Wednesday, 18 March 2015

குறள் வெண்பா

ஏனிந்த நாட்கள் இனிமை இழந்திங்கு? 
நானெங்குப் போவேன் நவில் 

பூமானே! பெண்ணே! பூத்தமுதே! வந்தெனக்குத்
தா..மானே இன்பம் தழைத்து!

திடுக்கிட வைத்த தொடரைப் பார்த்து
நடுங்கியே சென்றேன் நகர்ந்து!

உறவுகள் சோ்பணம் உள்ளவரைத் சேரும்!
சிறப்புகள் போகும் சிதைந்து

தலைகுனிந்து நிற்கின்றேன்! தாயே அருள்செய்! 
நிலையறிந்து காப்பாய் நிலத்து!

சொல்லாலே இன்றும் சுடுகின்றாய்! வாழ்நாளில் 
இல்லா நிலைஇஃது எனக்கு

இனத்தின் பெயரால் இடும்பை தொடரும் 
பணமே படைக்கும் பழி 

இறைவன் இருந்திங்கு மக்களைக் காத்தால்
குறைகள்  வருமோ குவிந்து? 

தாரணியில் போற்றித் தமிழை வளர்க்கின்ற 
பாரதி தாசனைப் பாடு!

Monday, 16 March 2015

அருகிலே இருந்தும் அறிவில்லாக் கூட்டாளி

அப்பன் பங்காளி அவனுமே எதிராளி
அருகிலே இருந்தும் அறிவில்லாக்கூட்டாளி
சுப்பன் வந்து சண்டை போட்டால்
சுருக்கெனக்கோபமாய்ச்சொந்தமென வருமாம்!

வசிக்கும் இடத்திலே வறப்புச்சண்டையிட்டு
வருவோர் போவோரிடம் வசையான சொன்னாலும்
கசக்கும் வார்த்தையால் கண்டபடி திட்டினாலும்
பசிக்கும் நேரத்திலே பங்கிட்டு உண்பாராம்

ஆடுகளும் மாடுகளும் அருகே சென்றாலே
அதையும் விரட்டி அங்கிருந்து துரத்தி
ஓடிச் சென்று ஓடோடி விரட்டிடுவான்
ஓய்ந்த நேரம் உட்கார்ந்து பேசிடுவான்

உழவுக்கு ஏர்பிடித்து உரிமையுடன் சென்றாலும்
ஊருக்கு தெரிவதுபோல் உறக்கப் பேசிடுவான்
இழவுக்குச் சென்றாலும் இணைந்தே போனாலும்
இருப்பிடமே வந்தவுடன் இணைபிரிய மாட்டானாம்

கிணற்றிலே நீரைக்காலமாய்ப் பங்கிட்டுக்
கீழ்வயலில் பாத்தியிட்டுக் கீரைகளை விதைத்து
பணத்திலே சரியாய்ப்பங்கும் தருவானாம்
பங்காளி என்றழைத்துப் பாசமுடன் இருப்பானாம்

உழைப்பவன் மட்டுமே உடனடி சச்சரவை
ஊராரும் மெச்சும்படி உடன் பங்காளியென
உரிமையுடன் சண்டையிட்டு உடனே கூடுவான்
உலகமே வியக்கும்படி உரிமை கொண்டாடிடுவான்!


(கவியாழி)


Friday, 13 March 2015

பார்த்ததும் திண்பதை நிறுத்து!

உறவுகள்  எனக்கு உதவி செய்யாது
உணர்தவர் கண்டும் உண்மை சொல்லாது
பிரிவினால் மனதில் பித்தம் பிடித்தேன்
பிரிந்தவர் சொல்லும் காரணம் கேட்டே!

வயிற்றில் கண்டதை விழுங்கி யதனால்
வந்ததை உண்பதும் வாழ்வைக் கெடுக்க
பயிற்சி தேவையா பலனேதும் உண்டா?
பார்த்ததும் திண்பதை நிறுத்து!

கொஞ்சிப் பேசும் கொழுந்தி யவளைச்
கிஞ்சித்தும் இடம் கிடைக்க வழியின்றி
வஞ்சித்துப் போகும் வாழ்க்கைத் துணையை
வார்த்தை யுண்டோ  வைய?

அந்த நாளில் கண்டதைத் தேடி
அலைந்த நட்பு அடங்காமல் இன்றும்
நொந்தக் கதையை நான் கேட்டே
நொடிந்தே கடிந்தேன் இன்றே

கண்ணும் இமையும் கலந்து பேசி
கண்ணன் வரவைக் கண்ட பின்னே
விண்ணைப் பார்த்து வீதியைக் காட்டி
விடுகதை போட்டது எதற்கோ?


(கவியாழி)

Tuesday, 10 March 2015

எனது 25 வது திருமண நாள் 10.03.2015

கடந்த வருடங்களில் கண்ட மகிழ்ச்சி
களிப்பூட்டிய நாட்கள் கணக்கி லடங்கா
கடனாகக் கிடைத்த கனிவான சொந்தங்கள்
கண்டதும் இன்பங் கொண்ட நட்புகள்

தொடந்த துன்பங்கள் தொலைத்த இன்பங்கள்
துரத்தி வந்தாலும் தாங்கினேன் நேசித்தேன்
அடர்ந்த மனதிலே அன்றாடம் பூசித்தேன்
அம்மா அப்பாவை அளவின்றி யாசித்தேன்

வெறுப்பேற்றி சென்ற  வீதிவழி உறவுகள்
வீணாய் சண்டையிட்ட வீண்பேச்சுக் காரர்கள்
பொறுப்பின்றி உறவாடி போய்விட்ட நண்பர்கள்
போதையைத் தூண்டிய பேதைகள் இருந்தும்

பணம்காசு சேர்க்காமல் பல்லிளித்துச் செல்லாமல்
பதவியிலே தன்மானம் பறந்தெங்கும் போகாமல்
குணம்மாறி சிறிதேனும் குற்றங்கள் செய்யாமல்
குடும்ப உறவாக குறைவின்றி காத்திட்டேன்

உறவுகள் என்னிடம் உதவி கேட்டால்
உடனே செய்வேன் உறவையும் காத்தேன்
பிரிவுகள் ஏற்பட பிணையின்றி செய்ததே
பின்னாளில் தெரிந்தேன் பிரிவையும் தாங்கினேன்

நட்புக்கு நான்தந்த நாட்களோ குறைவில்லை
நாள்தோறும் மறக்காமல் நன்றியுடன் தானிருந்தேன்
உட்பக்க இதயத்தில் ஓரிடத்தில் வைத்தும்
உளமார தொடந்தும் ஒதுங்கிச் சென்றார்

இக்கால வாழ்கையில் இடையூறு வந்தாலும்
இனிமேலே துன்பங்கள் தொடர்ந்து வராமல்
சிக்கலைத் தீர்த்து சிரித்து வாழவே
சிறப்பான வாழ்த்துக்கள் சொல்ல வருவீரோ
(கவியாழி)Tuesday, 3 March 2015

"காளியூட்டு " நாவல் அறிமுகம்-சிறு குறிப்புகள்

      கடந்த வாரம் 24.02.2015 அன்று தமிழ் புத்தக நண்பர்களால்  ஆழ்வார்பேட்டையில்  உள்ள " TAG " சென்டரில்  இந்நூல் அறிமுக விழா நடைபெற்றது .  எழுத்தாளர் திருவாளர்.மா.அரங்கநாதன் எழுதிய இந்நாவலை காவ்யா வெள்ளிவிழா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் இரண்டாவது நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.

"பழந்தமிழ் வீரியமும் புதுமையும் இயைந்த மொழிநடை ,சொற்களைச் செதுக்கி சொற்களுட்புகுத்தும் தனித்துவம்  கொண்ட ஆளுமையில் " படைக்கப் பட்டிருக்கிறதுஅய்யா நா. கந்தசாமி அவர்கள் அணிந்துரையில் குறிபிட்டது:

   நூலாசிரியர் சிறு கதைகளிக் கவிதை மாதிரியே  பண்டைய மரபின் படி யெழுதியுள்ளார்."அறிய அறிய அறியமுடியாத அளவில் மர்மமும் புதிருங்கொண்டு இருப்பது" ,"வாழ்க்கைப் போலவே எளிதாகவும்-புரிவது மாதிரியே புரிபடாமலும் " என்று அவர்தம் குறிப்பில் சொல்லியுள்ளார்.


திருவாளர் .மாசிலாமணி,கலைஞன் பதிப்பகத்தார் சொன்னது;

"மண்ணோடும் மரபோடும் வாழ்க்கையின் யதார்த்தம் மேலோங்குகிறது.இவர் எழுத்து இயல்பு சொற்களுக்கு ஊடாக மனோதத்துவ ஒலி ஊடுருவிக் கொண்டிருக்கும்"

முனைவர்.எழுத்தாளர்.தமிழச்சி தங்கபாடியன் ஆய்வுரையில் சொன்னது;
ஒரு எழுத்தாளருக்கு இன்னொரு படைப்பாளியின் பாராட்டுக் கிடைப்பது அரிதான ஒன்று ,பண்முகங்கொண்ட  எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் இன்னொரு எழுத்தாளரின் எழுத்தாளுமைத் திறன்பற்றி ஒரு பெரிய பாராட்டுப் பத்திரமே (44 நிமிடங்கள் )வாசித்த ஒவ்வொரு நிமிடமும்  புதுப்புதுச் சொற்களை பயன்படுத்தினார் , ஆம் .நூலாசிரியரின் வார்த்தை ஜாலங்களை விட இவரின் ஆய்வுரையில் நல்லத் தமிழ் சொற்களை பயன்படுத்தியிருந்தார் 


நூலாசிரியர் இறுதியாக ....
தான் கிராமத்திலிருந்து வந்தவன்  என்றும் ,இன்னும் எனது கிராமத்தின் மீதான  அக்கறை இருப்பதாகவும் ,இந்நூல் நாஞ்சில் நாட்டின் பற்றியதாகவும்  இதில்  குழுவன்,ராப்பாடி,கோமரத்தாடி  போன்றோருடன் முத்துக் கருப்பனின் பாத்திரம் மேலோங்கி இருந்ததாக குறிப்பிட்டார்.இந்த கதையில் பிராமணனை விட சாதிவெறி அதிகமாய் இருப்பதை கதையாசிரியர்  கூறினார். 

79 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் பழமையான சொற்களைக் கையாண்டிருப்பது நூலாசிரியரின் புத்தக வாசிப்பின் அனுபவத்தையும்  பல நூல்களை படித்து  வார்த்தைகளை கையாண்ட விதம் குறித்து நூல் குறிப்பில் எழுதியுள்ளார்.கவித்திறன் கொண்ட வார்த்தைகளால் நூலின் ஒவ்வொரு பக்கமும் புதுப்புதுச் சொற்களை காண முடிகிறது.

--கவியாழி--