Saturday, 30 November 2013

கடந்தும் செல்வது நலமோ.............

எத்தனைப் பெரிய மனிதர்கள்
எப்படி எளிமையாய் இருந்தே
சத்தியம் தவறா வழியில்
சமத்துவம் போற்றி  வாழ்ந்தே

நித்தமும் மகிழ்வாய்  உணர்ந்த
நேர்வழி நெறிமுறை வளர்த்தே
சித்தமும் சிவனுமாய்ப் போற்றிச்
சீராய்த் திருத்திச்.சொல்லி

குற்றமும்  தவிர்க்க வேண்டிக்
குறைகளைக் கண்டு களைந்தே
அப்பனும் பாட்டனின் வழியில்
அன்று வாழ்ந்ததைச் சொல்லி

சிற்பமாய் அறிவால் செதுக்கிச்
சீராக்கி நேர்வழியில் வாழ
அற்பமாய்ச் செய்யும் தவறும்
அறியச் சொல்லிக் கொடுத்தே

தப்பேதும் இல்லா வாழ்வை
தினமும் சொல்லி வந்தே
முப்போதும் மகிழ்ந்து வாழ
முறையாய் சொல்லி வாழ்த்தினர்

இப்போது நிலைமை இல்லை
இருப்பதோ நிலைமை  தலைகீழ்
தப்பதை உணர்ந்து வருந்தி
தகையோரை மதிப்போர் உளரோ

கற்பதை முறையாய் சொல்லாக்
கல்வியால் வந்த வினையோ
காலத்தை உணர்ந்தே நாமும்
கடந்தும் செல்வது நலமோ


Friday, 29 November 2013

கார்த்திகைக் குளிரில் காதல் .......

கார்த்திகைக் குளிரில் காதல்
கண்ணனின் அருகில் மகிழ்வாய்
காரிகைக் கூட்டமும் இணைந்தே
காத்திடும் காரணம் ஏனோ

பலரும் சூடாய் இருக்க
பருவம் மாறிய மழையும்
பாவையர் மனதும் இனிக்க
பயனாய் இருப்பதும்  தவறா

பூத்திடும் பூக்கள் கூட
பூவையர் தலையில் சூடி
புரியும் லீலைகள் காண
புகலிடம் தேடி வருமாம்

பூச்சிகள் ஒன்றாய் கூடியே
பூத்திட்ட மலர்களைக் கண்டு
போட்டிகள் நடத்திட வேண்டி
புதிதாய் ஸ்வரங்கள் தருமாம்

பூத்த  மலர்களைத் தேடி
புறப்பட்ட வண்டினைப் போல
புயலாய்க் கண்ணன் வந்தே
புதுமை அனுபவம் தருவான்

விலங்குகள் ஒன்றாய் அமர்ந்து
வேடிக்கை பார்த்தே சிரித்தே
வீதியில் ஆடி இன்பமாய்
விரும்பியே மகிழ்வாய்  இருக்கும்

இரவில் இன்றி பகலிலும்
இனிமை விரும்பும் இனங்கள்
இமையால் பேசும் கண்ணன்
இனிமை தருமே கார்த்திகை

[[[[[[[[ கவியாழி]]]]]]]]Thursday, 28 November 2013

சித்தன் அருளே வேண்டும்.........

சித்தன் அருளே வேண்டும்-தினம்
சிந்தனை செய்யவே வேண்டும்
நித்தமும் நினைக்க வேண்டும்-மனதில்
நிம்மதி கிடைத்திட வேண்டும்

சத்தியம் போற்றிட வேண்டும் -நல்ல
சங்கதி செய்திட வேண்டும்
பத்தியம் இருந்திட வேண்டும்-எனக்கு
பகலவன் துணையும் வேண்டும்

நேர்மையாய் வாழ்ந்திட வேண்டும் -அன்பை
நேசித்தே போற்றிட வேண்டும்
சீர்மிகு நட்பும் வேண்டும் -என்னை
சிரம்போல் காத்திடவேண்டும்

கஷ்டமும் தீர்ந்திட வேண்டும் -எல்லோர்
கவலையும் தீர்த்திட வேண்டும்
இஷ்டமாய்ச் சிவனை நினைக்கும் -நிலை
இனிதே நாளும் வேண்டும்

எல்லா  வளமும் பெற்று -வறுமை
இல்லா நிலையே வேண்டும்
பொல்லா எதிரியும் மாறி -மீண்டும்
நட்பினைத் தொடர்ந்திட வேண்டும்

கொடுத்து உதவி செய்ய-பணம்
குறையே இன்றி வேண்டும்
கொடுக்கும் மனமே எனக்கு-நாளும்
குறை வில்லாமல் வேண்டும்

குறைகள் அகன்றே தீர-மனம்
குளிர வணங்கிட வேண்டும்
குடும்பம்  மகிழ்ந்து வாழ-சித்தன்
கூடவே துணையாய் வேண்டும்


########கவியாழி########Wednesday, 27 November 2013

ஷேர் ஆட்டோ பயணம்......ஆபத்தா?ஆதாயமா?

இன்றைய விஞ்ஞான காலத்திலும் பலபேர் தங்களது கார்,பைக் போன்ற சொந்த வாகனங்கள் இருந்தாலும் பஸ்,ரயில் போன்ற போக்குவரத்து வசதி மிகுந்து காணப்பட்டாலும்  ஷேர் ஆட்டோவை பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்றே சொல்லலாம்.

ஷேர் ஆட்டோ கிராமத்திலும் சரி  நகரத்திலும் சரி  இதன் பயன்பாடு அவசியமான ஒன்றாய் விளங்குகிறது.பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள்,
அலுவலகம் செல்பவர்கள் காய்கறி சந்தைக்கும் செல்பவர்கள் ,கூலித் தொழில் செய்வோர்கள் ,மருத்துவமனைக்கும் செல்பவர்கள் போன்ற எல்லோரும் விரும்பும் அவசியம்  இந்தவாகனத்தைப் பயன்படுத்த தவறுவதில்லை.

இது பணத்தை மிச்சப்படுத்தவும் விரும்பிய இடத்தில் இறங்கவும் பயமின்றி அதிக மக்களுடன் செல்லவும் வசதியாய் இருக்கிறது..பஸ் வசதி இல்லாத இடங்களிலும்,நேரத்தை மிச்சப்படுத்தவும் மற்ற ஆட்டோக்களின் அதிக கட்டண வசூலைத் தவிர்க்கவும் இதன் பயன்பாடு மெச்சத்தகுந்த வகையில் உள்ளது. கிராமங்களில் எல்லோருமே உபயோகப்படுத்துகின்றனர்

அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக பயணிகளை ஏற்றுவதால்  பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.நெரிசல் அதிகமாகி இடவசதி குறைவாகவே இருக்கும் .ஆண்பெண் பாகுபாடின்றி இடநெருக்குதலில் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டும் உரசிக்கொண்டும்  மௌனமாகவே பயனிக்கவேண்டியுள்ளது.இருந்தாலும் குடிகாரர்கள் பான் போட்டும் ,
வெற்றிலைப் புகையிலை நாற்றத்துடனும் வருவோரைத் தவிர்க்க இயலாமல் இருக்கும்.

போக்குவரத்துத் துறையின் அனுமதியானது பயணிகளின் எண்ணிக்கை  மற்றும் ஓட்டுனரையும் சேர்த்து 3+1,7+1  என்று இருந்தாலும் அதையும் மீறி அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றுவதால் அங்கங்கே போக்குவரத்து போலீசார்,வாகன தணிக்கை அதிகாரிகளின் எச்சரிக்கையுடன்  அபராதமும் விதித்து  ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

சாலை விபத்துகளில் அதிக எண்ணிகையில் பாதிப்படைவது இம்மாதிரியான  ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கும் பயணிகள் தான். பெருபாலான ஓட்டுனர்களின்  பணதேவையினால் மக்களின் நலன் புறக்கணிக்கப்பட்டு சுயநலத்தால் அதிகப்பயனிகளை ஏற்றுவதால் விபத்துநேரத்தில் உயிர் உடமைக் காயம் போன்ற சேதாரம் அதிகமாகிறது.

விதிகளை மீறி ஓட்டுவது தெரிந்தும்  அவசியம் மற்றும் அவசரமாயும் சில நேரங்களில் பயனிக்கவேண்டியுள்ளது. காரணம் எரிபொருள் சிக்கனம் குறைந்த செலவு விருப்பமான இடத்தில் இறங்கவே இம்மாதிரிப்பயணம் வசதியாய் உள்ளது.சட்டப்படி தவறான பயணமானாலும் வசதிக்காகவும் இதில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாய் உள்ளது.


Tuesday, 26 November 2013

திருவாளர்.எஸ்.ரமணி .அவர்களின் சென்னை விஜயம்

திருவாளர்.எஸ்.ரமணி .அவர்களின் சென்னை  விஜயம் பற்றி திருமிகு.செல்லப்பா அவர்களின் விருப்பத்திற்கிணங்க நான் அவசியம் தெரிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

எனக்கு வியாழன் காலை பதினோரு மணியளவில் அலைபேசிச் சிணுங்கியது.நான் சென்னை வந்து கொண்டிருக்கிறேன் நீங்கள் முடிந்தால் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வாருங்கள் என்று  அன்பு கட்டளையிட்டார்
.( பெங்களூரில் இருந்தபோதே   சென்னை வருவது பற்றி சொல்லி இருந்தார்)

திரு.ரமணி அவர்கள் சென்னை வந்தால்  சொல்லுங்களேன் என்று திரு.செல்லப்பா அவர்களும் சொல்லி வைத்திருந்ததால் அவரிடம் தகவல் சொன்னேன்.அவர் உடனே ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலிருந்தாலும் சுமார் இரண்டு மணிக்கே மாம்பலம் ரயில் நிலையம் வந்துவிட்டார். இருவரும் அருகிலுள்ள ஏதாவதொரு ஹோட்டல் சென்று மதிய உணவை அவரோடு உண்ணலாமே என்று சொன்னார்.

சரியாக இரண்டுமணி முப்பது நிமிட நேரத்தில் திரு.ரமணி அவர்களும் வந்துவிட்டார்.மூவரும் மேற்கு மாம்பலத்திலுள்ள டாட்டா உடுப்பி ஓட்டலில்  (அப்போதுதான் ரமணி அவர்களைப் பார்த்ததும் ஒரு நடுத்தர வயது மங்கை ஆச்சரியப்படுத்தி விட்டார்.) உணவருந்தியப்பின் திருமிகு.புலவர்.ராமாநுசம்  அவரது  வீட்டை அடைந்தோம். புலவர் அய்யாவுக்கு ஆச்சரியம் என்ன இப்படி அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டீர்கள்  என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.


சிறிது நேரம் பேசிக்கொண்டிருத்தப்பின் எனக்கு அவசர அழைப்பு வந்ததால் நான் வெளியில் சென்று விட்டேன் .அய்யாக்கள் மூவரும் உரையாடி மகிழ்ந்தார்கள்..பின்பு மாலையில் அங்கிருந்து கிளம்பி விட்டோம்.அடுத்து திரு.பாலகணேஷ்  அவர்களையும் பார்க்க வேண்டுமென்றார்

பின்னர் எனது வீட்டில் கணேஷ் அவர்களின் வருகைக்காக காத்திருந்து கணேஷ் வந்ததும் மூவரும் சற்று பேசிக்கொண்டிருந்துவிட்டு மூவரும் தனித்தனியே சென்றது  இப்போதுதான் சொல்ல முடிந்தது.

தமிழ்க் குழும நண்பர்களே  நீங்களும் சென்னை வந்தால்  இங்குள்ள பதிவர்களிடம் தகவல் தெரிவித்தால் இதுபோல  இன்னும் சில பதிவர் நண்பர்களையும் பேசி மகிழலாம்.

வாருங்கள் சென்னைக்கு............


.......கவியாழி.......