Sunday, 30 November 2014

புயல் மழைக் காலங்களில்....

புயல் மழைக் காலங்களில் எங்கும்
புறப்பட்டுச் சென்றாலே மூக்குச்சளி
அழையாத நண்பனாக உறவாடும்
ஆறுநாள் தொடந்தே இருக்கும்

அடிக்கடித் தும்மலும் அடங்காது
அழும்படி செய்து விடும்
தலைவலி மிகுந்து வேலை செய்ய
தடையாக இருந்தே தொல்லையாக்கும்

கயல்விழிக் காது தொண்டை
கரகரவென்றே இருந்தும் வலிக்கும்
அயல்நாட்டு மருந்து தின்றும்
அடங்காமல் தொடர்ந்து வரும்

ஐங்கடுகு சூரணதைக் குடித்து
அடிக்கடி மிளகு ரசம் பருகி
துளசி தூதுவளை செடியின்
தூய இலைதனை மென்றாலும்

வயல் நண்டு  ரசம் தொடர்ந்து
வாரம் இருமுறை குடித்தால்
வரும் துன்பம் நீங்கித் தீரும்
வழக்கமான வேலைகள் தொடரும்

(கவியாழி)

Friday, 28 November 2014

அரசுபள்ளிப் ஆசிரியர்கள்,மாணவர்கள் -அன்றும் இன்றும்

கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு ஆரம்ப பள்ளிகளின் ஆசிரியர்களே முக்கிய பங்காற்றினார்கள் என்றால் மிகையாகாது.குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்கப் படுத்தும் விதமாக சொந்த பணத்தில் மாணவர்களுடைய கல்விக் கட்டணத்தை செலுத்தியும் ஆசிரியர்களே அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று மாணவர்களை அழைத்துப் பாடம் சொல்லித்தந்தார்கள்.

பெற்றோர்களையும் சந்தித்து கல்வியறிவின் தேவையையும் படித்தால் பிற்காலத்தில் அறிவு மேம்பாடு ,வாழ்க்கைத்தரம் உயர்வு அரசு வேலை போன்ற அறிவுரைகளைச் சொல்லி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வற்புறுத்துவார்கள்.மாணவர்களை படிக்க வைக்க வேண்டி அரசு வழங்கும் மதியஉணவுத் திட்டத்தில் ஏழை மானவர்களைச்  சேர்த்து மதிய உணவு தந்து படிக்க வைத்தார்கள்.மாணவர்களின் குறைநிறைகளை பெற்றோர்களுக்குத் தெரியப் படுத்தி மாணவர்களின் கல்விக்குப் பேருதவி  செய்தார்கள்

நானும் அரசுப் பள்ளியில்தான் எட்டாம் வகுப்புவரைப் படித்தேன்.நான் ஆரம்பக் கல்வி படிக்கும்போது மாணவர்கள் மேல் அக்கறையுள்ள பல ஆசிரியர்கள் தாங்களாகவே மாணவர்களை அழைத்துவர கிராமத்திற்குள் செல்வார்கள் கையில் தடியுடன் நாலைந்து மாணவர்களை தெருவுக்குத் தெரு தப்பிவிடாமல் (நானும் மாணவர்களைப் பிடிக்க போனது  )வீட்டுக்கே சென்று அழைத்து வந்தது இன்றும் நினைவிருக்கிறது.மாணவர்களின் குடுமப்த்திற்கு பொருளாதார உதவி செய்து மானவர்கழ்ப் படிக்கச் வைத்த ஆசிரியர்கள் பலருண்டு.

அன்றைய நாட்களில் பள்ளி செல்ல அதிகமான அரசு  பேருந்து வசதி கிடையாது .பள்ளி செல்ல ஆர்வம் உள்ளவர்கள் நடந்தோ மிதிவண்டியிலோ அல்லது மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி போன்றவற்றில்தான் செல்லவேண்டி இருந்தது .நடந்தே சிலபல மைல்கள் சென்று படித்து வந்தவர்கள் இன்று நல்ல வேலையில் இருக்கிறார்கள்.நகர்ப்புறங்களிலும் தொடர்வண்டி செல்லும் பாதையிலும் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் தொடர்வண்டி வசதி இருந்தது.காலையில் புறப்பட்டு இரவில் வீடு திரும்பியதாய் பலபேர் சொல்லியதைக் கேள்விபட்டிருக்கிறேன்.

அன்றைய நாட்களில் மாணவர்கள் ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்காவிட்டால் அடிக்கச் சொல்லி பெற்றோர்களே ஆசிரியரிடம் சொல்வார்கள்.வீட்டுப்பாடம் எழுதாதவர்கள் சரியாக பாடம் படிக்காதவர்களை வகுப்புக்குள் முட்டிபோட்டு உட்காருவது ,வெய்யிலில் முட்டிப்போட்டு இருப்பது,வெய்யிலில் நாள் முழுக்க நிற்பது அல்லது அதிகபட்சத் தண்டனையாகத் தலையில் ஒருவர் மாறி ஒருவர் குட்டு வைப்பது  கைவிரல்களை நீட்டி அடிகோலால் அல்லது பிரம்பால் அடிப்பது மற்றும் அதிகபட்சமாக பெற்றோரை அழைத்துவரச் சொல்வது போன்ற சீர்திருத்தும் தண்டனைகள்  இருக்கும்.

இன்றைய நிலையோ எல்லோருமே அறிந்ததுதான் ,அரசுஆரம்பப் பள்ளியில் படிக்க  வைக்க ஆர்வமில்லாத பல பெற்றோர்கள் தனியார் பள்ளியில் சேர்த்து விடுவதன் விளைவு இன்று நிறைய ஆசிரியர்கள் இருந்தும் அரசுப்பள்ளியில் படிக்க மாணவர்கள்  இல்லாது மூடும் நிலைக்கு வந்துவிட்டது.மேலும் ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கவோ அதட்டவோ  கூடாது என்ற கடுஞ்சட்டத்தால் ஆசிரியர்களும் மாணவர்களை அரசுபள்ளிக்கு கொண்டுவருவதில் சிக்கல் இருக்கிறது.ஆனால் இன்றும் கிராமபுறங்களில் செயல்படும் அரசு ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்  தனியார் நடத்தும் பள்ளிகளைவிட நல்ல மதிப்பெண்களை பெற்று சிறந்து விளங்குகிறார்கள்.

(கவியாழி)

Tuesday, 25 November 2014

இறைவா எங்கே நீ இருக்கின்றாய்

இறைவா !எங்கே நீ இருக்கின்றாய்
இதையும் பார்த்தும் சிரிக்கின்றாய்
மறையோர் புலவர் இருந்தாலும்
மனதைக் கெடுத்தே பாடுகின்றார்

பலபேர் அறியா மொழியாலே
பக்தி பாடலெனப் பாடுகிறார்
சிலபேர் தமிழில் பாட வந்தால்
சினமே கொண்டே தள்ளுகிறார்

தட்டில் விழுகின்ற காசைப் பார்த்து
தருவார் பூவும்  குங்குமம் திருநீறுமே
பொட்டில் அறைந்தது போல் பேசியுமே
புறமே சற்றே தள்ளிச் சாடுகின்றார்

மனமே வருந்தி வருவோரை தினம்
மனதில் உன்னையே  நினைப்போரை
கனமே அருகில் பார்க்க விடாமல்
கடிந்தே உடனே துரத்து கின்றார்

இருந்தால் இதையும் பார்த்துக் கொண்டு
எப்படி அங்கே நீ  வாழுகின்றாய்
தப்புகள் உனக்கும் தெரியலையா
தண்டனை  யாருக்கும் புரியலையா?

(கவியாழி)Sunday, 23 November 2014

36வது வயதிலும் அப்பாவிடம் அடிவாங்கினேன்.....


எனக்கு அப்போது 36 வயது , நான் சென்னையில் எனது (United India Insurance)காப்பீட்டு நிறுவனத்தில் கிளை மேலாளராகப் பணிபுரிந்து மனைவி மகளுடன் சென்னையில் தனியாக வசித்து வந்தேன். நான் அப்பா அம்மாவை பார்க்க நினைத்தாலும்  அடிக்கடி எனது சொந்த ஊரான சேலத்திற்குச் செல்வதில்லை .ஊரில் எனது இரண்டு சகோதர்களும் நான்கு சகோதரிகளும் 32 பேரன் பேத்திகளும் மற்றும் எல்லா உறவினர்களும் வசித்து வருகிறார்கள் இருந்தும் என்னையே வரவழைப்பார்.

நான் அவரை நேரில் சென்று பார்க்க வேண்டி அவராகவே பொய்யான காரணத்தைச் சொல்லி உடல்நிலை சரியில்லை,மனநிலை சரியில்லை என்று சாப்பிடாமல் இருந்து என்னை வரவழைப்பது வழக்கம்.நானும் நேரில் சென்ற உடன் எழுந்து என்னுடன் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருப்பார் அதைப் பார்க்கும் எனது அண்ணனும் தம்பியும் செல்லமான பொறாமையுடன் ,நீயே சென்னைக்கு அழைத்துச் செல் என்று சொல்வார்கள். அப்பா என்னைப் பார்த்து சிரித்து நான் அங்கெல்லாம் வரமாட்டேன் என்பார்.

இதே கார்த்திகை மாதத்தில் அப்போது அவருக்கு வயது 83 இருக்கும் நல்ல ஆரோக்கியமாகவும் இருந்தார்.அப்போது சிறிய அளவில் கால்வீக்கம் மற்றும் கால்வலி வந்து நடக்க முடியாமல் அவதிபடுவதாகவும் மருத்துவரிடம் வராமல் தைலம் மட்டுமே தடவிக்கொண்டு வீட்டிலேயே இருந்தார்.நான் நேரில் சென்றால் மகிழ்ச்சியடைவார் என்று எனது அண்ணன் தம்பி மற்றும் அக்கா அடிக்கடி தொலைபேசியில் சொன்னார்கள் .

எனக்குத் தெரியும் அவர் என்னைப் பார்க்க வேண்டி நடத்தும் நாடகம் என்று,.அதனால் நான்  அதிக விலையுள்ள கைத்தடி ஒன்றை வாங்கிகொண்டு பார்க்கச் சென்றேன். அவர் என்னைப் பார்த்ததும் அன்பாக "ஏப்பா "என்னாச்சு நல்லாதானே நடக்கிறாய் பின்னே ஏன் கைதடியை கையில் வைத்திருக்கிறாய் என்று ஓடி வந்தார்.நான் இந்தாங்க இது உங்களுக்குத்தான் என்றேன் .

அதைக் கொடுத்ததும் அவர் முகத்தில் மாற்றம் தெரிந்தது "எனெக்கென்ன அப்படி வயதா ஆகிவிட்டது இந்தா இதை நீயே வைத்துக்கொள் என்று சொல்லிக்கொண்டே அந்தத் தடியாலே என்னை அடித்தார்.நான் அந்த அடியை மகிழ்ச்சியாய் வாங்கினேன். இன்றும் அதை நினைத்தால் அவரது பிடிவாதம் தன்னம்பிக்கை,மனஉறுதி என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

குடும்பத்தில் உள்ள யார் சொன்னாலும் கேட்கமாட்டார்.நான் நேரில்வந்து விளக்கமாகப் பொறுமையாக் நான் மற்றவர்களைத் திட்டிவிட்டு அப்புறமாய் வெளியில் நண்பர்களைப் பார்க்க சென்றுவிட்டு திரும்பி வந்தால்.அவராக வந்து ஏனப்பா அவர்களைத் திட்டினாய் என் மீதும் தவறு இருக்கிறதே உனக்குத்தான் தெரியுமே என்னுடைய வேலையெல்லாம் என்பார்.

நான் சென்னைத் திரும்பக் கோவை தொடர்வண்டியில் ஏறினால் அன்று நடந்த அன்பான நாடகமான நிகழ்வுகள் என்னைத் துரத்திக்கொண்டே வரும்.
இருந்தும் நான் அவர் பிடிவாதததிலும் நேர்மையான் உண்மையான் பாசத்தை உணர்ந்தேன்.இன்றும் எனது தந்தையைப் போலவே பிடிவாதக்கார அப்பாக்களை நேரிலும் பார்கிறேன்..இதை அவர்களின் பிடிவாதம் என்று நினைக்காமல் அப்பாக்களின் அன்பின் வெளிப்பாடு என்றும்  எல்லோரும் ஒன்றிணைத்து வாழவேண்டுமென ஆசைப்படுகிறார்கள் என்றே என்னால் உணர முடிகிறது.

என்ன செய்வது ,இப்போது அம்மா அப்பா இருவருமே அருகில் இல்லையே என்ற வருத்தம் மேலோங்கி இப்போதெல்லாம் நான் சேலம் செல்வதையே விரும்புவதில்லை.ஏனென்றால் நான் தொடர்வண்டி ஏறினாலே எனது பெற்றோரின் குறிப்பாக எனது அப்பாவின் நினைவுகளே என்னை வாட்டுகிறது..உண்மையில் நான் இன்றும் உணர்கிறேன் அவரின் கோபம் நியாயமானதென்று ஆனால் ?(கவியாழி)

Friday, 21 November 2014

மூத்தப் பதிவருடன் கவிஞர்.நா.முத்துநிலவன்


 நா,முத்துநிலவன் அவர்களின் சென்னை சந்திப்பு
18.11.2014அன்று கவிஞர் .நா.முத்துநிலவன் அவர்கள் சென்னை வருவதாகவும் .அவர் வரும்முன் நான் புலவர்.ராமானுசம் ,கவிஞர் .மதுமதி ஆகியோரைப் பார்க்க விரும்புவதாகவும் அவர்களுக்கு தகவல் சொல்லிவிடுங்கள் என்றும் சொல்லியிருந்தார்.நான் அவரை மாம்பலம் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி விடுமாறும் அங்கிருந்து உங்களை அழைத்துச் செல்கிறேன் என்றேன்


மாலை ஆறு மணிக்கு சொன்னபடியே நான் காத்திருந்து  அவரை நான் மாம்பலம்  தொடர்வண்டி நிலையத்திலிருந்து புலவர் அய்யா வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.பின் கவிஞர்.மதுமதியும் உடன் சேர்ந்து கொண்டார்.அப்போது எங்களது கடந்த கால பதிவர் சந்திப்புகள் பற்றியும் நடைமுறை சிக்கல்கள் என்ன ?  நீங்கள் ஏன் வரவில்லை ?உங்களை அங்கு சந்திக்காதது எங்களுக்கு ஏமாற்றமாய் இருந்தது என்று சொல்லி . வருத்தப்பட்டார்.

பதிவர் சந்திப்பில் பார்க்க முடியாததால் நேரில் வந்து விசாரித்ததுடன் மூத்தப் பதிவர்.புலவர் அய்யா அவர்களை நேரில் கண்டு நலம் விசாரித்ததுடன் அடுத்த பதிவர் சந்திப்புக்கு ஆலோசனைகளையும் கேட்டு இன்னும் வரும்காலத்தில் எப்படி சிறப்பாக நடத்தலாம் என்று ஆலோசனை கேட்டறிந்தார்.பின்னர் அவர் எழுதிய "புதிய மரபுகள்"என்ற புத்தகத்தை மூவருக்கும்பரிசளித்தார்.

இவ்வளவு எளிமையான இனிமையான கவிஞரை சந்தித்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது

(கவியாழி)


Wednesday, 19 November 2014

சிறைபிடிக்கும் மழலைகளே....

மெல்ல மெல்ல தாவிவந்து 
மேனியோடு  சேர்ந்த ணைத்து
எல்லையில்லாக் குறும்பு செய்யும்
எனதருமைக் குழந்தைகளே

வண்ண மயில் போலவும்
வயதையொத்துப் பாடவும்
சின்னதாகக் கதையைச்  சொல்லி
சிரித்து விளை யாடவும்

எண்ணமெல்லாம் ஓரிடத்தில்
எளிதில் நம்மை வசப்படுத்தி
சின்னக் சின்னக் குறும்புகளில்
சிறைபிடிக்கும் மழலைகளே

பள்ளி செல்லும்போது மட்டும்
பார்வையாலே சிறைபிடித்து
எல்லையினைத் தாண்டிச் சென்று
ஏன்அழுது செல்லுகிறாய்

கண்ணெதிரே வளர்ந்துநீ
கல்வியிலும் சிறந்திடவே
புன்னைகையைத் தந்துவிட்டு
புகழுடனே நன்கு படிப்பாய்

(கவியாழி)


Monday, 17 November 2014

கட்டிளங் காளையரும்.....

கொட்டி மழைப் பொழிகிறதே கொட்டோ வென்றே
 குடையெல்லாம் பறக்கிறதே அய்யோ வென்றே
தட்டிவீடும் நனைகிறதே சொட்டுசொட் டென்று-ஏழைக்கு
 தங்குமிடம் கிடைக்கவில்லை  எங்கும் சென்றே

பட்டித் தொட்டி கழனியெல்லாம் வெள்ளமாக
பயிரெல்லாம் அழுகுவதால் உள்ளம் ஏனோ
கட்டவிழ்ந்த  நிலையில் மனதைக் கண்டு-விவசாயி
கண்ணீரில் நீந்துகிறான் கனத்த மழையால்

கட்டிளங் காளையரும்  நொந்து போக
காடுமேடு இருப்பதுபோல் சாலை யெங்கும்
திட்டுத்திட்டாய் இருக்கிறதே எல்லா திசையும்-வேலைக்குத்
திட்டிக்கொண்டே செல்லுகிறார் சாலையிலே

விட்டுவிட்டு மழைப் பெய்வதாலே பெண்கள்
வீட்டில் இருந்தால் எல்லோருக்குமே கும்மாளமாம்
கெட்டிக்கார கணவன் மார்கள் மகிழ்ச்சியாக-இன்று
கேட்டதெல்லாம் வாங்கித்தருவார் மகிழ்ச்சியாக

(கவியாழிகண்ணதாசன்)
Friday, 14 November 2014

அய்யா.ஆ.சிவலிங்கனார்.மறைவு-வாழ்த்துப்பா!

அய்யா.ஆ.சிவலிங்கனார் அவர்களுக்கு அஞ்சலி
           10.07.2014 அன்று அய்யாவுடன் புலவர் குட்டியாண்டி (எ)திருநாவளவன்,
.  புலவர்.இராமனுசம்,புலவர்.கி,த.பச்சியப்பன் மற்றும் அவரின் இரு மகன்களுடன் நானும்.தங்கமான எங்களாசான்

                                                              **************

தங்கமான எங்களாசான் தமிழை மட்டும்
    ஊட்டவில்லை, இளமையில் நாங்கள் செய்த
கொங்குதமிழ்க் குறும்புகளோ கொஞ்சமல்ல;
    கோதில்லாப் படிப்புக்கும் பங்க மின்றி
மங்கையர் உடன்பயிலும் வகுப்பில் நீங்கள்
   மாத்தமிழைக் கற்றலோன்றே குறியாய் நிற்பீர்
சங்கடங்கள் வந்துவிடும் சார்ந்த கல்வி
   நின்றுவிடும் எண்ணியதைப் பாரீர் என்பார்;

பொங்குதமிழ் உணர்ச்சிக்குப் பொறுப்பு மாவார்
   புரியவைக்கும் ஆற்றலிலும் பொறுமை காப்பார்
தங்குதடை இல்லாமல் தமிழில் பாட்டுத்
   தந்திடுவார் மேற்கோள்கள் பலவும் காட்டி;
சங்கநூல்கள் சதுராடும் இவரின் வாயில்
    சாந்துணையும் தமிழ்படிக்கத் தூண்டும் சொற்கள்
நுங்கினைப்போல் உண்டுண்டு மகிழ்ந்த நாளை
    நும்மிடத்தில் எடுத்துரைக்கக் காலம் போதா!

இப்படியே நான்காண்டும் இவரிடத்தில்
    கற்றகாலம் இன்றுவை என்றன் நெஞ்சில்
அப்படியே நிற்கிறதே என்ன சொல்வேன் !
    அன்றொருநாள்  நாவுக்க(ரசர்) நாடகத்தில்
அப்பூதி வேடத்தில் நடிக்கச் சொன்னார்;
    அழகுத்தமிழ் உரையாடல்; சொக்கி நானும்
தப்பேதும் இல்லாமல் தனியே சென்று
    தந்தபாடம் மா.நெல்லித் தோப்புக்குள்ளே

ஒத்திகைகள் பலபார்தேன் உடனி ருந்த
   உயிர்த்தோழர் நற்றமிழும் நடிப்புங் கண்டார்
இத்திரையில் உனக்கீடு சிவாசி என்றார்;
    இதற்குமேலே என்ன வேண்டும் ஏற?
புத்துணர்ச்சி தந்தார் என் நண்ப ரெல்லாம்
    பொதுவுடமைக் கி.த.ப. சிரிப்பி லார்த்தார்
எத்தனையோ இடர்ப்பாடி தற்குப் பின்னே
   என்னடிப்பில் குறைக்கானாப் புலவர் .வேதா

இரட்டணைரா மாநுசன்,கண்ணப்பன் போன்றோர்
    எண்ணியதம் திராவிடத்தின் கொள்கை தன்னைத்
தரமுயன்றார் நாடகத்தில் என்றன் வாயால்;
    தமிழ்பயிற்றும் மயிலமிதைத் தாங்கா தென்றேன்,
உரமுடன்நான் நாவலர்போல் உரைக்க வில்லை
    ஒண்டமிழில் நாவுக்க ரசரே ! என்றேன்
நரிகளெனைக் கழட்டிவிடப் பார்த்த போது
    நயமாக இவரிடத்தில் உண்மை சொன்னேன்.

நல்லதப்பா! நமக்கீது தீமை சேர்க்கும்
    நாடகத்தில் அந்தவாடை நடவா வண்ணம்
சொல்லுதலே நன்றென்று நயமாய்ச் சொல்லி
   நாவுக்கரசர் என்றழைக்கச் சான்று தந்தார்
நல்லதமிழ் விளையாட்டு நடந்த தன்று;
   நாடகத்தில் நற்சான்றும் பரிசும் பெற்றேன்.
வல்லதமிழ் நாடகக் கண்ணார்.அ.கு.முக
   வேலன்போன் றோரென்னை வாழ்த்துச் செய்தார்

ஆசி,பெற்றேன் அன்பு பெற்றேன்அன்று மின்றும்
   ஆழ்ந்தபல நூலிலும் கற்றேன் பல்லோர் போற்ற;
நா.சிவலிங்கமென்னுமோர் சொல்லை நாளும்
    நவிலுதற்கு நம்முருகன் அருள் பொழிந்தான்
பாசிறக்கும் நற்றமிழில் பாட வைத்த
    பண்புநிறை இறைவிழியே! நன்றி ! நன்றி!
மாசிலுயர் தமிழை  யென் மனத்தில் ஏற்றி 
    மாவலனின் தாள்போற்றி வணங்கு கின்றேன்.

            நன்றி;"தேன்தமிழ்ப் பாமலர்கள் என்ற நூலிலிருந்து

 (பாடலை எழுதியவர்; புதுவை எழில்நிலவன் (எ) புலவர்.சீனு.ராமச்சந்திரன்)


(கவியாழி கண்ணதாசன்)


Monday, 10 November 2014

அய்யா புதுவை எழில் நிலவன் (புலவர்.சீனு.ராமச்சந்திரன்
அய்யா புதுவை எழில்நிலவன் (எ) சீனு.ராமச்சந்திரன்
********

புதுவை தந்த பாரதிபோல் 
புரட்சிப் பாரதி தாசனைப்போல் 
இவரும் தமிழைப் படித்தறிந்து-தவறாய் 
இமியின் அளவும் வாராமல் 
அகவை எழுபது வயதிலுமே 
அனைவரும் மெச்சும் வல்லவராய் 
அங்குமிங்கும் எவ்விடமும்-தமிழை 
அழியா வண்ணம் காத்திடவே 

சிலம்புச் செல்வர் அடிதொற்றி 
சிறந்தே தமிழை மெருகூட்டி 
தினமும் தமிழே உயிர்மூச்சாய்-எல்லா 
திசையும் சென்று பாடுகிறார் 
கவிதைக் கதைகள் நாடகமே 
காவியம் சொல்லும் நடிகராக 
இளமைக் காலம் முதற்கொண்டு-தமிழை 
இன்றும் விரும்பிக் காதலித்தும் 

பலரைப் போற்றிப் பாவடித்தே
பழைய நினைவை மறக்காமல் 
புத்தகம் வடிவாய் உருவேற்றி-நல்ல 
புதிய சரித்திரம் படைத்துவிட்டார் 
இளைஞர் பலரும் விளையாட 
இவரோ விரும்பியது தமிழைத்தான் 
இன்றும் அன்றுபோல் இளைஞராக 
இனிதே தமிழை  உயிர்மூச்சாய் 

கடுகின் அளவும் குறைவின்றி 
கருத்துப் பிழைகள் நிகழாமல் 
விருத்தம் ஓசை சந்தத்துடன்-கவியை 
விரைந்தே மகிழ்ந்துப் பாடுகிறார் 
அய்யா இன்றும் ஏக்கமுடன் 
அழியாத் தமிழை விருப்பமுடன் 
அனைத்துப் புதிய படைப்புகளை-தினமும் 
ஆழ்ந்தே படித்து வருகின்றார் 

தமிழேத் தினமும் உயிர்மூச்சாய் 
தினமும் புதிதாய் படித்தறிந்து 
அனைவரும் உணர வானொலியில்-இன்றும் 
அழகாய் பாடி தொடருவதால் 
சான்றோர் நல்லோர் அறிஞர்களும் 
சான்றாய் தந்த பட்டங்களும் 
நீண்டே செல்லும் தொடராக-மலைப்பாய் 
நினைத்தே மகிழ்ந்தேன் உளமாற.

(கவியாழி கண்ணதாசன்)