முற்போக்குச் சிந்தனையால் வாழும் மனிதமே!
 சாதியெனும் பட்டத்தைத் தலைமீது தந்ததா  சக்தி வாய்ந்த எதிரிகளால் வளர்ந்து வந்ததா  மோதிவரும் கூட்டமெல்லாம் உழைக்க மறுப்பதால்  முன்னோர்கள் சொன்னதென வளர்த்து வருவதா   பாதிவயிறு உண்ணாமலே உழைக்கும் வர்க்கமே  பகலிரவாய் மோதிக்கொண்டு சாதி வளர்ப்பதா  மீதியுயிர் போகும்வரை வெட்டிச் சாய்ப்பதால்  மீண்டுவரும் பயனையாரோ மகிழ்ச்சிக் கொள்வதா?   பாடுபட்டுச் சேர்ந்து வாழும் கூட்டம் மட்டுமே  பகலிரவாய் அன்பு கொண்டு கூடிவாழுமே  நாடுவிட்டு நாடுபோவோர் அந்த நாட்டிலே  நாகரீக போர்வையாலே சொல்ல மறுப்பதேன்?   வேளாண்மை  நம்தொழிலாய்ப் போற்றி வாழ்வதால்  வேலைவெட்டி யில்லா நிலைமை மாறியே  ஏழைகளும் ஒற்றுமையாய் சேர்ந்து வாழவே  ஏற்றத்தாழ்வு மாறிவிடும் உண்மை உழைப்பிலே!   அன்புடனே ஒற்றுமையாய் இணைந்து செல்வதால்  அன்னியனும் பயப்படுவான் நம்மைப் பிரிக்கவே  பண்புடனே பழகுவதால் பயனும் உள்ளதே  படித்தோரே புரிந்தோரே உண்மை நிலையிதே!   படிப்பறிவு நிறைந்திருக்கும் இந்தநாளிலும்  பகைமையோடு வாழ்வதனால் பயனும் இல்லையே  முடிவேடுப்பீர் வாழும்வரை உண்மை நிலையினை  முற்போக்குச் சிந்தனையால் வாழும் மனிதமே!   (கவியாழி)    
 
