்லோரும்
உடனிருக்க திரும்பி வா

+++++++கவியாழி+++++++Friday, 29 March 2013

தோல்வியில்லைத் தொடர்ந்திடு

அழுகின்ற குரலென்றும்
அடங்காமல் முடியாது
அடக்குமுறை எந்நாளும்
அறவழியாய் ஆகாது

துடிக்கின்ற உயிரென்றும்
துணையின்றிப் போகாது
துன்பமே எல்லோர்க்கும்
வழித்துணையாய்  மாறாது

விழுகின்ற நொடிஎல்லாம்
விரல்துடிக்க மறவாது
விழுந்தாலும் மனதால்
வீழ்த்திவிட முடியாது

தோற்றதாய் சொன்னாலும்
துவண்டுவிட முடியாது
தோல்வியை தொடர்ந்தவன்
வெற்றிபெற தடையேது

மீண்டும் மீண்டுமென
மகிழ்ச்சியாய் துவங்கிடு
தாண்டுமுயரம்த் தடுத்தாலும்
தோல்வியில்லைத் தொடர்ந்திடுThursday, 28 March 2013

பெத்தவங்களை போற்றுங்க
கற்றதனால் மறக்குமோ
பெற்றோரின் கடமைகள்
காசுக்கெங்கும் கிடைக்குமோ-அன்பு
கடையிலும் கிடைக்குமோ

கனிவுடனே பேர்சொல்ல
கண்குளிரப் பார்த்திருக்க
மீண்டும் வந்து பிறப்பாரா
மகிழ்ச்சியோடு அழைப்பாரா

மற்றவரும் நினைப்பாரோ
மகிழ்ச்சியாக சிரிப்பாரோ
உற்றாரும் வாருவாரோ
உடனிருந்து பார்ப்பாரா

கருவுற்ற நாள்முதல்
கண்ணுறக்கம் பாராமல்
உருவாக்கி வளர்த்தாரே
உதிரத்தை உணவாக்கி

பெத்தவங்களை போற்றினாலே
பேரிண்ப தடையேது  மகிழ்ச்சி
பெற்றதனால் பிள்ளைகளின்
பெருமைக்கு வேறென்ன புகழ் ஈடு


Wednesday, 27 March 2013

பட்டகாலில் படும் கெட்டகுடி கெடும்

              பட்டகாலில் படும் கெட்டகுடி கெடும்

                                                             ***********


"பட்டகாலில்படும் கெட்ட குடி கெடும்" இது பழமொழி என்பது எல்லோரும் அறிந்ததே .ஆம் நண்பர்களே  நேரத்தில் இந்த பழமொழியை  பொருத்தமான தருணத்தில் நினைவுறுத்துகிறேன்.நமது தமிழ்ச்  சொந்தங்களை இழந்து தவிக்கும் நம் மக்களின்மீது மீண்டும் குற்றம் சுமத்தி கொல்லும் செயலுக்கு நம்மினத்தவர்களே துணைபோகலாமா? நம் தமிழ் மக்ககளே குடிகெட்டு கஷ்டப்படுகிறார்கள் 

நம்மைக் கெடுத்து நம்மவரையே கொன்று இன்று நம் நாட்டில் நல்லவர்போல் 
நடிக்கும் திறமை யாருக்கு வரும்  அரசியல் என்ற போர்வையில் ஆளுக்கொரு நியாயம்  அவசியமா ? தகுமா?அதிலும் தமிழனே சாதனைப் படைக்கிறான்.
மற்ற இனத்தினர் வேடிக்கைப் பார்க்க நம் மக்களே சண்டை போட்டுக் கொள்ளும் கொள்ளும் போக்கு தேவைதானா?

இன்றைய சூழலில்சொந்தங்களை இழந்து சொத்துக்களையும் இழந்து தவிக்கும் நம் மக்களுக்கு உதவ முன்வராதவர்களே நம் மக்களைப் பழித்தும் இழித்தும் பேசும் நிலை தேவைதானா ? அரசியல் ரீதியான போராட்டத்திற்கு அரசியலே தீர்வே அன்றி இத்தனைபேர் உயிர்துறக்கும்  இழிநிலைக்கு துணை புரியும் கொடுமை எங்கேனும் உள்ளதா? 

எத்தனை உயிர்கள் ஏதுமறியா நிலையில் எண்ணிலடங்கா குழந்தைகள் பெரியவர்கள் என்ன  தவறிழைத்தார்கள்.உயிர்பிழைக்கவேன்டியே ஒளிவிடம் தேடியவர்களை  கொத்துக் கொத்தாய் கொன்றது நியாயமா?போன உயிர் திரும்ப வராது ஆனால்  அந்த ஆன்மாக்கள் அவர்களைச் சும்மா விடுமா?

எல்லா மதமும் ,இனமும் கொலை,கொள்ளை  பாவம் செய்வதை  தவறென்றே  சொல்கிறது.ஆனால் நம்மினம் மட்டுமே அதையும் நியாயப்படுத்துகிறது.ஏன் இந்த முரண்பாடு அரசியல் பிழைப்புக்காக அம்மா.அப்பா,அண்ணன் ,தம்பி ,அக்கா,தங்கை போன்ற உறவுகளையே  இழந்தும் அதை நியாயப்படுத்துவது  சரியா? முறையா?

மீண்டும் மீண்டும் நம்மீதே பழிசுமத்தி நமக்குள்ளே ஒற்றுமையை  நசுக்கி காரியம் சாதிக்கும் கயவர்கள் நிச்சயம் உலக மக்களால் பழிக்கப்படுவார்கள் .அதன்பின் பாவத்தின் கொடுமையை நிச்சயம் அனுபவிப்பார்கள்,காலமும் மாறும் ஒருநாள் காட்சியும் மாறும் சற்றே சிந்திப்பீர் கொடுமையா?அரசியல் கோட்பாடா? நியாயமில்லையே

ஆம் தமிழா நமக்காக அப்போதே இந்த பழமொழியை சொன்னார்களோ .இப்போது நடக்கும் எல்லா நிகழ்வுகளுமே நம்மினத்தைக் கொண்டே நம்மையே அழிக்கும் இச்செயலுக்கு நம்மவர்களே  நம் மக்களையே  காட்டிக் கெடுக்கலாமா? எனவே சிதறுண்டு கிடக்கும் நம் மக்கள் மனதால் மேலும் சிதைக்கப் படாமல்  ஒற்றுமையாய் வாழ  மறுவாழ்வுக்கு உதவ வேண்டும்.

தமிழ்க் குடிக் கெடக்கூடாது  ஒன்றுபடுவோம் ...வெல்வோம்.... தமிழால் உயர்வோம் .

*** கவியாழி***
      சென்னை