Friday, 31 January 2014

மனமே மீண்டும் வருந்தாதே.......

மகிழ்ச்சியில் திளைக்கும் மனமே
மகிழாதோர் இல்லை தினமே
நெகிழ்ச்சியாய் இருப்போர் சிலரே
நெஞ்சுருக மகிழ்வோர் பலரே

நேசிக்கத் தெரியா மனிதன்
நேசமற்ற மனிதன் உள்ளத்தில்
நாளும் தாவும் குரங்கு-மனிதன்
நிம்மதி மறந்த விலங்கு

காணும் காட்சிகள் அவலங்கள்
கண்டும் காணா உள்ளங்கள்
தேசம் தோறும் சண்டைகள்-மனிதமே
தேடிக் காணா உண்மைகள்

வெறுமையான மனித உள்ளம்
வேதனையில் தவிக்கும் இல்லம்
வீண்பேச்சு சந்தேகம் விவாதம்-இன்று
விதியல்ல இது மெல்லோர்க்கும்

பணமில்லை சிலருக்கு வாழ
குணமில்லை கொடுத்துமே உதவ
தினம் வருகின்ற தேவையே-என்றும்
தீராத ஆசை நோயே

மனமே மீண்டும் வருந்தாதே
மனிதனின் நிலையால் கலங்காதே
குணமே இதுவென வழுவாதே-எல்லா
குறைகளும் தீர்த்திடும் உணர்ந்தாலே


(கவியாழி)

Tuesday, 28 January 2014

சாலை விதியை மதிப்பீரே

       நவநாகரீக மாற்றத்தில் மக்களின் பொருளாதாரம், வாழ்க்கை வசதி ,
கல்வி,சுகாதாரம், வேலைவாய்ப்புகள் மற்றும் வாகனத்தின் பயன்பாடு தவிர்க்க முடியாமல் அனைவருக்கும் வாகனம் அவசியம்  என்ற நிலையாகிறது.நமது நெடுஞ்சாலைகளும்  நல்ல தரத்துடன் மாறி நல்லதாக இருந்தாலும் அதனால் ஏற்படும் கெடுதல்களையும் நாம் அனைவரும் உணரவேண்டும்


 இன்று எல்லோருமே பெரும்பாலும் சாலை விதிகளை கடைபிடிக்கிறோம் ஆனாலும் சில நேரங்களில் விபத்து நடப்பதை தவிர்க்க இயலாமல் போகிறது.இங்கு  குற்றம் குறைகளை தவிர்க்க ஒவ்வொரு தனி மனிதருக்கும் சாலையின் பயன்பாடு அவசியம் பற்றித் தெரிந்திருந்தாலும் அவசரம் என்ற அலட்சியத்தால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க முன்வரவேண்டும்.சாலைவிதிகளை அறிந்தும் தவறிழைத்தல் என்ற காரணமே விபத்துக்கு முக்கிய காரணமாய் இருக்கிறது.முந்திசெல்லுதல் ,தவறான இடத்தில் வண்டிகளை நிறுத்தி வைத்தல் ,மாற்றுவழியில் அவசியமற்ற வேகம்,
பாதசாரிகளின் ஒழுங்கற்ற சாலையைக் கடக்கும் முயற்சி, விலங்குகளை  சாலையில் திரிய விடுதல்  போன்றவையே முக்கிய காரணிகளாய் இருக்கிறது
தனி மனித ஒழுக்கமே சாலையில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க முடியும் .முறையான பயன்பாடு ,சாலை விதிகளைப் பற்றி அனைவரும் அறிய வைத்தல் அவசியமில்லாத  வேகம் ,சரியான இடத்தில் சாலைகளை கடப்பது ,போக்குவரத்து விளக்குகளை கவனித்து செல்லுதல் .முறையான அளவான வேகம் போன்ற முக்கிய காரணிகளே பெரும்பாலான சாலை விபத்துக்களைத் தவிர்க்க முடியும.


சாலை விதிகளை மதிப்பீர் நாளையும் எழுந்து நடப்பீர்.


(படங்களுக்கு நன்றி கூகிள்)

(கவியாழி)

Sunday, 26 January 2014

மனிதம் மனதில் இருந்தாலே......

மனிதம் இல்லா மனிதரையே
மாற்றம் செய்ய வையுங்கள்
மனதில் துளியும் அன்புடனே
மனிதனாக வாழச் சொல்லுங்கள்

செல்வம் அதிகம் சேர்ந்தாலே
செல்லும் வழியும் தடுமாறும்
சொல்லில் வார்த்தை  தவறாகி
சொந்தம் தள்ளி உறவாடும்

சொந்தமும் நட்பும் இல்லாமல்
சுகமாய் வாழ்க்கை வாழ்ந்தாலும்
செல்லும் வழியில் சிலரேனும்
சிரித்துப் பேசச் செய்திடுங்கள்

குற்றம் குறைகளை நல்லதை
குணத்தை மாற்றி வாழ்வதை
சுற்றமும் நட்பும் உணர்ந்ததை
சொல்லிப் புரிய வையுங்கள்

அருகில் இல்லா உறவுகளால்
அதிகத் துன்பமும்  வருவதையும்
அன்பே இல்லா மனிதர்களின்
அடைந்த நிலையை காட்டுங்கள்

மனித வாழ்க்கை உணர்வதற்கு
மக்கள் சூழ்ந்தே வாழ்வதற்கு
மனிதம்  மனதில் இருந்தாலே
மகிழ்ச்சி நிறைந்து வாழ்ந்திடலாம்


(கவியாழி)


Thursday, 23 January 2014

மகிழ்ச்சி இல்லா நேரத்திலே...

மகிழ்ச்சி இல்லா நேரத்திலே
மனதில் தோன்றும் எல்லாமே
மறைக்க முடியா தருணங்களாய்
மடியும் நிலைக்கு வந்துவிடும்

மலையும் கடலும் வானமும்
மரமும் செடியும் கொடியுமே
மனதில் பாரத்தைக் குறைத்திடும்
மகிழ்ச்சியை மீண்டும் தந்திடும்

தோழமைத் துணிவும் சேர்ந்ததும்
தொடரும் துன்பமும் விலகிடும்
தொடரும் நட்பின் ஆதரவால்
தொல்லைகள் மறைந்து சென்றிடும்

இதயம் உணரா மனிதருக்கும்
இனியவை செய்திடசொல்லிடும்
இன்பம் தந்திடும் செயல்களை
இனியும் செய்ய வைத்திடும்

கலக்கம் வேண்டாம் நண்பனே
கடவுள் போல வந்தேனும்
கருணை கொண்டு உதவியாய்
கடந்து செல்ல வைப்பார்கள்

(கவியாழி)
Monday, 20 January 2014

புத்தகத் திருவிழா2014-செல்லப்பா அவர்களுக்குப் பாராட்டு

நேற்று மாலை ஐந்து மணிக்கு திரு.செல்லப்பா அவர்களின் சிறுகதைத்தொகுப்பான "தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் ' என்ற புத்தகத்தை அய்யா.புலவர் .ராமாநுசம் அவர்களின் திருக்கரங்களால்  அகநாழிகை பதிப்பகத்தார் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பதிவுலக நண்பர்கள் பலரும் திரு.பாலகணேஷ் அவர்களின் கைபேசிவழித் தகவல் கிடைத்ததும் சிரமம் பார்க்காமல் வந்திருந்து திரு.செல்லப்பா அவர்களை வாழ்த்தியபோது எடுத்த சில படங்கள்.

நான் அறிமுகம் செய்து பேசியபோது  மிக கவனமாக உரையை கேட்கும் மெட்ராஸ் பவன்  சிவகுமார்,நம்ம புலவர்.ராமாநுசம்,எழுத்தாளர்.செல்லப்பா  மற்றும் மின்னல்வரிகள் பாலகணேஷ்பன்.ராமசாமி,ஸ்கூல் பையன் சரவணன்,ஆர்.வி.சரவணன்,தோத்தவண்டா ஆரூர் மூனா செந்தில்,இரவின் புன்னகை செல்வின்

அகநாழிகை புத்தக வெளியீட்டாளர்  பொன் வாசுதேவன்
உஷா ராமச்சந்திரன், புதுவைக் கவிஞர் உமா மோகன், பெருமிதக் கவிஞர் தேனம்மை ஆகியோர்களுடன்  பொன்வாசுதேவன்


வந்திருந்து வாழ்த்திய பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

(கவியாழி)

Sunday, 19 January 2014

கடவுள் போலச் சொல்வார்கள்

உதவி செய்ய வருவோர்கள்
உரிமையோடு  செய்வார்கள்
உணரும் துன்பம் யாவையுமே
உடனே தீர்க்கத்  துணிவார்கள்

எண்ணம் முழுதும் உண்மையாய்
என்றும் துணையாய் இருப்பார்கள்
எதிலும் உரிமை சொல்லியே
எளிதில் அன்பைப் பொழிவார்கள்

ஊரும் பேரும் தெரியாமல்
உற்ற நட்பு என்பார்கள்
உள்ளம் முழுதும் தெய்வமாய்
உணர்ந்துப் பழகி வருவார்கள்

இன்றும் நட்பாய் ஒருசிலரே
இப்படி மகிழ்ச்சி கொள்வார்கள்
இதயம் நிறைந்து எப்போதும்
இன்முகத்தோடு வாழ்வார்கள் 

கடமை என்றே எண்ணியே
கருத்தாய் செய்து முடிப்பார்கள்
கடந்து வந்து வெற்றியக்
கடவுள் போலச் சொல்வார்கள்


(கவியாழி)

Thursday, 16 January 2014

மகிழ்ச்சிக் கிடைத்தால் மறுக்காதே....

மகிழ்ச்சிக்  கிடைத்தால் மறுக்காதே
மறுத்துப் பின்னால் வருந்தாதே
புகழ்ச்சி மிகுந்து மயங்காதே
பிறகு மயங்கி துடிக்காதே

கிடைத்த வாழ்வைத் தொலைக்காதே
தொலைத்து விட்டுக் கலங்காதே
கிட்டும் வாய்ப்பை விலக்காதே
கலங்கி உயிரைப் போக்காதே

உழைத்து வாழ மறுகாதே
உயர்வு உனக்குக் கிடைக்காதே
ஓய்ந்து படுத்துக் கிடந்தேநீ
உறங்கி வாழ்வை இழக்காதே

தொடுத்த சொல்லால் துணையைநீ
தொடரும் சொந்தம் முடிக்காதே
தொலைத்து விட்ட வாழ்கையே
தேடிச் சென்றும் கிடைக்காதே

பெண்கள் கல்வி கொடுக்காமல்
பிறந்த வாழ்வைக் கெடுக்காதே
பிறப்பை தவறாய் நினைக்காமல்
படிப்பைத் இடையில் நிறுத்தாதே

கெடுத்தும் வாழ்வு வாழாதே
கெட்டப் பின்பு துடிக்காதே
கொடுத்து வாழ்ந்து மகிழ்ந்தாலே
கொடுக்கும் நன்மை உணர்வாயே?

Tuesday, 14 January 2014

பொங்கலைக் கொண்டாடுவோம் .....


உலகத்துத் தமிழரெல்லாம்
ஒற்றுமையாய்ச் சேர்ந்திருந்து
தமிழன்னை மகிழ்ந்திடவே 
தவறாமல் பொங்கல் வைப்போம்

நல்லோரை நாடிச் சென்று
நல்வாழ்த்து சொல்லிடுவோம்
நம்மக்கள் மனம்மகிழ
நாடிச் சென்று உதவிடுவோம்

புத்தாடை  தனையுடுத்தி 
புதுப்பானை பொங்கலிட்டு
தலைக்கரும்பு மஞ்சளுடன்
தலைவாழை இலைபோட்டு

உலகாளும் சூரியனுக்கும்
உழவனுக்கும் நன்றி சொல்வோம்
உயரும் வழி என்னவென்று
உள்ளோர்க்கு எடுத்துரைப்போம்Monday, 13 January 2014

பொங்கலே பொங்குக.....

தாத்தன் பாட்டிச் சொந்தங்களை
தமிழில் இல்லா வார்த்தைகளில்
பார்த்தே மகிழ்ந்தே சிரித்திடுவீர்
பாசம் கொண்டே அழைத்திடுவீர்

நேற்றும் நடந்தக் கதைகளையே
நேசம் கொண்டே பேசிடுவீர்
நேர்மை வீரம் சத்தியத்தை
நேரில் கண்டேப் பேசிடுவீர்

ஊரும் உறவும் உள்ளதென
உரிமைச் சொந்தம் நல்லதென
பேரும் புகழாய் வாழ்ந்திருந்த
பெரியோர் கதைகளைக் கேட்டுடுவீர்

வீரம் மிகுந்த தமிழர்களின்
வேட்கை நிறைந்தப் பாட்டுகளும்
வீதியில் சூழ்ந்தே விளையாடி
விரும்பிப் பழகி மகிழ்ந்திடுவீர்

தாழ்ந்த உணர்வும் இன்றில்லை
தரணி முழுதும் கொண்டாடி
தமிழர் திருநாள் பொங்கலையே
தமிழர் அனைவரும் பொங்கிடுவீர்

மஞ்சள் கரும்புடன் படையலிட்டு
மாட்டையும் ஆட்டையும் வர்ணமிட்டு
பொங்கலை வைத்துப் படையலிட்டு
புகழ்ந்தே மகிழ்ந்தே வணங்கிடுவீர்

பொங்கலே பொங்குக என்றுரைத்து
பொழுதும் அனைவரும் சூழ்ந்திருந்து
மங்கள நாளில் ஒற்றுமையாய்
மகிழ்ந்தே சேர்ந்து சாப்பிடுவீர்


(கவியாழி)

Saturday, 11 January 2014

திருவாளர்.செல்லப்பா அவர்களின் சிறுகதைப் புத்தகம்
கிராமத்துப்  பின்னணி உள்ள இந்த அட்டைப் படத்தைப் பார்க்கும்போது இவர் கிராமத்தை விரும்பி ரசிக்கும் எழுத்தாளர்  என்பதும்  படத்திலுள்ள சிறுமி செல்வி.சம்ப்ரித்தா(அவருடைய பேர்த்தி)  இவரது உறவுக்கு அய்யனாரைப் போன்று பாதுகாவலராய் இருப்பார் என்பதும் தெளிவாகப் புலனாகிறதல்லவா?


இந்தப் புத்தகத்தில் உள்ள "சாந்தி நிலவ வேண்டும் " என்ற சிறுகதைக்காக பிரபா ராஜன் அறக்கட்டளையின் சார்பாகக் கலைமகள்  பத்திரிகை நடத்திய  சிறுகதைப் பரிசுபோட்டியில் இரண்டாம் பரிசு பெற்றபோது எடுத்த படம். மணிமேகலை பிரசுரமும் இணைந்து நடத்திய விழா.


                              ஹரணி
(முனைவர் க அன்பழகன்)
தமிழ்ப் பேராசிரியர்
அண்ணாமலைப் பல்கலைகழகம்,
சிதம்பரம்.

சொல்லியது............

    "ஒழுக்கமான படைப்புலகத் தர்மத்தோடு, மனிதநேயச் சிந்தனையோடு எடுத்துக் காட்சிப்படுத்துகிறார்  தன் உள்ள ஈடுபாட்டோடு, அர்ப்பணிப்போடு. ஒருமுறை வாசித்தாலும் பன்முறை பாராயணம் செய்துவிட்ட ஒரு பாடம்போல மனத்தில் தேங்கி மாற்றங்களை விளைவிக்கும் சிறுகதைகள்."இன்றைய புதிய தலைமுறை  எழுத்தாளார்களின் 
  அதிக புத்தகங்களை வெளியிடும் அகநாழிகைப் பதிப்பகத்தார்திரு இராய செல்லப்பா,  ராணிப்பேட்டையில் பிறந்து வளர்ந்து படித்து சென்னையில் குடியேறினாலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியான கார்ப்பரேஷன் வங்கியில் பணியில் இருந்த காரணத்தால் இந்தியாவின்  பல நகரங்களில் வசித்த காரணத்தின் வெளிப்பாடாய்   ஒன்பது கதைகளும், மேல்தட்டு வர்க்கத்தினர் வசிக்கும் அமெரிக்க நிகழ்வுகலைக் கொண்ட மூன்று கதைகளும் ஆக மொத்தம் பன்னிரண்டு கதைகளைச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

கவிதை எழுதுவதிலும் வாசிப்பதிலும்தமிழ் இலக்கியத்திலும் வல்லவரான கவிஞர்.இராய.செல்லப்பா அவர்கள்  ஏற்கனவே  "எட்டயபுரத்து மீசைக்காரன்", தலைநகரில் தமிழ்க்குயில்கள்" என்ற இரண்டு் நூல்களை தில்லியில் இருந்தபோது வெளியிட்டுள்ளார்.

கவிஞர் கதையாசிரியராக மாறினாலும் தனக்கு ராசியான எட்டு எண்ணுடன் எட்டு நபர்கள் மனைவி,மகள்கள்,மகன் மருமகள், பேரன்கள் பேத்தியையும் மறக்காமல் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் தனது மாமியார் ராஜலக்ஷ்மி சீதாராமன் அவர்களுக்கு அர்ப்பணம் செய்து  தனது உறவுகளையும் சொந்தங்களையும் அரவணைத்து செல்லவேண்டிய அவசியத்தை  எல்லோருக்கும் முன்மாதிரியாக இப்புத்தகத்தை வெளியுட்டுள்ளார்.

எனவே நண்பர்களே அனைவரும் புத்தகத்திருவிழாவில் அகநாழிகைப் பதிப்பகத்தில் சர்வதேச தரத்துடன் அச்சிட்டுள்ள இப்புத்தகத்தை  Rs.120  மட்டுமே  கொடுத்து வாங்கி படிப்பதுடன் உங்கள் உறவினருக்கும் நண்பர்களுக்கும் பரிசாக வழங்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்

(கவியாழி)

Thursday, 9 January 2014

மனிதநேயம் உள்ளவராய் வாழ்ந்திடுங்கள்அடுத்தவரின் குறையை எண்ணி
அனுதினமும் ரசிக்கதோன்றும்
படித்தறிந்த மானிடனே நீ
பண்ணுவது நல்லதில்லை

எடுத்தெறிந்து செய்வதனால்
ஏழுபிறப்பும் பாதித்ததாய்
படித்தறியா முன்னோர்கள்
பழமொழிகள் சொன்னார்கள்

பணம்காசு கொடுக்காமல்
பண்புகளை சொன்னாலே
குணம்மாறி வாழ்ந்திடுவான்
கும்பிடுவான் தெய்வமென

வழியின்றித் தவிப்போருக்கு
வயிற்றுப்பசி போக்கிடுங்கள்
வாழ்வதற்கு நல்லவழி
வணங்கும்படிச் செய்திடுங்கள்

நாளிதுவே வாழ்வதற்கு
நாளைக்குத் தெரியாது
நாளைவரை உடன்வருவார்
யாரேனவேத் தெரியாது

வேலைக்கு மாத்திரையும்
வேதனைகள் மறைவதற்கு
இருக்கும்வரை  மனிதநேயம்
இருப்பவராய் வாழ்ந்திடுங்கள்


Tuesday, 7 January 2014

நல்லவராய் வாழ்ந்திடுவோம்....

எண்ணத்ததைத் தூய்மையாக
எப்பொழுதும் வைத்திருந்தால்
எல்லோரும் மகிழ்ச்சியாக
இன்பமாக வாழ்ந்திடலாம்

சொல்லுவதைச் செயலாக்கி
சொன்னபடி வாழ்ந்திருந்தால்
செல்வமது நிலைத்திடுமாம்
சொந்தமெனத் தாங்கிடுமாம்

உள்ளமதில் கள்ளமின்றி
உண்மையாகப் பேசிவந்தால்
தொல்லையில்லா வாழ்க்கையாக
தொடர்ந்திடலாம் எப்பொழுதும்

அன்புடனே அறநெறியும்
அடுத்தவருக்கு உதவியுமே
இன்பமெனச் செய்திட்டு
இருப்பதையுமே கொடுத்திடலாம்

நண்பனையும் அன்புடனே
நன்னடத்தைச் சொல்லிவந்தால்
நன்றியுடன் இருந்திடுவான்
நல்லபடி வாழ்ந்திடுவான்

உள்ளவரை எச்செயலும்
உயர்வதற்காய் செய்தாலும்
நல்லவையே செய்திடுவோம்
நல்லவராய் வாழ்ந்திடுவோம்

(கவியாழி)Sunday, 5 January 2014

தவறிய அழைப்பு மிஸ்சுடு கால்.(Missed call)

                       தவறான அழைப்பு       (Missed call ) இதைப்பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.தவறிய,தவறான,அவசியமில்லாதது போன்ற அழைப்புகள் சில நேரங்களில் எரிச்சலையும்  கோபத்தையுமே தந்தாலும் சில நேரங்களில் போதிய கையிருப்பு இல்லாமை அல்லது அலைவரிசை பிரச்னை போன்றைவையும் காரணமாய் இருக்கிறது.ஆனாலும் பெரும்பாலானவர்கள்  தவறிய அழைப்பு  வருவதை விரும்புவதில்லை.சிலர் இதை வாடிக்கையாக கொண்டிருப்பதும் உண்மையே.

இன்றைய நவீன காலத்தில் அவரவர் விருப்பத்திற்கேற்ப கைபேசி உபயோகித்து வருகின்றனர்.இதில் வயதோ,வசதியோ  வேறுபட்டாலும் விருப்பத்திற்காக,வசதிக்காக,அடுத்தவருக்காக  பல வண்ணங்களிலும் அதிக விலையிலும் வைத்துள்ளார்கள்.இங்கு கிராமமோ,நகரமோ பாகுபாடு இருக்கவில்லை.அவரவர் மனதைப் பொறுத்தே  உள்ளது. ஆனாலும்  இந்த தவறிய அழைப்பை பற்றி எல்லோருமே தெரிந்துள்ளனர்.

ஒவ்வொரு அழைப்பின்போதும் மகிழ்ச்சியை கொடுக்கும் கைபேசி அழைப்பு சில நேரங்களில்  சிலர் தவறான அழைப்பு  செய்வது மிகுந்த வேதனையும் கோபத்தையுமே ஏற்படுத்துகிறது.  பெரும்பாலும் உறவினரோ அல்லது நண்பர்களோ தவறிய அழைப்பு விடும்போது நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது ஆனால் வியாபார சம்பந்தமாக சிலர் இப்படி செய்வது கண்டனத்திற்குரியது. இதை  TRAI  என்ற தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் தவறென்று சொன்னாலும் சிலர்  பொருட்படுத்தாமல் அழைப்பு விடுக்கின்றனர். இதைப் பற்றி சட்ட ரீதியான புகார் தெரிவிக்கலாம்.

பொதுவாக தவறான அழைப்பு விடுவது அநாகரிகமான செயல்  என்றால்  ஆம் என்றே பலரும் ஒப்புக்கொள்வார்கள்.உறவினரோ நண்பரோ பொழுதுபோக்கிற்காக  அவசியமின்றி உரையாட வேண்டியும் அல்லது  அடுத்தவரை பேச சொல்வதற்காக நம்மிடம் தவறான அழைப்புவிடுத்து சொல்வதும் தவறென்றே நினைக்கிறேன்.இதில் நேரமும் வீணாவதுடன் பணமும் செலவாகிறது..அதுமட்டுமன்றி  இன்னும் பேசும் மின் தொகுப்பு (Battery charge)  கால அவகாசம்  குறைகிறது  இதனால் அவசியமான முக்கியமான பேசவேண்டிய  இணைப்புகளும் தவிர்க்க வேண்டியதாய் உள்ளது.

நண்பர்களுக்கோ,உறவினர்களுக்கோ அழைப்பு செய்யும்போது அன்போடு சிறிய தொகையும் சேர்த்து  செலவிட்டு மகிழ்ச்சியாய் அன்பை பகிரலாமே.மேலும் அவசியமில்லாத காலநேரத்தை விரயமாக்கும் இதுபோன்ற தவறைச் செய்யாமல் இனி தவறான அழைப்பைத் தவறியும்  கொடுக்காமல் இருந்தால் மேலும் உங்களின் மேல் நல்ல அபிப்ராயம் ஏற்படும் என்பதை உறுதியுடன் பகிர்கின்றேன்.Friday, 3 January 2014

மலரும் தேனைத் தருவதில்லை

மார்கழி மாதத்தில் வண்டுகள்
மலர்களைத் தேடி வருவதில்லை
மலரினில் சேர்ந்திடும் பனியினால்
மலரும் தேனைத் தருவதில்லை

பனியும் அதிகம் பெய்வதாலே
பூக்களும் அதிகமாய் பூப்பதில்லை
பெண்களும் பூக்களை நினைத்தே
பொழுதும் மகிழ்ச்சியாய் இல்லை

பனியில் தேனிகள் வருவதில்லை
பகிர்ந்தே மகரந்தம் செல்வதுமில்லை
அதிகப் பனியால் ஆண்களுக்கும்
அதற்கும்  இப்போ விருப்பமில்லை

ஆக்கல் குறைந்த காரணத்தால்
அழித்தலை ஆண்டவன் செய்வதால்
அதனால் மக்களில் பலபேர்
ஆலயம் செல்வதே உண்மை

வருடக் கடைசி  உனக்கும்
வரவு செலவு உள்ளதோ?
ஏனிந்த வேதனை இறைவா!
இதுவும் உனது செயலா?

Wednesday, 1 January 2014

சின்ன சின்ன மொட்டுகளே

சின்னச் சின்னப் பிள்ளைகளே
சிரித்து மகிழும் முல்லைகளே
வண்ணப் வண்ண பூக்களைப்போல்
வந்தே சிரிக்கும் வாண்டுகளே

நல்ல  நல்ல கதைகளை
நாட்டில் நடக்கும் செய்திகளை
வானில் மின்னும் நட்சத்திரம்
வட்ட நிலவைப் பற்றியுமே

தேனாய் இனிக்கும் வார்த்தையிலே
தினமும் சொல்லி வந்திடவே
தோளில் ஏறித் தினந்தோறும்
தொல்லை செய்யும் செல்வங்களே

குருவிக் காக்கை கொக்குபோல்
குனிந்தும் தாவியும் ஆடவைத்து
குழவி குழவி மகிழ்ச்சியாக
கொள்ளை கொள்ளும் உள்ளங்களே

எல்லை இல்லா கேள்விகளை
எளிதில் புரிந்தே தெரிந்திட்டால்
கொள்ளை இன்பம் கொண்டேநீ
கொஞ்சி நன்றி சொல்வீரே


2014 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்

^^^^^^கவியாழி^^^^^^^