Thursday, 11 December 2014

பிடிவாதம் மனநோயா? ஊனமா?

          பிடிவாதம் என்பது தவறோ சரியோ ஆனால் இது எல்லா வயதினரையும்  விட்டு வைப்பதில்லை. எப்போதாவது அல்லது எப்பவுமே பிடிவாதத்தையே  இயல்பாக கொண்டவர்கள் நிறையப்பேர் உள்ளனர். தான் சொல்வதுதான் சரி என்று வாதிட்டு அவர்களே தம்மைத்தாமே சரி என்று சுயநிர்ணயம் செய்து பிடிதளராமல் தான் நினைத்ததையே செய்வார்கள்.

         குழந்தைப்பருவத்தில் இருக்கும் பிடிவாதம் நாளாவட்டத்தில் எடுத்துச் சொன்னால் சரியாகிவிடும், போகப்போக தனது குணத்தை மாற்றிக் கொண்டு விடுவார்கள். ஆனால் சில குழந்தைகள் எப்போதும் அன்பாகப் பேசிப்பேசியே காரியத்தைச் சாதித்துக்கொள்ளும். அப்படிப் பிடிவாதமாய் இருக்கும் பிள்ளைகள் அப்பா அம்மா சண்டையிட்டுக் கொண்டால் இது நம்மால் வந்த பிரச்சனையோ என்று அஞ்சி பின்பு சரியாகி விடுவார்கள்.

          பத்திலிருந்து பதினைந்து வயதிற்குள் மாறி விடுவார்கள். இவ்வயதையும் தாண்டிய குழந்தைகள் அப்படியேதான் இருப்பார்கள். அதைப் பிறவிக்குணம் அப்பா,அம்மா மாதிரி  என்று பெற்றோரும் சமாதானமாகி விடுவார்கள். ஆனால் அது சரியல்ல. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழிக்கேற்ப மாற்ற முயற்சித்தால் நிச்சயம் மாறி விடுவார்கள். நாம் எதிர்மறையான எண்ணங்களை அதாவது நீதான் எங்களுக்கு எல்லா வழியிலும் உதவியாக இருக்க வேண்டும், உன்னைவிட்டால் எங்களுக்கு யார் இருக்கிறார்கள் என்பதுபோல் சொன்னால் மாறும் வாய்ப்பு உண்டு.

          என்னதான் சமாதானம், அறிவுரை சொன்னாலும் திருந்தாத  பிள்ளைகளை நிச்சயம் நல்ல மனநல மருத்துவரிடம் சென்று பார்த்து அவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம். இவ்வாறாக அறிவுறுத்துவது நல்லதெனவே எனக்குத் தோன்றுகிறது. ஆம் மாறும் வாய்ப்பு இருந்தால் மனமாற்றம் நல்லதுதானே. படிப்பிலும் நன்கு கவனம் செலுத்த உதவியாய் இருக்கும்.  அவர்களது வாழ்க்கைத்தரமும் மேம்படும்.

           இளமைக்காலத்தில் ஏற்படும் பிடிவாதம்  யாராவது ஒருவர் சொன்னால் நிச்சயம் மாறிவிடும். குறிப்பாக அப்பா அம்மா சொல்வதைவிட, தாத்தா பாட்டி சொன்னால் யோசிக்கும் வாய்ப்பு அதிகம். ஆசிரியரோ பெற்றோரோ சொல்வதைக் காட்டிலும் தாத்தா பாட்டியிடம் நிச்சயம் அன்பாய் இருப்பார்கள். அவர்கள் சொல்வதை மறுக்காமல் கேட்பார்கள். இன்றைய தினம் நாம் நமது பெற்றோரை நெருங்காமல், அவர்களிடம்  அன்பைச்  செலுத்தாமல், அவர்களது அறிவுரையை மதிக்காமல்,  நிம்மதியை இழந்து வாழ்ந்து வருகிறோம்.

          கூட்டுக்குடும்பத்தில்  பிடிவாதம் கொண்டோர் நிச்சயம் இருக்க மாட்டார்கள். காரணம் ஒற்றுமையும், உரிமையும், புரிதலும் இருக்கும். இணைந்து பேசி முடிவெடுக்கும் இயல்பு கூட்டுக்குடும்பத்தில் நிச்சயம் இருக்கும். அதனால் இன்னார் சொன்னால் இவர் கேட்பார் என்பதை அறிந்து அவரிடம் சொல்லிச்  சமாதானப்படுத்தி விடுவார்கள். எனவே கூட்டுக் குடும்பத்தை நாம் தொலைத்ததனால் நம்மை நாமே தனிமைப்படுத்திகொண்டு,  நமது சந்ததியினரும் அதன் அருமையை அறியாவண்ணம் இருக்கிறோம் என்பதை வேதனையாகவே  பதிவு செய்கிறேன்.

          கணவன் மனைவி பிடிவாதம் தவிர்க்க வேண்டியது. ஆரம்ப நாட்களில்  அதுவாகவே சரியாகிவிடும். ஆம், இருவருக்குமான நெருக்கம் மற்றும் தேவைகளினால் சரியாகிவிடும். இப்போதெல்லாம் இருவரின் வருமானம் தேவையென எல்லோருமே எண்ணுவதால் காலப்போக்கில் இருவருமே சமாதானமாகி விடுகிறார்கள். பணத்திற்காகவோ அல்லது  பிள்ளைகளின் நலனை முன்னிட்டோ சமாதானமாகி விடுகிறார்கள்.

         நடுத்தர  வயதில் ஏற்படும் பிடிவாதம் மனமுறிவையே ஏற்படுத்துகிறது. அதனால் வீணான சந்தேகம், அலட்சியம், கோபம் ஏற்பட்டு  விரக்தியில் ஆண்கள் குடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.  பெண்கள் தவறான எண்ணத்துடன் பிரிவு என்னும் வழிக்குச்  சென்று விடுகிறார்கள். இது சரியான வழி அல்ல. எல்லாப்  பிரச்சினைக்கும் தீர்வு சொல்ல விஞ்ஞான காலத்தில் வழியுண்டு.

         இப்போதெல்லாம் வயதான காலத்தில் பேரன், பேத்திகளைக் கவனிக்க மட்டுமே  அப்பா அம்மாவை அருகில் வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது.  அல்லது முறைவைத்து  உதவியை வலுக்கட்டாயமாகப் பெறுகிறார்கள். கூர்ந்து கவனித்தால் தேவையைக் கருதியே அருகில் வைத்துக் கொள்கிறார்கள். இந்த வயதில்தான் தன் பேரப்பிள்ளைகளின் நலன் கருதிப் பல பெரியோர்கள் பிடிவாதம் தளர்ந்து ஒத்துழைக்கிறார்கள்.

          பிடிவாதம் செய்வோரை இப்போதெல்லாம் விடுதிக்கு தள்ளிவிடும் அபாயமும் உள்ளது. மாணவர்களும் முதியோரும் இவ்வாறன தங்கும் விடுதிக்குச் செல்லவேண்டிய நிர்ப்பந்த நிலைக்கே உள்ளார்கள். ஆனால் இளையோரும் முதியோரும் சேர்ந்த கூட்டுக் குடும்பத்தில தனிமை விடுதிக்கு வேலையில்லை. அன்பும் அரவணைப்பும் இருப்பதால் அவசியம் இல்லாமல் போய்விடுகிறது.

        தீர்க்க முடிந்த பிடிவாதம் நல்வாழ்க்கையைத் தரும், தீராத பிடிவாதம் நல்வாழ்க்கையைத் தொலைத்துவிடும். பிடிவாதம் ஊனமல்ல, ஒருவகை மனநோயே.  எனவே மாணவர்களுக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி,  முறையான மருத்துவ ரீதியான தீர்வே சரியானதாக இருக்கும். சரியான நேரத்தில் முறையான அறிவுரைகளைக் கேட்டு மருத்துவர்களின் ஆலோசனையின்படி தீர்வுகண்டு,  ஒருமுறை வாழும் வாழ்கையை முறையாகவும்  சரியாகவும் வாழ்ந்து இன்பாய் மகிழ்வோம்.
 

 (மறுப்பதிவு)


---------கவியாழி---------

17 comments:

 1. பிடிவாதம்
  வாழ்வையல்லவா பாழக்கிவிடும்
  அருமையான அலசல் ஐயா
  நன்றி

  ReplyDelete
 2. துன்பம் வந்தால் அனைத்தையும் சிந்திக்க வைக்கும்...

  ReplyDelete
 3. வாதத்துக்கு மருந்து உண்டு.

  பிடிவாதத்துக்கு மருந்து ஏது?
  பட்டுத்தான் திருந்த வேண்டும்..

  ReplyDelete
 4. வீண் பிடிவாதம் தவிர்க்க வேண்டிய ஒன்று! நல்லதொரு பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 5. ஆழமான அலசல்
  இன்றைய நிலையில் அவசியமான
  பதிவும் கூட
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. நல்ல பதிவு நண்பரே! ஆனால் நல்ல விசயங்களுக்கு பிடிவாதம் இருப்பதில் தவறில்லை என்றே தோன்றுகின்றது. நண்பரே! சில லட்ச்சியங்கள் நிறைவேற பிடிவாதமாக மன உறுதியுடன் இருந்தால் தானே அடைய முடியும்!

  ReplyDelete
 7. நல்லதொரு விசயத்தை அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள் ஆனால் இன்று எந்த பிள்ளைக்கு ஐயா தாத்தா-பாட்டி உறவுகள் கிடைக்கிறது மனிதன் எதையோ தேடி ஓடிக்கொண்டு இருக்கிறான்...

  அன்புடன்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

  ReplyDelete
 8. தீர்க்க முடிந்த பிடிவாதம் நல்வாழ்க்கையைத் தரும், தீராத பிடிவாதம் நல்வாழ்க்கையைத் தொலைத்துவிடும். //

  உண்மைதான்.

  ReplyDelete
 9. பிடிவாதம் பலரது வாழ்க்கையை திசை திருப்பிவிடுகிறது. நிதானத்தோடு இருந்து சிறிது விட்டுக்கொடுத்தால் எந்த பிரச்னையும் இல்லை. நல்ல விவாதம். நன்றி.

  ReplyDelete
 10. பொறாமைக்கு ஈடான தீங்கான குணம் பிடிவாதம் !

  இன்றைய அவசர வாழ்வுக்கு தேவையான மிக அவசியமான பதிவு

  ( எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !
  http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். (


  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete
 11. பிடிவாதம் சுற்றியிருப்பவர்களின் நிம்மதியையும் கெடுத்துவிடுகிறது.நல்ல பகிர்வு.

  ReplyDelete
 12. காந்தியடிகள் கூட பிடிவாத குணம் கொண்டவர்தான்.ஆனால் அந்த பிடிவாதம் நல்ல கொள்கைகளுக்காக
  நல்ல பதிவு பாராட்டுக்கள்

  ReplyDelete
 13. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
 14. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

  புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
  http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்