Monday, 25 August 2014

இனிப்பான மனிதர்கள்

வெள்ளைச் சோறு மட்டுமே
விரும்பி உண்டு வந்தோர்
வேதனையாய் இன்று ஏனோ
வேண்டாமெனத் தள்ளி வைத்து

பச்சைக் காய்கறிகள் தின்று
பகல் வருமுன்னே விழித்து
பாதம் வலிக்க நடந்தும்
பயிற்சிகள் பலவகை செய்தும்

உணவைக் கொஞ்சமாய்  குறைத்து
உலர் பழங்கள் அதிகம் சேர்த்து
உண்டதை எல்லாமே மறந்து
உடலை வருத்தியே தினமும்

காலை மாலையென பகிர்ந்தே
கணக்காய் உணவைத் தின்று
வேளை வரும்போது மாத்திரையை
வேதனையுடன் தின்று வாழும்

இனிப்பை மறந்தும் இனிமையாய்
இன்னும் மன உறுதியுடன்
சிறப்பாய்  வாழ்ந்து வரும்
சொந்தங்களே நட்புகளே வாழ்க


(கவியாழி)

Tuesday, 19 August 2014

அடங்காத முத்தங்கள் ஆயிரம்

ஆயிரம் முத்தம் தந்தும் 
அடங்காத ஆசை கொள்வாள் 
அடுத்தவர் முன்னே மகிழ்ந்து 
அணைத்து மீண்டும் தருவாள் 
தீராத அன்புடனே இருப்பாள் 
தினமும் ஆவல் கொண்டே 
திரும்பத் திரும்ப உணர்வாய் 
கரும்புபோலக் கடிப்பாள் 


தேக்கிவைத்த ஆசையெல்லாம் 
தீர்க்கவே தினமும் கட்டியனைத்தே 
திகட்டத் திகட்டத் தருவாள் 
தீரும்வரை இணைந்தே மகிழ்வாள் 
வெளியில் தெரியாத வெட்கத்துடன் 
வீட்டில் புகுந்ததும் கொடுப்பாள் 
வெளியூர் சென்றால் ஏங்கியே 
வேதனையைத் தீர்ப்பாள் வந்ததும் 

கட்டியணைத்து முத்தம் தந்து 
கன்னத்தைக் கடித்தும் விடுவாள் 
காலையும் மாலையும் தொடர்ந்து 
கதைகள் கேட்டும் தருவாள் 
நெஞ்சின் மீதேறி நெடுநேரம் 
நிம்மதியாய் தூங்கி விடுவாள் 
நேரத்தைக் குத்தகை கேட்டு 
நீண்ட நேரம் முத்தமிடுவாள் 

சத்தமில்லா முத்தங்கள் எத்தனை 
தித்திக்குமே என்றென்றும் அதனை 
வாடிக்கையாய் கிடைத்தால் தினமும் 
வாராது துயரம் அதனால் 
அன்பான முத்தங்கள் இழந்தே 
அருகில் யாரும் உள்ளாரோ 
இனிமை மறந்த முத்தம் 
இடுவோர் யாரும் உளரா 


(கவியாழி)

Sunday, 17 August 2014

அவளன்றி மகிழ்வேது

அன்பானவள் எனக்கே அழகானவள்
அனைத்திலும் என்னை அறிந்தவள்
பண்பும் தெரிந்தவள் பாசக்காரி
பழகுவதில் சிலநேரம் ரோசக்காரி

எப்போதும் என்னையே சார்ந்தவள்
எவ்விடமும் உரிமையாய் திட்டுபவள்
முன்கோபம் வந்தால் பத்ரகாளி
முடியாத நேரத்தில் பங்காளி

முன்பொழுதில்  தினம் எழுவாள்
மூன்று வேலையும்  சமைப்பாள்
முகம் மலர்ந்தே உணவை
முன்னே வந்து பகிர்வாள்

கட்டளைப் போடும் எசமானி
கஷ்டம் வந்தால் உபதேசி
சித்திரை வெயிலாய் சிலநேரம்
சிடுசிடு வென்றே தகதகப்பாள்

ஆனாலும் எப்போதும் அன்பானவள்
அகிலமே வாழ்த்துகின்ற பண்பானவள்
அவளன்றி வாழ்வே இருக்காது
அருகின்றி எனக்கே மகிழ்வேது

(கவியாழியின் மறுபதிவு)

Friday, 15 August 2014

சுதந்திரம் எமக்கும் வேண்டும்வேண்டும் வேண்டும் மனதில்
வேதனை மறைந்திட வேண்டும்
தாண்டும் உயரம் யாவும்
தடைகளைத் தாண்டிட வேண்டும்

சுதந்திரம் எமக்கும் வேண்டும்
சூழ்நிலை மாறிட வேண்டும்
மனிதருள் ஒற்றுமை வேண்டும்
மகிழ்ச்சியைப் பகிர்ந்திட வேண்டும்

வாழ்வில் நிம்மதி வேண்டும்
வசந்தமும் மீண்டும் வேண்டும்
வலையில் மீண்டும் எழுதும்
வாய்ப்புகள் தொடர்ந்திட வேண்டும்

மீண்டும் மீண்டும் உங்களை
மகிழ்ச்சியாய் சந்திக்க வேண்டும்
தீண்டும் பணிகள் யாவும்
தீர்ந்திட நிம்மதி வேண்டும்அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்

(கவியாழி)

Wednesday, 28 May 2014

இந்த நிலைக்குக் காரணம் யார்?

வனமும் வனப்பையும் இழந்ததால்
வனத்தின் நிறமும் மாறுமாம்
வானமும் இயல்பை மாற்றியே
வானத்தின் தன்மையும் கூடுமாம்

எல்லா இடமும் வெளிச்சமாய்
எங்கும்  வெய்யில் எரிக்குமாம்
ஏரிக் குளமும் வற்றுமாம்
எரிச்சல் அதிகம் இருக்குமாம்

பொல்லா நிலையால் பலபேரோ
பொசுங்கி மடிந்தே விழுவாராம்
பொழுதும் கழிந்தால் மட்டுமே
பொறுத்தே வெளியில் வருவாராம்

இந்த நிலைக்குக் காரணம்
இழந்த மரங்கள் அதிகமாம்
இதையே நாமும் அறிந்தேனும்
இனிமேல் மரங்கள் வளர்க்கணும்

மழையும் நன்றாய் பெய்யுமாம்
மரங்கள் அடர்ந்து வளருமாம்
மக்கள் துயரம் நீங்கியே
மக்கள் மனமும் குளிருமாம்

வானம் மகிழ்ந்தே குளிர்ச்சியாய்
வருடம் முழுக்க பெய்யுமாம்
வாழ்வில் இதையே  மகிழ்ச்சியாய்
வானத்தைப் பெருக்கிக் காக்கணும்


=====கவியாழி=====