Thursday, 31 October 2013

தித்திக்கும் தீபாவளித் திருநாள்

தித்திக்கும் தீபாவளித் திருநாள்
--------------------


எப்பொழுது விடியுமென்று எல்லோரும் காத்திருக்க
எல்லோரும் தெருவிலே பட்டாசு வெடிச்சிருக்க
குப்பென்ற இருட்டு கொஞ்சமாய் மறைந்திருக்க-சேவல்
கூவாமல் எல்லோரும் எழுந்திருக்கும் திருநாள்

ஏழைபணக்காரன் என்றதொரு வித்தியாசம்
எங்கும் இல்லாமல் மகிழ்ந்திடும் திருநாள்
காலைமாலை என்ற கணக்கு இல்லாமல் - மக்கள்
காசுசெலவழிக்கும் தீபாவளி ஒருநாள்

புத்தாடைக்கு புதுமஞ்சள் சாந்திட்டே அணிந்திட்டு
புதுநாளைக் கொண்டாட மாப்பிளையும் அழைத்திட்டு
வித்தாரம் பேசாமல் வீதியெங்கும் கூறாமல் -சண்டை
விநியோகம் செய்யாத தீபாவளி நன்னாள்

காசுபணம் கரியாக்க கடனாக வாங்கியும்
ஓசிப்பொருள் வாங்காமல் உழைத்தே வைத்திருந்து
புத்தம் புதிதாய் துணிகள் வாங்கி மகிழ்ந்தே -நாளை 
பெரிசு இளசுகளும் போற்றிடும் தீபாவளிநாள்

இனிப்புகளும் காரமும் இல்லாத வீடில்லை
இரண்டுமுறை தின்னாலும் இன்றுமே தப்பில்லை
நெருப்புடனே திரிந்தாலும் தப்பாக நினைக்காமல்-ஆசி
நெஞ்சார வாழ்த்துகின்ற தீபாவளித் திருநாள்

இந்துக்கள் அல்லாது எல்லோரும் ஒற்றுமையாய்
இந்தியத் திருவிழாவை  எல்லா நாடுகளிலும்
இல்லத்தின்  உறவுகள் ஒன்றாகச் சேர்ந்து-மகிழ்வாய்
இனிமையாய் கொண்டாட விரும்பும்நாள்

வருடத்தில் இந்நாள் வந்தோரை வரவேற்று
வாஞ்சையுடன் உணவளித்தும்  உபசரித்தும்
வாழ்கையிலே வேதனைகள் கோபமும் மறந்து 
வாழ்த்துக்களை எல்லோரும் பகிரும்நாள்(தீபாவளிப் பரிசுப் போட்டிக்காக)-----கவியாழி----

Wednesday, 30 October 2013

திரண்ட பாறையுமே தள்ளி

தினந்தோறும் மகிழ்ச்சியாய் ஓடி
திசையெங்கும் செழிக்க வைத்து
வனத்தையும்  வயலையும் காத்து
வானம் மகிழ  வந்தாய்

பலஊர்கள் மைல்கள்  தாண்டி
பாமரனும் மகிழ்வாய் வாழ
பரந்து விரிந்த பாதைவழியே
பகலிரவு ஓடிவந்து மகிழ்ந்தாய்

கிடந்த கற்கள் மலைகள்
கடந்தும்  உடைத்தே நடந்து
அடர்ந்த வனம் செழிக்க
அமைதியாக உருட்டிச் சென்றாய்

திரண்ட பாறையுமே தள்ளி
திருட்டுத் தனமாய் கடத்தி
வறண்ட இடத்திலும்  சென்று
வழியெங்கும் சமன் செய்தாய்

கண்குளிரக் காட்சி தந்த 
கடவுளாய் போற்றி வந்த 
தண்ணீரில் கடந்து வந்து
தவமாகக் காத்து நின்றாய்

சுரண்டலுக்கு ஆசைப் பட்ட
சுயநலக் காரர்களின் கண்ணில்
சூழ்ச்சிக்குத்  தப்ப மறந்து
சுரண்டி சுரண்டி மடிந்தாய்

தினந்தோறும் மணல் அள்ளியதால்
திசையெங்கும் வறட்சி வந்தே
பருவம் மாறிப் பகலவனின்
பார்வையால் பாமரனும் வருந்துகிறான்

நிலைமாறக் காரணம் தெரிந்தும்
நீயும் மௌனம் காப்பதேன்
நிம்மதியைக் கெடுத்தவரை ஏன்
நேரம் கொண்டே அழிக்கவில்லை

விலைபேசும் நிலைக்கே சென்றாயே
வேதனை வேதனையே  எமக்கு
விதியில்லை வீரமில்லைத் தடுக்க
வீணர்களின்  விலைவாசி நாடகத்தில்

>>>>>> கவியாழி <<<<<<Tuesday, 29 October 2013

மேல்சாதி நானென்று சொல்கிறான் ?

மெத்தப் படித்தவனும் பெருமையாய்
மேல்சாதி நானென்று  சொல்கிறான்
மேன்மக்கள் கீழ்மக்கள் உள்ளதென
மேடையிலும் பெருமையாய்ப் பேசுகிறான்

ஒத்த உள்ளங்களாய் இருந்தோரை
ஒரே வார்த்தையில் பிரிக்கின்றான்
ஊரேகூடி மகிழ்ந்தாலும் ஒருவனே
ஒப்பாரி வைக்கின்றான் நடிக்கின்றான்

உழைப்பதிலே ஒற்றுமையாய் இருந்தாலும்
உழுவதிலே சேர்ந்து மகிழ்ந்தாலும்
உத்தமனாய் சாதியை வளர்க்கிறான்
உதவாத காரியத்தைச் சொல்கின்றான்

சத்தியமாய் பேதமில்லை வாழ்கையிலே
சங்கடங்கள் குறைவில்லை  குடும்பத்திலே
சோத்துக்கும் கஷ்டமாக இருக்கின்றான்
சொந்தங்களும் மறுத்தே வாழ்கிறான்

இத்தனைக்கும் இருப்பது ஒரேஊரில்
இழவுக்கும் மகிழ்வுக்கும் செல்கின்றான்
இருந்தாலும் எப்போதும் சொல்கின்றான்
இவனெல்லாம் இன்ன சாதியென்று

எத்தனை நாள் இப்படியேச் சொல்லி
எல்லோரையும் பிரித்துப் பார்க்க
என்சாமியும் துணைக்கு வருகிறதோ
எல்லோரையும் பிரித்துப் பார்க்கிறதோ


.......கவியாழி........


Monday, 28 October 2013

அடுத்தநிலை ஏற்றமாய் இருக்கும்

நடுத்தர வாழ்க்கையே நரகமாக
நாட்டிலே பலபேர் வாழ்வதற்கு
நம்மில்  சிலரும் காரணமாம்
நாணயம் மறந்தும் இருப்பதனால்

கிடைக்கிற  ஊதியம் போதலை
கிடைத்தாலும் அன்றாட செலவுக்கே
கொடுத்தாலும் போதாது  மிஞ்சாது
கொடுமையே மிஞ்சும் தங்கும்

பிள்ளையின் நலன் கருதியே
பிணியையும் மறந்த நிலையில்
படிக்கவும் பயணமும் செய்ய
பணத்தைக் கட்டியும் மீதியில்லை

உற்றார் உறவுக்கும் உதவி
உண்மையில் செய்ய் முடியாது
மற்றோர் மதிப்பு வேண்டி
மடத்தனமாய் செலவு செய்யாதே

சோர்வின்றி மனம் தளராது
சோம்பலின்றி மிகுந்த கஷ்டப்படு
மிகுந்த வருமானம் மட்டுமே
மகிழ்ச்சியாய் வந்திடும் தங்கிடும்

அடுத்தத் தலைமுறை வந்திட்டால்
ஆனந்தம் வந்திடும் தந்திடும்
அதுவரை பொறுத்திடு படிக்கவை
அப்படிச்  சொல்லியே ஊக்கப்படுத்து

அவனுக்கும் வந்திடும் முயற்சியே
அப்புறம் கிடைத்திடும் மகிழ்ச்சியே
அதையார் தடுத்திட முடியும்
அடுத்தநிலை  ஏற்றமாய் இருக்கும்======கவியாழி=======
என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறதா?நான் 1980 ஆம் ஆண்டு  சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில்(Littel Flower Higher Secondary School) +2 படித்து  முடிக்கும்போது எனது வகுப்புத் தோழர்களுடன் எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம்.

முடிந்தால் என்னைக் கண்டுபிடித்து அடையாளம் சொல்லுங்களேன்
---------------------------------------------------------------------------------------------------------------------
பதில்
--------
மேலிருந்து இரண்டாவது வரிசையின் இரண்டாவதாய்  நிற்கும் கருத்த உருவமாய் ஒல்லியான ஏழ்மையின் அடையாளமாய்  தெரிபவன் நானே நான்.