Saturday, 7 December 2013

உடலும் கழிவாய் மாறும்...

உடலும் கழிவாய் மாறும்
உயிரும் பிரிந்து போனால்
உணர்ந்தே நாளும் வாழ்ந்தால்
உண்மை வாழ்க்கை  புரியும்

தூக்கி செல்ல நால்வர்
துவண்டே அழவும் சிலபேர்
தொடர்ந்தே வந்திட உற்றார்
தொலைத்த குடும்ப உறவோர்

வாழ்ந்த வாழ்க்கை  போற்றி
வாழ்த்தும் நண்பர் கூட்டம்
வணங்கிச் செல்லும் மக்கள்
வருந்தி அழைத்தால் வருமா

ஆக்கம் செய்த பணிகள்
அனைத்தும் முன்னே வருமாம்
அன்பால் செய்த செயலே
அருகில் நின்று அழுமாம்

ஏக்கம் இல்லா வாழ்வும்
ஏழ்மை உணரா உயர்வும்
என்றும் நன்மை செய்யா
எவரும் நம்மை மதியார்

தூக்கம் விழித்துப் பார்க்கத்
தோழமை வேண்டும் உலகில்
தொடர்ந்தே குழிவரை வருவோர்
துயரம் கண்டிட வேண்டும்

உயிரும்  உள்ள போதே
உரிமை  கொண்டோர் மகிழ
உணர்வை மதித்துச் செய்தால்
உடலும் மனமும் அழுமே

எல்லா உயிரும் இதுபோல்
ஏந்தல் செய்வது மில்லை
பொல்லா மனித இனமே
புரிந்தால் வாழ்க்கை நலமே


---------கவியாழி----------
Friday, 6 December 2013

எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால் ......

பாம்பும் தேளும் பூரானும்
பார்த்தே ஓடி மறைந்திடுமாம்
பகையாய் நினைத்தே அடித்தாலே-மிரட்டிப்
பயந்தே நம்மைக் கடித்திடுமாம்

வீம்பாய்க் காளையை மிரட்டினால்
விரைந்தே வந்து முட்டிடுமாம்
விலங்குகள் பலதும் அதுபோல-மிரண்டு
வீணாய் நம்மைத் துரத்திடுமாம்

வேண்டா வெறுப்பாய் பழகினால்
வேற்றுமை வந்தே பிரித்திடுமாம்
விஷயம் இன்றி வாதிட்டால்-முடிவில்
வீணே சண்டை வந்திடுமாம்

ஈன்ற  பொருளைக் காத்தாலே
இறுதி நாட்கள் மகிழ்ந்திடுமாம்
இல்லை என்றே சொல்லாமல்-இயன்றால்
இருப்பதைக் கொடுப்பதும்  நலமாகும்

சோதனை  துயரம் ஏழ்மையுமே
சாதனை செய்ய வழிதருமாம்
சோம்பலை நீக்கி உழைத்தாலே-பலனாய்
செல்வம் சேர்ந்தே மகிழ்ந்திடுமாம்

எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால்
எதிராய் காரியம் கெட்டிடுமாம்
எதிலும் பொறுமை  காத்தாலே-அதனால்
எல்லா நன்மையும் கிடைத்திடுமாம்


......கவியாழி........Thursday, 5 December 2013

அவளுக்கு இப்படி செய்வது ஆனந்தமா?கோபமா ?

ராத்திரி நேரத்திலே குளிருது
ரகசிய ஆசையும் தொடருது
போர்த்திக்கத் தோணுது தேடுது
போர்வைய பார்த்ததும் தோணுது

தனிமையை இப்போ வெறுக்குது
தலைவியைத் துணைக்கு அழைக்குது
இளமைக்குத் தேவையும் கிடைக்குது
இனிமையும் சிணுங்குது தொடங்குது

இதழ்களை வருடிட விரும்புது
இருவிரல் விலக்கிடத் துடிக்குது
இன்னும் அதிகமாய் இருக்குது
இமைகளும் ரகசியம் சொல்லுது

அணைத்திட்ட இடைவெளி குறையுது
ஆசையும் தொடர்ந்திடச் சொல்லுது
அவளுக்கு இப்படிச் செய்வது
ஆனந்தக் கோபமாய்த் தோணுது

அடுத்ததை மகிழ்ச்சியாய் முடித்ததும்
ஆசையும் அடங்குது முடிந்தது
வாழ்கையில் இன்பமாய் இருப்பது
வளமாய்ச் சேர்த்திடும் மகிழ்வன்றோ
Tuesday, 3 December 2013

மகிழ்வாய்ப் பாராட்டுங்கள்

           எப்போதும் எல்லோரையுமே மகிழ்வாய் பாராட்டுங்கள் அப்போதுதான் அவர்களின் செயல் அங்கிகரிக்கப்படுகிறதுப் பின்பே அவர்களுக்கு ஆனந்தம் கிடைக்கிறது.அதனால் செய்த செயலைச்  சீர்தூக்கிச் சிறப்பாய் செய்தோமா இல்லை  இதைவிட இன்னும் சிறப்புறச் செய்யலாமா என்ற சுயப்பரிசோதனைச் செய்ய வாய்ப்புக் கிடைக்கும்.

             சிறுபிள்ளைகளும் சரி,மாணவர்களும் ,நம்முடன் வேலைசெய்யும் சக ஊழியர்களும் .பழகும் நண்பர்களும் அல்லது வயதில் மூத்தப் பெரியவர்களும் சரி இம்மாதிரியான அங்கிகாரத்தை எதிர்பார்பார்கள் அல்லது செய்த செயல் அவர்களை எப்படி மகிழ்வித்தது என்று நினைத்து  பாராட்டியதை எண்ணி மகிழ்வார்கள்.

           ஒருவர் தான் செய்யும் செயலில்விருப்பப்பட்டோ  மனம் ஒன்றியோ அல்லது செய்யவேண்டிய கட்டாயத்திலோ செய்யும்போது பாரட்டுக் கிடைக்குமேயானால் அதைவிட ஆனந்தம் இருக்காது.ஒவொரு செயலுக்கும் ஒவ்வொருமுறையும் பாராட்டுக்கிடைக்கும்போது நிச்சயம் மனம் மீண்டும் மீண்டும் செய்யும் உத்வேகத்தைத்தரும்.

          உதாரணமாய் ஒரு அவசர அவசியமான வேலைக்காக வெளியூர் சென்று வரவேண்டும் என்ற கட்டாயம் வருகிறது விருப்பப்பட்டோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ சென்றுதான் வரவேண்டும் என்ற சூழ்நிலையில் புறப்பட்டு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியதும் அட இவ்வளவு சின்ன  வேலைக்காகவா சிரமப்பட்டோம் என்று எண்ணத்தோன்றும். அதற்குப்பின் அனுப்பியவர் கொடுத்த பாராட்டு பயணக் களைப்பையே மாற்றும் சந்தோசமே மிஞ்சும்.

         மாணவர்களுக்கு எப்போதுமே வீட்டுப்பாடம் செய்வதானால் உடனே செய்ய விரும்பமாட்டார்கள் ஆனால் சீக்கிரம் முடித்தால் நாம் வெளியே செல்லலாம் என்று சொன்னவுடன் விறுவிறுப்பாக சுறுசுறுப்பாக  சந்தோசமாய் செய்து முடிப்பார்கள்.அதுபோலவே மதிப்பெண் பட்டியலைக் கொடுத்தவுடன் ,நீ நல்லாத்தான் செய்திருப்ப உன்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சொல்லிப்பாருங்கள் உடனே அடுத்தமுறை இன்னும் நிறைய மதிப்பெண் வாங்குகிறேன் என்று பதில் சொல்லுவார்கள்.எனவே நீங்கள் கொடுக்கும் ஊக்கமே இன்னும் சிறப்பாய் மதிப்பெண் கிடைக்க எதுவாய் இருக்கும்.

         மனைவியிடம்  சின்னச்சின்ன விஷயங்களுக்கும் பரவாயில்லையே முன்பைவிட இப்போது இன்னும் சிறப்பாய் இருக்கிறது ஆனால் கொஞ்சம் உப்பு மட்டும் தூக்கலாய் இருக்கிறது என்று சொன்னவுடன்.மகிழ்ச்சியடைவார்கள்.
எல்லா வீட்டுத் தலைவிகளும் வெளியில் சாப்பிட விரும்பமாட்டார்கள் காரணம் அதிக செலவும் அதே நேரம் சுவையும் இருக்காது  என்றும் அவர்களே முன்வந்து வீட்டிலேயே சமைத்துத் தருகிறேன் என்று சொன்னதும் நீ சொல்வதும் சரிதான் இந்தசெலவை நாம் வெளியூர் சுற்றுலாவுக்கு  வைத்துக்கொள்ளலாம் என்றால் மிகவும் மகிழ்வாய் இருப்பார்கள்.

           அடுத்தநாள்  பயண பட்டியலே முன்வைத்து எங்கெங்கு செல்லலாம் தங்கலாம் என்ற எல்லா விபரங்களும் நமக்குத் தருவார்கள்.நமக்கும் அவர்களின் விருப்பமறிந்து செல்வோமேயானால் நமக்கு வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்.ஒவ்வொரு இடமும் வரும்போது அதன் சிறப்புகளைச் சொல்லி  உற்சாகமாய் இருப்பார்கள்.நம்மையும் மகிழ்வாய் வைத்திருப்பார்கள்.

           இங்கு நாம் விட்டுக்கொடுக்கும் எல்லா விஷயங்களும் மற்றவரை சந்தோசமடையவே செய்கிறது  அதனால் நமக்கும் காலம் நேரம் தவிர்க்கப்பட்டு இருவருக்குமே இன்பத்தையும் நெருக்கத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.எனவே ஒவ்வொருவரும் நமக்கு அருகிலுருப்பவர்களைப் பாராட்டுக்கள் நீங்களும் மகிழ்வாய் இருக்க உதவும் எனவே எப்போதுமே மகிழ்வாய்ப் பாராட்டுங்கள்
     
       
----------கவியாழி----------Sunday, 1 December 2013

கருவைச் சுமந்தவள்

கருவைச் சுமக்கச் சொல்லி
கடனாய்த் தந்தவன் ஒருவன்
கருவே உருவாகி வளர்த்தும்
கடமை என்றே கொடுத்தால்

உடமைப் பொருளும் பிடுங்கி
உணவாய்த்  தின்பவள் ஒருத்தி
உரிமை  கொண்டாடி மகிழ
உடலைத்  தந்த அவனும்

உயிரைக் கொடுத்தும் மயங்கி
உற்றார் மறுத்த பிள்ளை
பெற்றோர் கடமை மறந்து
போதையில் வாழ்தல் முறையா

இதனை எல்லா மதங்களும்
இழித்தே கூறி வந்தாலும்
எப்படி மகிழ்ந்து வாழ்வாய்
ஏனோ மறந்தாய் இகழ்வாய்

மனிதன் மட்டும் இதனை
மறந்தே வாழச் சொல்லும்
கடமை துறக்கச் சொன்ன
கடவுள் உண்டா மகனே

...............கவியாழி..........