Showing posts with label /பழமொழிகள்/சமூகம். Show all posts
Showing posts with label /பழமொழிகள்/சமூகம். Show all posts

Thursday, 24 January 2013

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

மேலே கண்ட பழமொழி எல்லாத  தமிழ் மக்களுக்கும் தெரிந்த ஒன்று.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள்  ஒரு சில நாட்களில்  இப்படி எண்ணி வருந்துவதுண்டு.இது நமது கலாச்சாரம் மட்டுமல்ல உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் ஏற்படும் நிகழ்வும் உண்மையும் கூட.

சிறிய வயதில் பள்ளி செல்லும்போது பார்த்து பத்திரமாய் திரும்பி வா சாலையை கடக்கும்போது இருபுறமும் பார்த்து  வா என்றும். பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டயா ? பள்ளியில் என்ன பாடம் நடத்தினார்கள்  என்றும் அக்கறையோடு விசாரிப்பார்கள் அப்போது நல்ல பிள்ளையாக எல்லாவற்றையும்  ஒன்று விடாமல் சொல்லுவார்கள்.

அதே பிள்ளை கல்லூரிக்கு போகும்போது  நீங்க பத்திரமாய் அலுவலகம் சென்று வாருங்கள் சரியா சாப்பிடுங்கள்என்றும் நான் வீடு திரும்பி  வரும்போது  உங்களுக்கு  ஏதாவது வாங்கி வரட்டுமா என்பது போன்ற  அக்கறையும் அன்பில் முதிர்ச்சியும் தெரியும்.பண்புடன் நடந்து கொள்வார்கள்.
எதிர்காலம் பற்றிய யோசனையையும் கேட்பார்கள்..

வேலைக்கு செல்லும்போது அன்பிற்கு குறைவிருக்காது ,நாம் சாப்பிட விரும்பும்,  விரும்பாததையும் வாங்கி வந்து  நம்மோடு பகிர்ந்துண்டு மகிழ்வார்கள்.சரியாக  ஊதியத்தையும் நம்மிடம் கொடுத்துவிட்டு  செலவுக்கு பணம் கேட்பார்கள். அவ்வளவு பாசமும் நேசமும் பக்தியும் இருக்கும்.நாமும் பெருந்தன்மையாக  செலவுபோக மீதியை வங்கியிலோ  அல்லது முதலீடு செய்ய சொல்லியோ அறிவுறுத்தினால் அதையும் தட்டாது கேட்டு முறைப்படி செய்வார்கள்.

அடுத்தது திருமணம்  இப்போதுதான் நம் அவர்களுக்குள்ள  சுதந்திரத்தை உரிமையை அன்பை பாசத்தை விட்டுக் கொடுக்கும் மன நிலைக்கு நம்மை நாமே தயார்படுத்தி திருமணம் செய்து வைப்பதுவரை கடமை என்ற நிகழ்வில்  நம்மை ஈடுபடுத்திப் பின் அவர்களை தனிமைபடுத்தி விடுகிறோம். குடும்பம் உறவுகள் கடமைகள்  என்ற பந்தத்தை ஏற்படுத்தி விலகி நிற்கவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு வருகிறோம்.

இவ்வளவும் நம்மை நமது பிள்ளைகளுக்காக நம்மை நாமே மனதளவில் ஈடுபடுத்தி அன்புடன் பாசத்துடன்  நம் பிள்ளையே என்றுதான் அனைத்தையும் செய்கிறோம்.அப்படியும் செய்யாத கடமையிலிருந்து தவறும் பெற்றோரும் உண்டு அவர்கள் இவ்வாறான  பந்த பாசத்திற்கு விதிவிலக்கானவர்கள்.சில கட்டாய தவிர்க்க இயலாத சூழ்நிலையில்  இவ்வாறு  இருக்கும் பெற்றோரும் உண்டு.

திருமணம் முடிந்து ஒன்றிரண்டு குழந்தைகள் ஆனபின்பு  அவர்களின் போக்கு மாறியிருக்கும்  அதாவது மனைவி சொல்லே மந்திரம் என்றும் நானும் குடும்பஸ்தன் என்ற பொறுப்பும் அக்கறையும் வந்துவிடும்.அப்போதுதான் தனக்கு தன் குடும்பத்திற்கு  என்ற மனமாறம் ஏற்பட்டு  பெற்றவர்களை விலக்கி வைக்கும் சூழ்நிலைக்குத்  தள்ளப்படுகிறார்கள். மேலும் பணம் சம்பாதிக்க குடும்பத்துடன் வெளியூர் அல்லது வெளிநாடு  சென்று தங்கும் சூழ்நிலை ஏற்படும்

இவ்வாறான சமயங்களில் எதையும் ஆலோசிக்காமல் தனிப்பட்ட முடிவெடுப்பது வயதான பெற்றோர்களை மனம் குமுறவைக்கும்.
அவ்வாறான  நிகழ்வே பிள்ளைகளையும் பெற்றோரையும் பிரிக்கிறது. அதனால் தனிக் குடித்தனம் செல்வார்கள்.அப்போது பெற்றோர் தனிமைபடுத்தி மனம் கலங்கி வருத்தமடைவார்கள்.அப்போதுதான் குடும்ப உறவுகள் பிரிக்கப்பட்டு விடுகிறது.

தனியாக ஏன் கஷ்ட படுகிறீர்கள் நீங்கள் ஏன் முதியோர் இல்லம் செல்லக்கூடாது? அங்கு எல்லா வசதியும் இருக்கிறது,நானும் அடிக்கடி வருவேன் என்றும் அப்படி  வர இயலா விட்டாலும்  கட்டணத்தை கட்டி விடுகிறேன் என்றும் அக்கறையாக சொல்லுவார்கள். அல்லது கவனிக்காமல் உங்களது ஓய்வூதியத்தில் கட்டிவிடுங்கள் என்பார்கள்.

இப்போதுதான் பிள்ளை மனம் கல்லாகிவிடுகிறது.பெற்றோரின்மேல் அக்கறை இருந்தாலும்  பணம் என்னும் சூத்திரதாரி   பாசத்தை விலைப்பேசி "பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு" என்ற  பழமொழியின்  உண்மையான அர்த்ததை உணர்த்துகிறது.
 இப்பழமொழி இன்று நேற்று அல்ல காலங்காலமாய் சொல்லில் இருப்பதுதான்.ஏன் நாளையும் இது தொடரும் என்பதில் ஐய்யமில்லை.

Friday, 28 December 2012

பழமொழிகள்-இறைக்கிற கிணறுதான் சுரக்கும்

இறைக்கிற கிணறுதான் சுரக்கும்

       "கிணற்றில் நீர் இறைக்க இறைக்க மீண்டு தண்ணீர் ஊறுகிறதோ அது போல நாம் அடுத்தவருக்கு உதவி செய்ய செய்ய நமக்கு கிடைக்கும் என்று அர்த்தம் "

        எங்கப்பா அடிக்கடி சொல்லுகின்ற வார்த்தை இது ,ரொம்பநாளா எனக்கு இதை பத்தி தெரியவே இல்லை ஏதோ பழமொழி சொல்லுகிறார் எனவும் பொழுது போக்கா சொல்லுகிறார் என்று நினைச்சிருந்தேன்

        ஒருமுறை எனக்குசெலவுக்கு காசில்லை அப்போ நான் ஏன்ப்பா இருக்கறப்ப நான் எல்லாத்துக்கும் கொடுக்கிறேன் இப்ப காசில்லாமல் இருக்கும் இந்த நேரத்திலும் என்னை பணம் கெட்டு தொந்தரவு பண்றாங்க எனக்கு இருக்கிற கஷ்டத்தை விட அவங்களுக்கு கொடுக்க முடியவில்லையே என நினைக்கும் போது எனக்கு வருத்தமாய் உள்ளது என்றேன்

         ஒரு இரண்டு மணிநேரம் என்னையும் என்னுடைய மன நிலையையும் கவனிச்ச அவர் , என்னை கூப்பிட்டார்  நான் அருகில் சென்று அமர்ந்தேன் அப்போ "இத்தனை நாளா  கையில இருக்கும்போது எல்லோருக்கும் நீ கொடுத்த அப்ப எல்லோரும் சந்தோசமா வாங்கினாங்க அதைத்தான் இப்பவும் உன்கிட்ட எதிர்பாக்கிறாங்க",தப்பு உன்னுதும் இல்லை அவங்கமேல குறை சொல்லவும் முடியாது ஏன்னா  கொடுக்கறது உனது சுபாவம் வாங்கறது அவங்க வாடிக்கை என்றார்.

         சரி, உனக்கு ஒரு யோசனை சொல்லுறேன் நீ ஏன் இப்போ அவங்களிடம் கேட்டுப்பாரேன் என்று சொன்னார் .எனக்கு ஒண்ணுமே புரியலை யாரிடம் கேட்பது கேட்டா கொடுப்பாங்களா மாட்டாங்களா என்று எனக்கு சந்தேகம் தயக்கமாய் இருந்தது ,எனக்கு இன்னொரு யோசனை தோன்றியது முதலில் அம்மாவிடம் கேட்கலாமா அல்லது அப்பாயே கேட்டு பார்ப்போமே என்று
யோசிக்கும்போதே அவரே எனக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தார்,

        அப்போதான் அவர் என்னிடம் இந்த பழமொழியை சொன்னார் ,உன்னிடம் பணம் உள்ளபோது  நீ அடுத்தவருக்கு உதவி செய்தால் மீண்டும் உனக்கு கிடைக்கும் ,நான் பணம் தராவிட்டாலும் மற்றவர்கள் உனக்கு  தானாக அவர்களே முன்வந்து உதவி செய்வார்கள் நீ கொடுத்த பணத்தில் சிறிதளவாவது உனக்கு மீண்டும் கிடைக்கும் என்றார்.

         அப்புறம் அக்கா,மமா மச்சான்  என்று அவர்களாகவே  முன்வந்து  பணத்தை வைத்துகொள் என்று திணித்தார்கள்.எனக்கு மிகப்பெரிய சந்தோசம் .அப்பத்தான் என் அப்பா தூரத்திலிருந்து பார்த்து சிரித்தது தெரிந்தது.அடிக்கடி அவர் சொல்லிவந்த பழமொழியின் அர்த்தமும் புரிந்தது

    நாம் மனமுவந்து எல்லோருக்கும் உதவி செய்தால் தானாகவே நமக்கு மீண்டும் உதவி கிடைக்கும் அல்லது அதற்கான சூழ்நிலையும் அமையும் .என்பதுதான் பழமொழியின் சாராம்சம்.