Tuesday, 9 July 2013

காதல்...நெஞ்சம் மகிழ வென்றிடுமாம்....எல்லா வயது மனிதருக்கும்
என்றும் தொடர்வது காதலாம்
இல்லா நிலையில் உள்ளோர்க்கும்
இனிமைத் தருவது காதலாம்

ஏக்கம் கொண்டே எப்பொழுதும்
ஏங்கித் தவிக்கும் காதலாம்
தூக்கம் கெட்டும் தினந்தோறும்
துணையாய் நிற்கும் காதலாம்

சொல்லா மொழியில் உணர்ச்சிகளை
சொல்லித் தருவதும் காதலாம்
சொல்லே இன்றிப் பார்வையாலே
சொல்லும் மொழியும் காதலாம்

பார்த்த உடனும் வந்திடுமாம்
பழகிப் பேசியும் மகிழ்ந்திடுமாம்
பாசம் கொண்டே வளர்ந்திடுமாம்
பகைமை இல்லாக் காதலாம்

உண்மையை விரும்பும் காலமும்
உணர்ச்சியை தூண்டும் காதலாம்
உறவைவும் நட்பும்  வளர்வதற்கு
உரிமைமைச் சொல்லும் காதலாம்

காதல் நன்றே எப்பொழுதும்
காசு பணத்தைப் பார்ப்பதில்லை
காமம் இல்லா நட்புடனே
கடைசி வரையும் தொடர்ந்திடுமாம்

நேசம் அன்பு நட்புடனே
நிறமோ மொழியோ பாராமல்
நேர்மையான காதலே இறுதியில்
நெஞ்சம் மகிழ வென்றிடுமாம்Monday, 8 July 2013

சூரியனைக் காணவில்லை......

ஆஹா சூரியனைக் காணவில்லை 
அதனால் அற்புதமாய் இருக்கிறதே
சொற்பதமாய் சொல்ல இயலவில்லை
சுகமாகத்தான் இன்று விடிகிறது

வழியெங்கும் மழைத் துளிகள்
வானமின்றும் வாழ்த்தும் ஓசைகள்
துளித்துவரும் அந்த ஆசைகள்
துவக்கம்தான் எத்தனைச் சுகம்

அடிக்கடி என்னை வருத்தாதே
அடியேன் மனதைக் கெடுக்காதே
இடிக்குது நிலைமைக் கொல்லாதே
இளமையின் துடிப்பைக் கொடுக்காதே

எப்போதோ ஏற்பட்ட இளமையுணர்வு
இந்நேரம் அவசரமாய் ஏன்வந்தது 
தப்பேதும் இல்லைதான் ஆனால்
தயக்கம் மல்லவா வருகிறது

முப்போதும் மகிழ்ந்த நாட்கள்
முடிவின்றி தவிக்கிறதே முறையா
முன்பொழுதில் வருவது சரியா
முறையான இனிமை உணர்வா

மழையே மீண்டும் வா!வா!!
மகிழ்ச்சித் தொடந்துத் தா!தா!!
இனிமை யுணர்வேப் போ!போ !!
இரவில் மட்டும் ஹி!ஹி!!...


Sunday, 7 July 2013

அம்மா உணவகம்-தியாகராய நகர்


                அம்மா உணவகம்-தியாகராய நகர்

முகப்புத் தோற்றம்                                                         விலைப்பட்டியல்


 சுகாதாரமான முறையில் தயாரிக்கப் பட்ட பொங்கல் மற்றும் இட்லி சாம்பார்                   
             
                                  அனைவரும்  உணவருந்தும் இடம்

                                       மகிழ்ச்சியாய் சாப்பிடுபவர்கள்


                                           உணவு தயாரிக்குமிடம்
                                       சுகாதாரமான சுத்தமான குடிநீர்நான் கடந்த ஞாயிறு அன்று நடைபயிற்சிக்காக வழக்கமாக செல்லும் சென்னை  தியாகராய நகரிலுள்ள பனகல் பூங்கா சென்றிருந்தேன்.அங்கு எனது அன்பிற்குரிய நண்பர்.திரு.பெரியசாமி.(முன்னாள் வங்கி அதிகாரி) என்னிடம்
அம்மா உணவகம் பற்றி மிகப் பெருமையாகச் சொல்லிகொண்டிருந்தார்.அவர் சொல்வதைக் கேட்டதும் எனக்கும் ஆர்வமாய் இருந்தது.ஆனால் மனதில் அவ்வளவு சுகாதாரமும் தரமும் இருக்காது  என நினைத்திருந்தேன்.

அவர் எண்ணைக் கட்டாயப்படுத்தி சாப்பிட அழைத்துச் சென்றார்.நானும் அரை மனதுடன் சென்று  ஒரு பொங்கல் ஐந்து ரூபாய் ஒரு இட்லி ஒரு ரூபாய் என மொத்தம் பன்னிரண்டு ரூபாய் கொடுத்து இருவரும் வாங்கி அருகிலுள்ள உணவருந்தும் பகுதிக்குச் சென்றோம்.அங்கு என் நண்பர் இருவருக்கும் இரண்டு தம்ளர் சுகாதாரமான குடிநீர்  எடுத்துக் கொண்டு வந்தார்சாம்பாரும் தனியாக வாளியில் வைத்திருந்தார்கள் பின் இருவரும் உணவருந்தி மகிழ்ந்தோம்.எனது காலை உணவு இன்று ஆறு ரூபாயில் முடிந்தது

இப்போ என்ன சொல்லுறீங்க நான் சொன்னதெல்லாம் சரிதானே  என்று உடனே கேட்க நானும் நீங்கள் சொல்வது உண்மைதான். என்று ஒப்புக்கொண்டேன்
இவ்வளவு குறைந்த விலையில் தரமான உணவு கிடைத்தது மகிழ்ச்சியாய் இருந்தது.இதே உணவை உணவகத்தில் அதிக விலையில் இருந்திருக்குமென்று சொன்னார்.

இங்கு பலதரப்பட்ட மக்களும் வரிசையில் நின்று வாங்கி உண்டு மகிழ்ந்தார்கள்
என்பதை எனது படங்களே சாட்சி..ருசிக்கு இல்லாவிட்டாலும் பசிக்கு  ஏற்ற உணவே  என்பதில் ஐயமில்லை.இதை மற்றைய பகுதிகளுக்கும்விரிவு படுத்தினால் இன்னும் பலபேர் பயனடைவார்கள்
Saturday, 6 July 2013

வறுமைப் போக்கிட உதவுங்கள்....

காலைச் செய்திகள் படிப்பதில்லை
கடமை சீக்கிரம் முடிப்பதில்லை
வேளைதோறும் உணவையும் மறந்து
விழுந்தேன் வலையில்  தினந்தோறும்

முக்கிய நிகழ்வுகள் மறந்தாலும்
முகப் புத்தகம் பார்ப்பதாலே
முகமே பார்க்கா நண்பருக்கு
முதலில் வணக்கம்  சொல்லுகிறேன்

இடமோ ஊரோ தெரியாமல்
இளமை முதுமை அறியாமல்
இணைந்தே இன்றும்  நண்பர்களாய்
இனிதாய் பழகி வருகிறேனே

தலைமைப் பண்பும் வளர்த்திடவே
தகவல் இணைந்தே பகிர்ந்திடவே
தினமும் நடக்கும் நிகழ்வுகளே
துணையாய் நமக்கு கிடைக்கிறதே

வலையைத் தினமும் பாருங்கள்
வாழ்க்கை முறையை நாடுங்கள்
வறியவர் மாணவர் இல்லார்க்கும்
வறுமைப் போக்கிட உதவுங்கள்

Friday, 5 July 2013

மனிதம் போற்றி வாழ்ந்திடவே

மதமும் மொழியும் மக்களையே
மனிதம் போற்றி வாழ்ந்திடவே
தினமும் அதையேச் சொன்னாலும்
தீமைச் செயலைச் செய்வதுமேன்

பகைமை மனதில் வேண்டாமே
பார்க்கும் இடங்கள் எங்கெங்கும்
தகைமை இல்லா நிகழ்ச்சியால்-பகையே
தொடர்ந்து வளர்ந்து  வருகிறதே

உறவைக் கெடுத்து வருகிறதே
உள்ளம் சிதறி விடுகிறதே
பொறுமை இல்லா மனத்தையே-அது
பெரிதும் தாக்கி அழிக்கிறதே

இளையோர் முதியோர் எல்லோர்க்கும்
இப்படி நிலைமை ஆவது ஏன்
இயந்திர உலகில் இப்போதும்-தீர்க்க
இதனைப் போக்க மருந்தில்லையோ

தந்திரம் செய்து தவறிழைக்கும்
தரித்திரக் காரன் திருந்தினாலே
வந்திடும் வினைகள் தீருமே-மக்கள்
வாழ்கைவும் சிறப்பாய்  இருக்குமே

சிந்தனை இதனை செய்யுங்கள்
சிறந்ததை முறையே சொல்லுங்கள்
சிந்தும் ரத்தம் வேண்டாமே-வாழ்வே
சிறக்க  முனைந்தே வாழ்ந்திடுங்கள்

துயரம் கொள்ள வேண்டாமே
துணையாய் உறவை கண்டாலே
மனிதநேயம் போற்றினால்-பகைமை
மறந்துப் பாசம் வளர்க்கும்