Thursday, 30 October 2014

சுற்றமும் நட்பும் உறவாய்.....

விதவை மணம் மறுத்து
வீதியிலே செல்லும்போது
கதைகள் பல சொலலி
காயப் படுத்வோர் பலராம்

உறவும் அறுந்து  வாழ்க்கை
உணர்வும் மடிந்து சிலரோ
துறவம் இருந்து வந்தால்
துன்பம் அங்கே மிகுமாம்

வாழ்வும் இன்பம் தொலைத்தார்
வறுமை கொண்டே வாழ்வோர்
ஊரும் உறவும் பிரிந்து
உலகம் பலதும் சென்றும்

காணும் மக்கள் எங்கும்
கன்னித் தமிழைப் போற்றி
நாளும் இருந்து வருவோர்
நாவில் இதுபோல் வேண்டாம்

சுற்றமும் நட்பும் உறவாய்
சேர்ந்து வாழ்ந்து வருவீர்
குற்றம் குறைகள் மறந்து
குலமே தமிழாய் வாழ்வீர்


(கவியாழி)Tuesday, 28 October 2014

மூத்தப் பதிவர்.புலவர்.இராமானுசம்

(அய்யா புலவர் இராமானுசம்)வயதில் மூத்த பதிவர்
வளமைக் கொண்டகவிஞர்
இளமை பருவம் முன்பிருந்தே
இனிமைத் தமிழைப் படித்தறிந்தே

தெளிந்த நடையில் கவிபடைக்கும்
தேர்ந்த கவிதைப் புலவராவார்
வலையில் வருவார் போவோரை
வயதைப் பார்த்துப் பேசாமல்

உறவாய் வலையைப் போற்றியே
உடனே படித்துப் பார்த்துமே
புரிந்தால் மட்டும் கருத்துகளை
பதியத் தயங்கிட மாட்டார்

உதவி என்று கேட்போரை
உடனே அழைத்துப் பேசிடுவார்
நிலைமை நன்கே புரிந்தவுடன்
நிறைய உதவிகள் செய்திடுவார்

துணையை இழந்தும் மறவாமல்
தினமும் எண்ணிக் கலங்கிடுவார்
மகளைப் பெற்ற தாயாக
மகிழ்ந்தும் இன்றும் வாழுகின்றார்

என்னையும் மதித்துப் பாங்குடனே
என்றும் அறிவுரை சொல்லிடுவார்
அன்னை போன்ற என்மகளை
அன்பாய் பேத்தி என்றிடுவார்

இவரைப் போலப் பதிவுலகில்
எல்லாப் பதிவரும் இருப்பீரே
எழிலாய் தமிழைப் போற்றியே
இணைந்தே மகிழ்ந்தே வருவீரே


(கவியாழி)


Monday, 15 September 2014

மனிதம் போற்றி வாழ்வோம்...

மழையுமில்லை பனியு மில்லை
மக்கள் மனதில் மகிழ்ச்சி யில்லை
உழைப்புக் கேற்ற ஊதிய மில்லை
உழவன் மனமோ ரொம்பத் தொல்லை

நகர வாழ்க்கை விரும்ப வில்லை
நடந்து செல்ல பாதையும் மில்லை
அடுத்த வீட்டு நட்பு மில்லை 
அன்புகொண்டு பேசவு மில்லை

வணிகன் கடைகள் திறப்ப தில்லை
வயித்துக் கேற்ற உணவு மில்லை
பிழைப்புக்கேற்ற ஊதிய மில்லை
பிழைக்க வழியும் தெரிய வில்லை

பிள்ளைப் படிப்பை முடிக்கவில்லை
பீசு கட்ட கையில் பணமுமில்லை
படித்து முடித்தும் வேலையு மில்லை
பசங்க வாழ்வும் நிம்மதி யில்லை

பிறந்த வாழ்வை முடிக்க வேண்டி
பிழைகள் கண்டு மனமும் வெம்பி
உலக நடப்பை மனதில் எண்ணி
உணர்ந்து வாழ்வோம் மனிதம் போற்றி

(கவியாழி)


Friday, 12 September 2014

இன்று இதமாய் இருக்கிறது

இதமான காலை இன்று
இன்பமாய் இருக்கத் தோணுது
நலமாக மனமும் வளமாய்
நல்லதே சொல்ல எண்ணுது

காலை வேளையில் காற்றும்
கதைகள் பலதைச் சொன்னது
கண்கள் இரண்டும் எதையோக்
காணவேண்டி மேலே பார்க்குது

செடியும் பூச்சியும் செல்லமாய்
சேட்டை சிலதைப் பண்ணுது
சேவலும் நாய்களும் இன்பமாய்
சாலையில் திரிந்து ஓடுது

மரங்கள் எல்லாம் இன்றும்
மகிழ்வாய் சிரித்து மகிழுது
மாலையில் இருப்பது போலவே
மனதில் எதையோ தேடுது

மழையும் இதையே கண்டு
மறுபடி மறுபடி சிரிக்குது
மக்களும் மழையைப் பார்த்து
மகிழ்ச்சியாய் ஆடத் தூண்டுது


(கவியாழி)

Wednesday, 10 September 2014

புகழோடு மீண்டும் வருவேன்......

எதாச்சும் சொல்ல நினைச்சா
எல்லாமே மறந்து போச்சு
யாராச்சும் கேட்க நினைச்சா
என்னான்னு சொல்லித் தாங்க

பேரெல்லாம் ஊரெல்லாம் எனக்குப்
புரியாமல் தெரியாமல் ஆச்சு
பெரும்பாலும் எல்லோர்க்கும் இதனால்
வருத்தமே பெருகிப் போச்சு

ஏதோதோ எழுத விரும்பி
எந்நாளும் ஆர்வம் இருந்தும்
போதாத நேரத்தாலே தொடர்ந்து
பொழுதும் எழுத முடியல

தீராத தலைவலியே  நிதமும்
தீர்க்காமல் தொடர்ந்து நின்று
ஆறாத மனக் குறையாய்
அன்றாடம் முன்னாள் வருது

தீராத மனக் குறையைத்
தீர்க்கவே தொடர்ந்து சென்று
போராடிச் ஜெயிப்பேன் மீண்டும்
புகழோடு மீண்டும் வருவேன்

(கவியாழி)