Friday, 31 January 2014

மனமே மீண்டும் வருந்தாதே.......

மகிழ்ச்சியில் திளைக்கும் மனமே
மகிழாதோர் இல்லை தினமே
நெகிழ்ச்சியாய் இருப்போர் சிலரே
நெஞ்சுருக மகிழ்வோர் பலரே

நேசிக்கத் தெரியா மனிதன்
நேசமற்ற மனிதன் உள்ளத்தில்
நாளும் தாவும் குரங்கு-மனிதன்
நிம்மதி மறந்த விலங்கு

காணும் காட்சிகள் அவலங்கள்
கண்டும் காணா உள்ளங்கள்
தேசம் தோறும் சண்டைகள்-மனிதமே
தேடிக் காணா உண்மைகள்

வெறுமையான மனித உள்ளம்
வேதனையில் தவிக்கும் இல்லம்
வீண்பேச்சு சந்தேகம் விவாதம்-இன்று
விதியல்ல இது மெல்லோர்க்கும்

பணமில்லை சிலருக்கு வாழ
குணமில்லை கொடுத்துமே உதவ
தினம் வருகின்ற தேவையே-என்றும்
தீராத ஆசை நோயே

மனமே மீண்டும் வருந்தாதே
மனிதனின் நிலையால் கலங்காதே
குணமே இதுவென வழுவாதே-எல்லா
குறைகளும் தீர்த்திடும் உணர்ந்தாலே


(கவியாழி)

Tuesday, 28 January 2014

சாலை விதியை மதிப்பீரே

       நவநாகரீக மாற்றத்தில் மக்களின் பொருளாதாரம், வாழ்க்கை வசதி ,
கல்வி,சுகாதாரம், வேலைவாய்ப்புகள் மற்றும் வாகனத்தின் பயன்பாடு தவிர்க்க முடியாமல் அனைவருக்கும் வாகனம் அவசியம்  என்ற நிலையாகிறது.நமது நெடுஞ்சாலைகளும்  நல்ல தரத்துடன் மாறி நல்லதாக இருந்தாலும் அதனால் ஏற்படும் கெடுதல்களையும் நாம் அனைவரும் உணரவேண்டும்


 இன்று எல்லோருமே பெரும்பாலும் சாலை விதிகளை கடைபிடிக்கிறோம் ஆனாலும் சில நேரங்களில் விபத்து நடப்பதை தவிர்க்க இயலாமல் போகிறது.இங்கு  குற்றம் குறைகளை தவிர்க்க ஒவ்வொரு தனி மனிதருக்கும் சாலையின் பயன்பாடு அவசியம் பற்றித் தெரிந்திருந்தாலும் அவசரம் என்ற அலட்சியத்தால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க முன்வரவேண்டும்.சாலைவிதிகளை அறிந்தும் தவறிழைத்தல் என்ற காரணமே விபத்துக்கு முக்கிய காரணமாய் இருக்கிறது.முந்திசெல்லுதல் ,தவறான இடத்தில் வண்டிகளை நிறுத்தி வைத்தல் ,மாற்றுவழியில் அவசியமற்ற வேகம்,
பாதசாரிகளின் ஒழுங்கற்ற சாலையைக் கடக்கும் முயற்சி, விலங்குகளை  சாலையில் திரிய விடுதல்  போன்றவையே முக்கிய காரணிகளாய் இருக்கிறது
தனி மனித ஒழுக்கமே சாலையில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க முடியும் .முறையான பயன்பாடு ,சாலை விதிகளைப் பற்றி அனைவரும் அறிய வைத்தல் அவசியமில்லாத  வேகம் ,சரியான இடத்தில் சாலைகளை கடப்பது ,போக்குவரத்து விளக்குகளை கவனித்து செல்லுதல் .முறையான அளவான வேகம் போன்ற முக்கிய காரணிகளே பெரும்பாலான சாலை விபத்துக்களைத் தவிர்க்க முடியும.


சாலை விதிகளை மதிப்பீர் நாளையும் எழுந்து நடப்பீர்.


(படங்களுக்கு நன்றி கூகிள்)

(கவியாழி)

Sunday, 26 January 2014

மனிதம் மனதில் இருந்தாலே......

மனிதம் இல்லா மனிதரையே
மாற்றம் செய்ய வையுங்கள்
மனதில் துளியும் அன்புடனே
மனிதனாக வாழச் சொல்லுங்கள்

செல்வம் அதிகம் சேர்ந்தாலே
செல்லும் வழியும் தடுமாறும்
சொல்லில் வார்த்தை  தவறாகி
சொந்தம் தள்ளி உறவாடும்

சொந்தமும் நட்பும் இல்லாமல்
சுகமாய் வாழ்க்கை வாழ்ந்தாலும்
செல்லும் வழியில் சிலரேனும்
சிரித்துப் பேசச் செய்திடுங்கள்

குற்றம் குறைகளை நல்லதை
குணத்தை மாற்றி வாழ்வதை
சுற்றமும் நட்பும் உணர்ந்ததை
சொல்லிப் புரிய வையுங்கள்

அருகில் இல்லா உறவுகளால்
அதிகத் துன்பமும்  வருவதையும்
அன்பே இல்லா மனிதர்களின்
அடைந்த நிலையை காட்டுங்கள்

மனித வாழ்க்கை உணர்வதற்கு
மக்கள் சூழ்ந்தே வாழ்வதற்கு
மனிதம்  மனதில் இருந்தாலே
மகிழ்ச்சி நிறைந்து வாழ்ந்திடலாம்


(கவியாழி)


Thursday, 23 January 2014

மகிழ்ச்சி இல்லா நேரத்திலே...

மகிழ்ச்சி இல்லா நேரத்திலே
மனதில் தோன்றும் எல்லாமே
மறைக்க முடியா தருணங்களாய்
மடியும் நிலைக்கு வந்துவிடும்

மலையும் கடலும் வானமும்
மரமும் செடியும் கொடியுமே
மனதில் பாரத்தைக் குறைத்திடும்
மகிழ்ச்சியை மீண்டும் தந்திடும்

தோழமைத் துணிவும் சேர்ந்ததும்
தொடரும் துன்பமும் விலகிடும்
தொடரும் நட்பின் ஆதரவால்
தொல்லைகள் மறைந்து சென்றிடும்

இதயம் உணரா மனிதருக்கும்
இனியவை செய்திடசொல்லிடும்
இன்பம் தந்திடும் செயல்களை
இனியும் செய்ய வைத்திடும்

கலக்கம் வேண்டாம் நண்பனே
கடவுள் போல வந்தேனும்
கருணை கொண்டு உதவியாய்
கடந்து செல்ல வைப்பார்கள்

(கவியாழி)
Monday, 20 January 2014

புத்தகத் திருவிழா2014-செல்லப்பா அவர்களுக்குப் பாராட்டு

நேற்று மாலை ஐந்து மணிக்கு திரு.செல்லப்பா அவர்களின் சிறுகதைத்தொகுப்பான "தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் ' என்ற புத்தகத்தை அய்யா.புலவர் .ராமாநுசம் அவர்களின் திருக்கரங்களால்  அகநாழிகை பதிப்பகத்தார் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பதிவுலக நண்பர்கள் பலரும் திரு.பாலகணேஷ் அவர்களின் கைபேசிவழித் தகவல் கிடைத்ததும் சிரமம் பார்க்காமல் வந்திருந்து திரு.செல்லப்பா அவர்களை வாழ்த்தியபோது எடுத்த சில படங்கள்.

நான் அறிமுகம் செய்து பேசியபோது  மிக கவனமாக உரையை கேட்கும் மெட்ராஸ் பவன்  சிவகுமார்,நம்ம புலவர்.ராமாநுசம்,எழுத்தாளர்.செல்லப்பா  மற்றும் மின்னல்வரிகள் பாலகணேஷ்பன்.ராமசாமி,ஸ்கூல் பையன் சரவணன்,ஆர்.வி.சரவணன்,தோத்தவண்டா ஆரூர் மூனா செந்தில்,இரவின் புன்னகை செல்வின்

அகநாழிகை புத்தக வெளியீட்டாளர்  பொன் வாசுதேவன்
உஷா ராமச்சந்திரன், புதுவைக் கவிஞர் உமா மோகன், பெருமிதக் கவிஞர் தேனம்மை ஆகியோர்களுடன்  பொன்வாசுதேவன்


வந்திருந்து வாழ்த்திய பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

(கவியாழி)