Wednesday, 28 May 2014

இந்த நிலைக்குக் காரணம் யார்?

வனமும் வனப்பையும் இழந்ததால்
வனத்தின் நிறமும் மாறுமாம்
வானமும் இயல்பை மாற்றியே
வானத்தின் தன்மையும் கூடுமாம்

எல்லா இடமும் வெளிச்சமாய்
எங்கும்  வெய்யில் எரிக்குமாம்
ஏரிக் குளமும் வற்றுமாம்
எரிச்சல் அதிகம் இருக்குமாம்

பொல்லா நிலையால் பலபேரோ
பொசுங்கி மடிந்தே விழுவாராம்
பொழுதும் கழிந்தால் மட்டுமே
பொறுத்தே வெளியில் வருவாராம்

இந்த நிலைக்குக் காரணம்
இழந்த மரங்கள் அதிகமாம்
இதையே நாமும் அறிந்தேனும்
இனிமேல் மரங்கள் வளர்க்கணும்

மழையும் நன்றாய் பெய்யுமாம்
மரங்கள் அடர்ந்து வளருமாம்
மக்கள் துயரம் நீங்கியே
மக்கள் மனமும் குளிருமாம்

வானம் மகிழ்ந்தே குளிர்ச்சியாய்
வருடம் முழுக்க பெய்யுமாம்
வாழ்வில் இதையே  மகிழ்ச்சியாய்
வானத்தைப் பெருக்கிக் காக்கணும்


=====கவியாழி=====


Wednesday, 14 May 2014

உண்மை வாழ்வு...

முதுமையைத் தேடி செல்பவர் யாரோ
முறையாய் அதையும் தடுப்பவர்  உளரோ
மூன்றும் மூன்றும் ஒன்பதைத் தவிர்க்க
முடிந்தால் கணக்கை மாற்றிடத் துணிவோ

காலைமாலை என்பது உண்மை என்றால்
கடவுளும் செயலும் நம்பிக்கை என்றால்
நேரமும் பொழுதும் மாறுதல் நன்றாம்
நிம்மதியைக் கெடுப்பது மட்டும் எதனால்

சொல்வோர் சொல்லும் சொற்கள் யாவும்
சொல்லா நிலையில் தவிர்த்திட முடிந்தால்
எல்லோர் வாழ்வும் நிம்மதி கொண்டே
எளிதில் சொல்லால் மடிந்திட மாட்டார்

அவரவர்  வாழ்கையை வாழ்ந்திட நினைத்தால்
அவரால் முடிந்தால் உதவிகள் செய்தால்
அன்பும் அறமும் ஓங்கி வளர்ந்ததால்
அகிலம் முழுதும் அன்பே வாழும்

படைப்பில் நிறைய அர்த்தங்கள் உண்டு
பகலும் இரவும் செய்யும் நிகழ்வால்
கிடைக்கும் மகிழ்ச்சி நிலைப்பது போல
கிடைத்த அனைத்தும் மகிழ்ச்சியே என்று


(கவியாழி)


Monday, 12 May 2014

புருசனையே காவல் வைத்து.....

தண்டசோறு தின்னாலும் புருஷன்
தன்னருகே வேண்டுமென்றும்
தன்குடும்பம்பிள்ளையோடு
தானும் வாழ்க்கை வாழ வேண்டி

ரெண்டுவேளைக் கோவிலுக்கும்
ராப்பகலாய் வேலை செய்தும்
கண்டவரும் மெச்சும்படியும்
கண்கலங்கா வைத்திருந்து

பெண்டுபிள்ளை இந்த காலத்தில்
பத்தினியாய் வேலைசெய்து
பிள்ளைகளைக் படிக்க வைத்து
புருசனையே காவல் வைத்து

கண்டதையும் திண்ணாமல் வீட்டில்
காத்திருக்கும் வீட்டுக்காரன் பிள்ளைக்குமாய்
சொத்துபத்து சேர்த்து வைத்து
சொன்னபடி கடனைக் கட்டியே

உண்ண மறுத்தாலும் தொடர்ந்து உழைத்து
உறங்க மறந்தாலும் குடும்ப நலனாய்
எண்ணம் முழுதும் கணவன் வாழ
எல்லா கோவிலுக்கும் செல்வது முறையா


(கவியாழி)


Friday, 9 May 2014

விதியா? விஞ்ஞானமா?

எல்லா நொடியும் செல்வதுபோல
எல்லோர் மனமும் செய்வதுபோல
சொல்லா நிலையில் செய்ததுபோல
செய்தால் தவறும் இருந்திடாதோ

நல்லது என்றே நாளும் செய்து
நடப்பவை அனைத்தும் நல்லதே என்றும்
நாட்கள் முழுதும் செய்யும் செயலில்
நலிந்த செயலும் உள்ளது  முறையா

மதிதான் சொல்லும் செயலை செய்து
மக்கள் மனதில் இடமும் பிடித்தும்
மறந்தும் செய்யும் செயலை எண்ணி
மறுபடி எண்ணி வருத்துதல் தவறா

பிணியைப் போக்க மருந்தும் உண்டு
பிழையாய் அதனால் நிகழும் செயலும்
துணையாய் எண்ணி மருத்துவர் ஏனோ
தொடர்ந்து இன்னும் கொடுத்தல் நன்றோ

எல்லோர் மனமும் ஏக்கம் இன்றி
எல்லா தினமும் மகிழ்ச்சி கொண்டால்
பொல்லா நிலையும் அன்றி வாழ்ந்தால்
பொழுதும் விதியை மறுத்து வாழ்வோம்

விதியென்று நான் நம்ப மறுத்தும்
விளையாட்டாய் எண்ணி தவிர்த்தால்
விஞ்ஞானம் ஏன் என்னைத் திருத்தி
வீண் செயலை ஏன் தடுக்கவில்லை


(கவியாழி)

Wednesday, 7 May 2014

விதியின் செயல்......

சிறிதாய் மனதில் காயம் பட்டாலும்
சிதறி ஓடுமாம் சில்லறை போல
பெரியோர் மனதும் வெம்பித் தவித்து
பெரும் வேதனையில் வெந்தே போகுமாம்

வருவோர் துயரம் அறியாமல் தெரியாமல்
வந்ததும் சொல்லும்  வார்த்தை யாலும்
பெரிதாய் ஏதும் மாற்றமும் மின்றி
பெருகியே வருந்தியே  கடனாய்ச் சேர்க்கும்

உரியோரும் உற்றாரும் சொன்னால் கூட
உதவிக்கு உழைப்பையும் தந்தால் கூட
பணமும் பொருளும் கொடுத்தாலும் கூட
படைத்தவன்  வந்தாலும் தோஷம் தீருமா

எல்லோர்க்கும் வந்திடும் இந்த நிலை
எப்படி தீர்ந்திடும் எப்போது மாறிடும்
தப்பாமல் தவம் செய்தாலும் மாறா
தங்கியே கடனை தீர்க்கும் மாயை

விதியாய் வந்ததாய் சொல்வார் சிலர் 
விரைவில் தீர்ந்திடும் கடவுள் நினைத்தால்
மதியால் வெல்ல முடியா தருணம்
மனிதன் படைப்பில் யாவர்கும் பொதுவோ(கவியாழி)