Thursday, 31 October 2013

தித்திக்கும் தீபாவளித் திருநாள்

தித்திக்கும் தீபாவளித் திருநாள்
--------------------


எப்பொழுது விடியுமென்று எல்லோரும் காத்திருக்க
எல்லோரும் தெருவிலே பட்டாசு வெடிச்சிருக்க
குப்பென்ற இருட்டு கொஞ்சமாய் மறைந்திருக்க-சேவல்
கூவாமல் எல்லோரும் எழுந்திருக்கும் திருநாள்

ஏழைபணக்காரன் என்றதொரு வித்தியாசம்
எங்கும் இல்லாமல் மகிழ்ந்திடும் திருநாள்
காலைமாலை என்ற கணக்கு இல்லாமல் - மக்கள்
காசுசெலவழிக்கும் தீபாவளி ஒருநாள்

புத்தாடைக்கு புதுமஞ்சள் சாந்திட்டே அணிந்திட்டு
புதுநாளைக் கொண்டாட மாப்பிளையும் அழைத்திட்டு
வித்தாரம் பேசாமல் வீதியெங்கும் கூறாமல் -சண்டை
விநியோகம் செய்யாத தீபாவளி நன்னாள்

காசுபணம் கரியாக்க கடனாக வாங்கியும்
ஓசிப்பொருள் வாங்காமல் உழைத்தே வைத்திருந்து
புத்தம் புதிதாய் துணிகள் வாங்கி மகிழ்ந்தே -நாளை 
பெரிசு இளசுகளும் போற்றிடும் தீபாவளிநாள்

இனிப்புகளும் காரமும் இல்லாத வீடில்லை
இரண்டுமுறை தின்னாலும் இன்றுமே தப்பில்லை
நெருப்புடனே திரிந்தாலும் தப்பாக நினைக்காமல்-ஆசி
நெஞ்சார வாழ்த்துகின்ற தீபாவளித் திருநாள்

இந்துக்கள் அல்லாது எல்லோரும் ஒற்றுமையாய்
இந்தியத் திருவிழாவை  எல்லா நாடுகளிலும்
இல்லத்தின்  உறவுகள் ஒன்றாகச் சேர்ந்து-மகிழ்வாய்
இனிமையாய் கொண்டாட விரும்பும்நாள்

வருடத்தில் இந்நாள் வந்தோரை வரவேற்று
வாஞ்சையுடன் உணவளித்தும்  உபசரித்தும்
வாழ்கையிலே வேதனைகள் கோபமும் மறந்து 
வாழ்த்துக்களை எல்லோரும் பகிரும்நாள்(தீபாவளிப் பரிசுப் போட்டிக்காக)-----கவியாழி----

Wednesday, 30 October 2013

திரண்ட பாறையுமே தள்ளி

தினந்தோறும் மகிழ்ச்சியாய் ஓடி
திசையெங்கும் செழிக்க வைத்து
வனத்தையும்  வயலையும் காத்து
வானம் மகிழ  வந்தாய்

பலஊர்கள் மைல்கள்  தாண்டி
பாமரனும் மகிழ்வாய் வாழ
பரந்து விரிந்த பாதைவழியே
பகலிரவு ஓடிவந்து மகிழ்ந்தாய்

கிடந்த கற்கள் மலைகள்
கடந்தும்  உடைத்தே நடந்து
அடர்ந்த வனம் செழிக்க
அமைதியாக உருட்டிச் சென்றாய்

திரண்ட பாறையுமே தள்ளி
திருட்டுத் தனமாய் கடத்தி
வறண்ட இடத்திலும்  சென்று
வழியெங்கும் சமன் செய்தாய்

கண்குளிரக் காட்சி தந்த 
கடவுளாய் போற்றி வந்த 
தண்ணீரில் கடந்து வந்து
தவமாகக் காத்து நின்றாய்

சுரண்டலுக்கு ஆசைப் பட்ட
சுயநலக் காரர்களின் கண்ணில்
சூழ்ச்சிக்குத்  தப்ப மறந்து
சுரண்டி சுரண்டி மடிந்தாய்

தினந்தோறும் மணல் அள்ளியதால்
திசையெங்கும் வறட்சி வந்தே
பருவம் மாறிப் பகலவனின்
பார்வையால் பாமரனும் வருந்துகிறான்

நிலைமாறக் காரணம் தெரிந்தும்
நீயும் மௌனம் காப்பதேன்
நிம்மதியைக் கெடுத்தவரை ஏன்
நேரம் கொண்டே அழிக்கவில்லை

விலைபேசும் நிலைக்கே சென்றாயே
வேதனை வேதனையே  எமக்கு
விதியில்லை வீரமில்லைத் தடுக்க
வீணர்களின்  விலைவாசி நாடகத்தில்

>>>>>> கவியாழி <<<<<<Tuesday, 29 October 2013

மேல்சாதி நானென்று சொல்கிறான் ?

மெத்தப் படித்தவனும் பெருமையாய்
மேல்சாதி நானென்று  சொல்கிறான்
மேன்மக்கள் கீழ்மக்கள் உள்ளதென
மேடையிலும் பெருமையாய்ப் பேசுகிறான்

ஒத்த உள்ளங்களாய் இருந்தோரை
ஒரே வார்த்தையில் பிரிக்கின்றான்
ஊரேகூடி மகிழ்ந்தாலும் ஒருவனே
ஒப்பாரி வைக்கின்றான் நடிக்கின்றான்

உழைப்பதிலே ஒற்றுமையாய் இருந்தாலும்
உழுவதிலே சேர்ந்து மகிழ்ந்தாலும்
உத்தமனாய் சாதியை வளர்க்கிறான்
உதவாத காரியத்தைச் சொல்கின்றான்

சத்தியமாய் பேதமில்லை வாழ்கையிலே
சங்கடங்கள் குறைவில்லை  குடும்பத்திலே
சோத்துக்கும் கஷ்டமாக இருக்கின்றான்
சொந்தங்களும் மறுத்தே வாழ்கிறான்

இத்தனைக்கும் இருப்பது ஒரேஊரில்
இழவுக்கும் மகிழ்வுக்கும் செல்கின்றான்
இருந்தாலும் எப்போதும் சொல்கின்றான்
இவனெல்லாம் இன்ன சாதியென்று

எத்தனை நாள் இப்படியேச் சொல்லி
எல்லோரையும் பிரித்துப் பார்க்க
என்சாமியும் துணைக்கு வருகிறதோ
எல்லோரையும் பிரித்துப் பார்க்கிறதோ


.......கவியாழி........


Monday, 28 October 2013

அடுத்தநிலை ஏற்றமாய் இருக்கும்

நடுத்தர வாழ்க்கையே நரகமாக
நாட்டிலே பலபேர் வாழ்வதற்கு
நம்மில்  சிலரும் காரணமாம்
நாணயம் மறந்தும் இருப்பதனால்

கிடைக்கிற  ஊதியம் போதலை
கிடைத்தாலும் அன்றாட செலவுக்கே
கொடுத்தாலும் போதாது  மிஞ்சாது
கொடுமையே மிஞ்சும் தங்கும்

பிள்ளையின் நலன் கருதியே
பிணியையும் மறந்த நிலையில்
படிக்கவும் பயணமும் செய்ய
பணத்தைக் கட்டியும் மீதியில்லை

உற்றார் உறவுக்கும் உதவி
உண்மையில் செய்ய் முடியாது
மற்றோர் மதிப்பு வேண்டி
மடத்தனமாய் செலவு செய்யாதே

சோர்வின்றி மனம் தளராது
சோம்பலின்றி மிகுந்த கஷ்டப்படு
மிகுந்த வருமானம் மட்டுமே
மகிழ்ச்சியாய் வந்திடும் தங்கிடும்

அடுத்தத் தலைமுறை வந்திட்டால்
ஆனந்தம் வந்திடும் தந்திடும்
அதுவரை பொறுத்திடு படிக்கவை
அப்படிச்  சொல்லியே ஊக்கப்படுத்து

அவனுக்கும் வந்திடும் முயற்சியே
அப்புறம் கிடைத்திடும் மகிழ்ச்சியே
அதையார் தடுத்திட முடியும்
அடுத்தநிலை  ஏற்றமாய் இருக்கும்======கவியாழி=======
என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறதா?நான் 1980 ஆம் ஆண்டு  சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில்(Littel Flower Higher Secondary School) +2 படித்து  முடிக்கும்போது எனது வகுப்புத் தோழர்களுடன் எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம்.

முடிந்தால் என்னைக் கண்டுபிடித்து அடையாளம் சொல்லுங்களேன்
---------------------------------------------------------------------------------------------------------------------
பதில்
--------
மேலிருந்து இரண்டாவது வரிசையின் இரண்டாவதாய்  நிற்கும் கருத்த உருவமாய் ஒல்லியான ஏழ்மையின் அடையாளமாய்  தெரிபவன் நானே நான்.

Saturday, 26 October 2013

ஓய்வு கொடுக்க வேண்டுமா
ஆண்டுகள் பதினெட்டும்  என்னோடு
ஆனந்த பயணம் செய்துவந்த
அடிக்கடி நிற்காதக் களைக்காத
ஆதவனின் நண்பன் கடிகாரம்

வேதனையும் நாளும் கண்டவன்
வேடிக்கை பலதும் பார்த்தவன்
வீறிட்டு அழத்தெரியாத  பண்பன்
வேகமாய் செல்லாத துணைவன்

சாப்பிடும் நேரம் சொல்பவன்
சாதனைக் கண்டே ரசித்தவன்
சரிநிகர் சமமாய்  இருந்தவன்
சங்கடம் பலதும் கண்டவன்

அடிக்கடிப் பார்த்திடும் கடிகாரம்
ஆன்மா இல்லாத அவதாரம்
அனைவரும் விரும்பும் பலநேரம்
அதுவே எல்லோருக்கும் ஆதாரம்

உடலோடு உறவாட தவறவில்லை
உயிரின்றி  என்றுமே நின்றதில்லை
உள்ளமும் என்றுமே வெறுத்ததில்லை
உறவாக என்னையும் பிரிந்ததில்லை

ஓய்வு வேண்டியே விரும்பியே
ஓடிக்கொண்டே இருந்தாலும் வயதால்
ஒளியிழந்து கையில் துடிக்கிறான்
ஓய்வு கொடுக்க வேண்டுமா


------கவியாழி------

Friday, 25 October 2013

வாழ்த்தும் நிறையக் கிடைக்கிறது


வலைப்பக்கம் தினமும் பார்க்காவிட்டால்
வருத்தம் மிகுந்தே  தொடர்கின்றது
வாழ்கையில் இழந்ததாய் நினைக்கிறது
வேதனை மிகுந்தே தவிக்கின்றது

எண்ணங்களைப்  பகிர்ந்து கொண்டு 
எழுத்துலகில் நீந்தத் துடிக்கிறது
சின்ன வயது பையனோடும்
சேர்ந்திருக்க இன்றும்  முடிகின்றது 

இத்தனைநாள் மறைத்து வைத்த
இன்பமான தருணத்தை ரசிக்கின்றது
இனிமையான நினைவுகளை நன்றே
 இப்போதும் எழுத துடிக்கின்றது

வெளிநாட்டு உறவின் வேதனையும்
விருப்பமில்லா வாழ்வின் அவசியமும்
வேடிக்கைக் காட்டிச் செல்கிறது
வேதனை பலதும் மறைகிறது

வாழ்த்தும் நிறையக் கிடைக்கிறது
வசந்தமும் மீண்டும் தொடர்கிறது
வயதும் வேண்டி நினைக்கிறது
வாழ்க்கைச் சிறப்பாய் நகர்கிறது=====கவியாழி=====

Wednesday, 23 October 2013

தீண்டாத இரவுகள்.......

மழையும் அடிக்கடி  வருவதால்
மனதும் துடிக்குது  தேடுது
மாலை ஆவதும் முன்பே
மயக்கமும் வருது  தொடருது

காரமாய் சாப்பிடத் தோணுது
காண்பதை யெல்லாம்  விரும்புது
காற்றையும் மீறியே அனலாய்
காத்தும் மூக்கிலே  வருகிறது

சூரியன் பார்த்ததும் மறையுது
சுகமாய் மறைந்தே போகுது
சில்லுன்னு காத்தும் வீசுது
சீக்கிரம் போர்த்திக்க ஏங்குது

துணையும் தேடிடும் நேரத்தில்
தூறலும் அவசரம் காட்டுது
தொடரவே வேண்டுது  விரும்புது
தொடக்கமே மகிழ்ச்சியாய் இருக்குது

நறுமணம் வீசுது மணக்குது
நரம்பெல்லாம் சூடும் ஏறுது
நடுவிலே தூக்கம் கலைந்ததால்
நடுநிசிக் கனவாய் முடிந்தது-----கவியாழி-----Monday, 21 October 2013

இனிமேல் மரங்கள் வளர்க்கணும்

வனமும் வனப்பையும் இழந்தால்
வனத்தின் நிறமும் மாறுமாம்
வானமும் இயல்பை மாற்றியே
வானத்தின் தன்மையும் கூடுமாம்

எல்லா இடமும் வெளிச்சமாய்
எங்கும்  வெய்யில் எரிக்குமாம்
ஏரிக் குளமும் வற்றுமாம்
எரிச்சல் அதிகம் இருக்குமாம்

பொல்லா நிலையால் பலபேரோ
பொசுங்கி மடிந்தே விழுவாராம்
பொழுதும் கழிந்தால் மட்டுமே
பொறுத்தே வெளியில் வருவாராம்

இந்த நிலைக்குக் காரணம்
இழந்த மரங்கள் அதிகமாம்
இதையே நாமும் அறிந்தேனும்
இனிமேல் மரங்கள் வளர்க்கணும்

மழையும் நன்றாய் பெய்யுமாம்
மரங்கள் அடர்ந்து வளருமாம்
மக்கள் துயரம் நீங்கியே
மக்கள் மனமும் குளிருமாம்

வானம் மகிழ்ந்தே குளிர்ச்சியாய்
வருடம் முழுக்க பெய்யுமாம்
வாழ்வில் இதையே  மகிழ்ச்சியாய்
வானத்தைப் பெருக்கிக் காக்கணும்


=====கவியாழி=====Sunday, 20 October 2013

நாலுபேரு சேர்ந்து குடிச்சாலே.....

நாலுபேரு சேர்ந்து குடிச்சாலே
நாகரீகம் மறந்து சிரிப்பாரோ
நாணயம் மறந்த பேச்சாலே
நல்லவர் மனதை வதைப்பாரோ

அறிவும் மழுங்கி இளிப்பாரோ
ஆடைத் துறந்து  இழப்பாரோ
அடுத்தவர் மனத்தைக் கெடுப்பாரோ
அடிமை மதுவால் ஆவாரோ

குடியால் மென்மை துறப்பாரோ
குடும்பம் இழக்க நினைப்பாரோ
குழந்தை பெறவே மறுப்பாரோ
குணத்தை இழந்து தவிப்பாரோ

பெருமை அடைந்து மகிழ்வாரோ
பணத்தை அழித்து திரிவாரோ
பெண்ணின் சாபம் பெறுவாரோ
பொய்யாய் வாழ்க்கை வாழ்வாரோ

மிகுந்த குடியால் குடும்பமே
மேன்மை இழந்தும் தவிக்குமே
மற்றோர் மனதும் வருந்தியே
மனிதனை சிரிக்க வைக்குமே

இல்லறம்  அழிய  காரணம்
இதையேன் மகிழ்வாய் நினைக்கனும்
இனியும் சிலநாள் தவிர்க்கனும்
இனிமை வாழ்வும் தொடரனும்


===கவியாழி===


Friday, 18 October 2013

மகிழ்ச்சியைத் துறப்பவள்

இளமைக் காலம் முதலே
இளையவர் நன்கே வளர
இன்முகம் காட்டி சிரித்தவள்
இளமை மறந்து வாழ்ந்தவள்

விடைலை வயதில் நின்றவள்
வீதியில் வீம்பாய் நடந்தவள்
வேடிக்கைப் பார்த்துச் சென்றவள்
வாழ்க்கைச் சிறையில் மகிழ்ந்தவள்

குடும்பம் தொடங்கி வைப்பவள்
குழந்தை சிலதைப் பெற்றவள்
குறும்புத் தனத்தை மறந்தவள்
குழந்தை வளர்வதால் நிமிர்ந்தவள்

சோதனைக் காலம் கண்டவள்
துணையுடன்  மகிழ்ந்து வாழபவள்
துயரம் மிகுந்தும் நகைப்பவள்
தூய்மை  அன்பைக் கொடுப்பவள்

ஆக்கம் கொடுத்த தாய்
அவள்தான் எனது சகோதரி
அன்பாய் இருக்கும் மனைவி
அடுத்தது எனது மகளே******கவியாழி*******

வெற்றி பெறவே துடிக்குது..............

நேற்றைய வாழ்க்கை முடிந்தது
நேரமும் காலமும் கழிந்தது
நிம்மதி சிலநாள் கிடைத்தது
நேர்மையாய் உணர முடிந்தது

பார்ப்பவர் எண்ணம் புரிந்தது
பாதையும் தெளிவாய் தெரிந்தது
பகலும் இரவும் போலவே
பசுமை வெறுமை கடந்தது

இன்றைய நாளில்  நடப்பது
இன்பம் விரும்பி வாழ்வது
இளமை  வெறுமை இழந்தது
இனிமை வாழ்க்கை ஏங்குது

துன்பம் மெல்ல விலகுது
துயரம் தாண்டி செல்லுது
தூயநல்  நட்பும் தொடருது
துணையாய்  அருகில் வாழுது

நாளைய ஏக்கம் தொடருது
நல்லதும் கெட்டதும் தெரியுது
நாணயம் என்னுள் இருப்பதால்
நன்மையும் தீமையும் தெளிந்தது

வேதனை சிலதும் மறைந்தது
வெளிச்சமும்  அதனால் வந்தது
வேண்டி  விரும்பி  மனதுமே
வெற்றி பெறவே  துடிக்குது


-----கவியாழி------

Thursday, 17 October 2013

அம்மா கடவுள் சரஸ்வதியே

அம்மா கடவுள் சரஸ்வதியே
அகிலம் போற்றும் குணவதியே
எல்லா குழந்தையும் கற்றிடவே
என்றும் கொடுப்பீர் அருள்மழையே

இல்லா பிள்ளையும் கற்றிடவே
இலவசக் கல்வியை கொடுப்பவர்க்கும்
பொல்லாப் பணத்தைப் பிடுங்கியும்
பொழுதும் கொள்ளை அடிப்பவர்க்கும்

சொல்லில் கடுமையாய்  இருப்போர்க்கும்
சொல்லித் தந்தே மகிழ்பவர்க்கும்
நல்ல ஒழுக்கமும் நன்னடத்தை
நாளும் கற்பிக்கும் ஆசிரியருக்கும்

செல்வம் சேர்க்கா பணியாக
செலவில்லாமல் தினம் கற்பிக்கும்
சொல்லில் சிறந்த சீமான்கள்
செய்யும் பணியும்  சிறந்திடவே

அன்பும் அறிவும் பெருகிடவே
அனைவரும் போற்றும் கல்விக்கு
அம்மாதாயே அருள் கொடுத்தால்
ஆயுள் முழுக்க வணங்கிடுவேன்

----கவியாழி----

Monday, 14 October 2013

அய்யா வயதில் மூத்தவரே

அய்யா வயதில் மூத்தவரே
அன்பில் என்னுள் ஆள்பவரே
அழைத்தால் தினமும் மகிழ்பவரே
ஆறாம் எண்ணில் அழைப்பவரே

அன்பில் சளைத்தவர்  உங்களைபோல்
அருகில் எனக்கு இல்லையே
அதனால் எனக்கும் லாபமே
அடிக்கடி கோபமாய் வாழ்த்துங்களேன்

எல்லா  நண்பரும்  மகிழ்வாக
எண்ணி இருந்திட நினைப்பவரே
சொல்லால்  தவறை சுட்டியே
சிறப்பாய் இருந்திடச் செய்பவரே

என்மேல் என்ன கோபமைய்யா
எதற்கு அப்படிக் கடிந்தீரோ
என்னை விடவா உங்களுக்கு
ஏக்கம் தந்திடும் மீசையுமக்கு

பொல்லா கோபம் இல்லையே
பொசுக்கி என்னைக் கொல்லவே
எல்லா நாளும் இப்படியே
என்னிடம் திட்டி வதைக்காதீர்


--கவியாழி--


Friday, 11 October 2013

வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

வயதாகிப் போனாலும் வற்றாத
வாலிபமும் மீண்டும் திரும்பாத
வாழ்த்துகின்ற வயதிலும் வந்திடும்
வாடிக்கையாய் அன்றி நின்றிடும்

திரும்பாத முகத்தையும் திருப்பிடும்
தீராத ஆசையைத் தூண்டிடும்
தெரிந்தோரை மீண்டுமே அழைத்திடும்
திரவியம் உள்ளதைக் காட்டிடும்

வருந்தாத உள்ளங்கள் இல்லையே
வார்த்தையில்  சொல்லவும் மில்லையே
பொருந்தாத இடத்திலும் பொங்கிடும்
புகழையும் சமயத்தில்  மழுக்கிடும்

தெரிந்தோரே உண்மையை சொல்லுங்கள்
தெளிவில்லா சங்கதி இன்றுமே
தொடர்ந்திடும் என்பதும் உண்மையா
தெளிந்தீரா இப்போதும் நன்மையாய்

அன்பெனும் அடிமை உண்மையாய்
அமைந்திட்ட வாழ்கையே நன்மையாய்
துன்புறும் மனதையும் காத்திடும்
தூயஒழுக்கமும் வாழ்வில் சேர்த்திடும்

புரிந்தீரா சொலவதைக் கேட்டதை
புலப்படுதா சொல்லிலே உண்மையை
வருந்தாத வாலிப மூத்தோரே
வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

தமிழ்மணப் பட்டையை வைத்தீர்.....

நண்பரே அன்பரே வாருங்கள்
நல்லதை எல்லோர்க்கும் தாருங்கள்
நாட்டிலே நடக்கிற செய்தியும்
நல்லதாய் கதைகளும் சொல்லுங்கள்

வீட்டிலே ஆதரவு முக்கியம்
விடியலில் எழுவதும் அவசியம்
பாட்டுக்கள் கதைகள் கட்டுரைகள்
பார்த்ததும் படிப்பது அவசியம்

தமிழ்மணப் பட்டையை  வைத்தீர்
தணிந்ததா தாகமே இனிமேல்
கருத்துக்கள் அதிகமாய் சொன்னால்
கடையில்  வாடிக்கைப் பலபேர்

அடிக்கடி வலைக்கு வாங்க
அனைவரின் படைப்பையும் படிங்க
பொறுப்புள்ள கருத்தையே சொல்லி
புகழ்பெறம் வரிசையில் நீங்க

எழுத்திலே உமக்கு ஏற்றம்
இருப்பதாய் அறிந்தே உரைத்தேன்
இன்னுமும் சிறப்பாய் எழுதி
இமயம் போற்ற வாழ்க

Thursday, 10 October 2013

நானும்இறைவனே

படைப்பில் நானும் இறைவனே
பண்பாய் நானும் தினமுமே
பாட்டாய் எழுதித் தருவேனே
பதிலும் தினமும் கொடுப்பனே

உருகி உருகி எழுதியும்
உணர்ச்சி மிகுந்தே சொல்லியும்
உண்மைத் தன்மை மாறாது
உள்ளதை நன்றே சொல்வேனே

எதுகை மோனை எழுத்திலே
என்றும் தொடர்ந்தே காப்பேனே
எல்லா நேரமும் நல்லதாய்
எதையும் எழுதி விடுவேனே

காதல் காமம் எழுதுவேன்
கண்ணீர் வந்திட சொல்லுவேன்
ஊர்கள் சென்றதை சொல்லுவேன்
உணர்ச்சிப் பொங்கிட எழுதுவேன்

மனதில் தோன்றும்  எல்லாமே
மகிழ்ச்சிக் கொண்டே  எழுதியே
மக்கள் என்னை ஒதுக்கும்வரை
மகிழ்வாய் கவிதை படைப்பேனே


அழகாய் கவிதை படைப்பதால்
அன்பாய் நாளும் இருப்பதால்
அனைவரும் என்னை விரும்புவதால்
அதனால் நானும் இறைவனேTuesday, 8 October 2013

மணிக்கூடும் மனிதக்கூடும்

எத்தனை மணித்துளிகள் இப்போது
என்று கேட்டாலும் தப்பேது
முப்போதும் ஓடினாலும் தப்பாது
முறையாக ஓடிடுவாய் எப்போதும்

ஒவ்வொரு மணித் துளியும்
ஓய்வுக்காய் என்றுமே தவறாது
ஒப்பில்லா காலத்தை உணர்த்தாமல்
ஒருபோதும் தடுமாறி நிற்காது

நொடியுமே தவறாக ஓடவில்லை
நிமிடமும் தனக்காக நின்றதில்லை
மணியுமே அவசரமாய் சென்றதில்லை
மனிதரைப்போல் குற்றமாய் சொன்னதில்லை

ஏழையாய் இருந்தாலும் எப்போதும்
எல்லோரும் அவசியமாய் தன்னோடு
எப்போதும் துணையாக வந்திடும்
எந்நாளும் சரியாகக் காட்டிடும்

இருதயம்போல எப்போதும் ஓடிடும்
இன்முகமாய் காலத்தைக் காட்டிடும்
இதையாரும் வெறுக்கிறவர் இல்லார்
இலவசமாய் தருகிறவர் உண்டா--கவியாழி--

Monday, 7 October 2013

மீசை மட்டுமே அழகா

மீசை இருந்தால் அழகேதான்
மாதமும் மழித்தால் நல்லதுதான்
ஆசை அதனால் குறையாது
ஆயுளில் அதனால் பயனேது

மீசை இல்லா முதியோரே
மீண்டும் வசந்தம் கேட்பாரோ
மீண்டும் மீசை வையுங்கள்
மிகுந்த இன்பம் கொள்ளுங்கள்

ஆண்கள் அனைவரும் பெரும்பாலும்
ஆசைக் கொண்டே வளர்திடுவர்
ஆயுள் முழுக்க சிலபேரோ
அதையும் துறந்தே இருக்கின்றனரே

அய்யா பெரியவர்  என்னிடமே
அதனால் கடிந்தே பேசியதால்
என்னா செய்வேன் இளையவன்நான்
எப்படி மறுத்தே சொல்லிடுவேன்

அய்யா வயதில் மூத்தோரே
அய்ந்தாம் நிலையில் உள்ளவரே
அடியேன் என்னை வெறுக்காதீர்
அன்பைக் கொடுக்க மறக்காதீர்


Saturday, 5 October 2013

இன்பமாய் உலா.....செல்லுங்கள்

இன்பமாய் உலா செல்வீரே
இல்லறம் சிறக்குமே  கண்டீரா
இன்னலும் தீர்ந்திட சென்றிரா
இன்பமாய் இனியச் சுற்றுலா

மலைப்பகுதியும் மரங்கள் வளர்ந்த
மிதமாய் குளிரும் தரைபகுதியும்
நீரால் சூழ்ந்த நீர்ப்பகுதியும்
நிலமேத் தெரியாத பணிப்பகுதியும்

உல்லாசமாய் எல்லாமும் நினைத்தே
ஊரெல்லாம் தொலைதூரம் சென்றே
பொல்லாதக் கோபத்தைக் குறைத்தே
பொறுமையாய் செல்வீரே அடிக்கடியே

துன்பமும் நீங்கிடும் துணையாலே
தினந்தோறும் மகிழ்ந்திடும் வாழ்கையில்
அன்பையும் கூட்டிடும் மகிழ்ச்சியில்
அனைவரும் விரும்பிடும்  சுற்றுலா

பண்பையும் நன்றே மாற்றிடும்
பணியிலும் ஊக்கத்தை கூட்டிடும்
இன்பமாய் சிலநாள் இருந்தால்
இதயமும் மகிழ்ந்தே சிரிக்குமாம்---கவியாழி---

Friday, 4 October 2013

உணர்ந்தவர் பிரிந்தால் துயரமே

உணர்ந்தவர் பிரிந்தால் துயரமா
உலகினில் மீண்டும் திரும்புமா
பழகிய நாட்களும் மறக்குமா
பாசமும் நேசமும் கிடைக்குமா

அழகிய நாட்களை மறந்திட
அன்பை மீண்டும் கொடுத்திட
பழகியே நேசத்தை காட்டிட
படைத்தவர் உயிரை மீட்டிட

தினமும் மகிழ்ச்சியே தந்திட்ட
திங்களும் வணங்கிட செய்திட்ட
மனிதருள் தெய்வமாய் திகழ்ந்திட்ட 
மகனாய் என்னை படைத்திட்ட

உறவை மறந்து பிரிந்த
உண்மையில் அன்பைப் பகிர்ந்த
உணர்ச்சியில்  நான் வருந்த
உடையோரை எங்கே மறைந்தீர்

தினம் தோறும் வேண்டுகின்றேன்
திங்கள் தோறும் அழைக்கின்றேன் 
விரும்பாது சென்ற பிதாக்களே
வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்களேன்


---கவியாழி---

Thursday, 3 October 2013

இன்றைய மாணவர் வாழ்க்கை


இன்றைய  மாணவர் வாழ்க்கையோ
இழிந்தே செல்லும் நிலையாலே
பண்பை மறந்தே மாணவனும்
பகலில் குடித்து கெடுவதுமேன்

மகனும்  மறைந்து குடிப்பதில்லை
மாணவனாய் இருந்து படிக்கவில்லை
அவனின் வாழ்வைக் கெடுப்பதற்கா
தினமும் பணமே கொடுப்பதுமேன்

அறிவை வளர்க்கும் மாணவன்
அடிமையாகும் மதுவைக் குடித்து
அறியாமல் செய்யும் தவறுக்கு
அப்பனும் ஆத்தாளுமே துணையாமே

இளமை  வாழ்வோ சிலகாலம்
இனிமை சேர்க்க ஒழுங்காக
இல்லமும் உன்னைக் கொண்டாட
இருப்பாய் சிறப்பாய் பொறுப்பாக

தலைமைப் பொறுப்பை அறிந்தேநீ
தினமும் கற்பாய் முறையாக
தினமும் படிப்பைத் தொடங்கினால்
தெரியும் மகிழ்வாய் எதிர்காலம்

Tuesday, 1 October 2013

வெள்ளையப்பன் வேதனையை மறைப்பவன்

வெள்ளை நிறத்தவன்  அவன்
வேதனையை மறைக்க வைப்பவன்
எல்லா  வீட்டிலும் இருப்பவன்
ஏழையின் வீட்டிலும் குடியிருப்பவன்

கொள்ளைப் பணத்தை முழுங்கி
குடும்பம் முழுதையும் வதைப்பவன்
இல்லை யென்றாலும் விடமாட்டன்
இம்சையை தீர்க்கவே  விரும்புவான்

தொல்லை கொடுக்கும் வலிக்கு
தோதாய்  வந்து காப்பவன்
பிள்ளைத் தாத்தா பாட்டிக்கும்
பிணியைத் தீர்த்து வைப்பவன்

எத்தனை  நிறத்திலும் இருந்தாலும்
எல்லோர் மனதைப் போலவே
துள்ளிச் சிரித்தே தொடர்வான்
துணையாய் கூடவே வருவான்

வறுமை வயதும் பாராமல்
வாழ்வை தொடர விரும்பினால்
வள்ளல் போலவே  நிம்மதியை
வாரிவழங்கியே மகிழ்ந்திடுவான்

முதியோர்தின வாழ்த்துக்கள்

---கவியாழி--