Showing posts with label கட்டுரை/மகிழ்ச்சி/அப்பாவிடம் அடிவாங்கினேன். Show all posts
Showing posts with label கட்டுரை/மகிழ்ச்சி/அப்பாவிடம் அடிவாங்கினேன். Show all posts

Sunday, 23 November 2014

36வது வயதிலும் அப்பாவிடம் அடிவாங்கினேன்.....


எனக்கு அப்போது 36 வயது , நான் சென்னையில் எனது (United India Insurance)காப்பீட்டு நிறுவனத்தில் கிளை மேலாளராகப் பணிபுரிந்து மனைவி மகளுடன் சென்னையில் தனியாக வசித்து வந்தேன். நான் அப்பா அம்மாவை பார்க்க நினைத்தாலும்  அடிக்கடி எனது சொந்த ஊரான சேலத்திற்குச் செல்வதில்லை .ஊரில் எனது இரண்டு சகோதர்களும் நான்கு சகோதரிகளும் 32 பேரன் பேத்திகளும் மற்றும் எல்லா உறவினர்களும் வசித்து வருகிறார்கள் இருந்தும் என்னையே வரவழைப்பார்.

நான் அவரை நேரில் சென்று பார்க்க வேண்டி அவராகவே பொய்யான காரணத்தைச் சொல்லி உடல்நிலை சரியில்லை,மனநிலை சரியில்லை என்று சாப்பிடாமல் இருந்து என்னை வரவழைப்பது வழக்கம்.நானும் நேரில் சென்ற உடன் எழுந்து என்னுடன் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருப்பார் அதைப் பார்க்கும் எனது அண்ணனும் தம்பியும் செல்லமான பொறாமையுடன் ,நீயே சென்னைக்கு அழைத்துச் செல் என்று சொல்வார்கள். அப்பா என்னைப் பார்த்து சிரித்து நான் அங்கெல்லாம் வரமாட்டேன் என்பார்.

இதே கார்த்திகை மாதத்தில் அப்போது அவருக்கு வயது 83 இருக்கும் நல்ல ஆரோக்கியமாகவும் இருந்தார்.அப்போது சிறிய அளவில் கால்வீக்கம் மற்றும் கால்வலி வந்து நடக்க முடியாமல் அவதிபடுவதாகவும் மருத்துவரிடம் வராமல் தைலம் மட்டுமே தடவிக்கொண்டு வீட்டிலேயே இருந்தார்.நான் நேரில் சென்றால் மகிழ்ச்சியடைவார் என்று எனது அண்ணன் தம்பி மற்றும் அக்கா அடிக்கடி தொலைபேசியில் சொன்னார்கள் .

எனக்குத் தெரியும் அவர் என்னைப் பார்க்க வேண்டி நடத்தும் நாடகம் என்று,.அதனால் நான்  அதிக விலையுள்ள கைத்தடி ஒன்றை வாங்கிகொண்டு பார்க்கச் சென்றேன். அவர் என்னைப் பார்த்ததும் அன்பாக "ஏப்பா "என்னாச்சு நல்லாதானே நடக்கிறாய் பின்னே ஏன் கைதடியை கையில் வைத்திருக்கிறாய் என்று ஓடி வந்தார்.நான் இந்தாங்க இது உங்களுக்குத்தான் என்றேன் .

அதைக் கொடுத்ததும் அவர் முகத்தில் மாற்றம் தெரிந்தது "எனெக்கென்ன அப்படி வயதா ஆகிவிட்டது இந்தா இதை நீயே வைத்துக்கொள் என்று சொல்லிக்கொண்டே அந்தத் தடியாலே என்னை அடித்தார்.நான் அந்த அடியை மகிழ்ச்சியாய் வாங்கினேன். இன்றும் அதை நினைத்தால் அவரது பிடிவாதம் தன்னம்பிக்கை,மனஉறுதி என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

குடும்பத்தில் உள்ள யார் சொன்னாலும் கேட்கமாட்டார்.நான் நேரில்வந்து விளக்கமாகப் பொறுமையாக் நான் மற்றவர்களைத் திட்டிவிட்டு அப்புறமாய் வெளியில் நண்பர்களைப் பார்க்க சென்றுவிட்டு திரும்பி வந்தால்.அவராக வந்து ஏனப்பா அவர்களைத் திட்டினாய் என் மீதும் தவறு இருக்கிறதே உனக்குத்தான் தெரியுமே என்னுடைய வேலையெல்லாம் என்பார்.

நான் சென்னைத் திரும்பக் கோவை தொடர்வண்டியில் ஏறினால் அன்று நடந்த அன்பான நாடகமான நிகழ்வுகள் என்னைத் துரத்திக்கொண்டே வரும்.
இருந்தும் நான் அவர் பிடிவாதததிலும் நேர்மையான் உண்மையான் பாசத்தை உணர்ந்தேன்.இன்றும் எனது தந்தையைப் போலவே பிடிவாதக்கார அப்பாக்களை நேரிலும் பார்கிறேன்..இதை அவர்களின் பிடிவாதம் என்று நினைக்காமல் அப்பாக்களின் அன்பின் வெளிப்பாடு என்றும்  எல்லோரும் ஒன்றிணைத்து வாழவேண்டுமென ஆசைப்படுகிறார்கள் என்றே என்னால் உணர முடிகிறது.

என்ன செய்வது ,இப்போது அம்மா அப்பா இருவருமே அருகில் இல்லையே என்ற வருத்தம் மேலோங்கி இப்போதெல்லாம் நான் சேலம் செல்வதையே விரும்புவதில்லை.ஏனென்றால் நான் தொடர்வண்டி ஏறினாலே எனது பெற்றோரின் குறிப்பாக எனது அப்பாவின் நினைவுகளே என்னை வாட்டுகிறது..உண்மையில் நான் இன்றும் உணர்கிறேன் அவரின் கோபம் நியாயமானதென்று ஆனால் ?(கவியாழி)