Monday, 8 April 2013

தனிமையின் தவிப்பு

தனிமை ஏக்கம் நோயாமே-அதைத்
தவிப்பவர் சொன்னால்  நியாயமே
இளமை முதுமை இரண்டிலும்-இப்படி
இனிமை மறுக்க  வேண்டாமே

இணையை இழந்த காரணத்தால்
இன்றும் மறக்க முடியலையே
இதுவும் வாழ்வா என்றெண்ணி-என்
இதயம் நொறுங்கிப் போகிறதே

துணையாய் வீட்டில் இருந்தாலும்
துன்பம்  மறந்து வாழ்ந்தாலும்
கனிவாய் போற்றி  வந்தாலும்-அது
தனியாய் மகிழ்வாய் இருக்காதே

கையில் ரூபாய் கோடி  இருந்தாலும்
கவலை இன்றி வாழ்த்தாலும்
பொய்யைச் சொல்லி மகிழ்ச்சியாய்-தனிமை
பொம்மை வாழ்க்கை இதுதானே

பணியில் இருந்த நண்பனெல்லாம்
துணையும் சேர்ந்து வாழ்வதால்
இணையாய் இருந்த காலத்தை-எண்ணி
இன்றும் அவர்போல்  இருக்கத் தோணுதே

தனிமைத் தவிப்பை  தவிர்த்திட லாமா
இனியும் அதுபோல் இருக்க வேண்டுமா
பணமோ மனமோ மாற்றுமோ-அன்பை
பகிர்ந்து என்னுடன் வருவார் யாரோ

துணையை மறக்க துயரைப் போக்க
பிணையாய் யாரும் வருவாரோ
பேதைமை இன்றி இருப்பாரோ-மகிழ்ச்சி
பொங்க அன்பை மீண்டும் தருவாரோ

32 comments:

 1. தனிமையின் வேதனை நிரம்பிய கவிதை.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதாங்க சில குறிப்பிட்ட வயதுக்குமேல் தனிமையின் அவதி சொல்லமுடியாதது

   Delete
 2. தனிமை மிக கொடுமை தான், மறுப்பதற்கில்லை...

  சில நேரங்களில் நம்மை நல்வழிப்படுத்தலும் தனிமை என்பதையும் மறுப்பதற்கில்லை...

  ஞாபகம் வந்த ஒரு பாட்டு

  /// பணம் படைத்த வீட்டினிலே, வந்ததெல்லாம் சொந்தம்...
  பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்...

  பருவம் வந்த அனைவருமே, காதல் கொள்வதில்லை
  காதல் கொண்ட அனைவருமே, மணம் முடிப்பதில்லை...
  மணம் முடித்த அனைவருமே, சேர்ந்து வாழ்வதில்லை...
  சேர்ந்து வாழும் அனைவருமே, சேர்ந்து போவதில்லை... ///

  சேர்ந்து போவதில்லை... ஆனால் சோர்ந்து போகாமல் தொடர வாழ்த்துக்கள்...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. பணம் செல்வம் வசதி இருந்தாலும் வயதன காலத்தில் தனிமை என்பது வாழ்கையின் வெறுமையான பகுதிதான் நண்பரே

   Delete
 3. தனிமைத் தவம் இயற்றும் ஒருவரது புலம்பல் மிக அருமையாக வெளிப்பட்டிருக்கிறது. தனிமை ஒரு வரம்... அளவுக்கு மீறினால் அதுவே சாபமும் கூட! என்ன செய்ய?

  ReplyDelete
  Replies
  1. சன்யாசிகளுக்கு வரமாகலாம் சம்சாரிகளுக்கு என்ன சொல்ல எப்படியாயினும் வயதானவங்களுக்கு கஷ்டம்தானே நண்பரே

   Delete
 4. சகோதரரே... மிக உணர்வுபூர்வமான கவிதை.
  ஆணுக்கோ பெண்ணுக்கோ இப்படியான நிலையை உணர்ந்தாலன்றி உணரமுடியாத வலி...
  வலிக்கிறது சகோதரா...:’(

  தனிமையின் கொடுமை
  தவிப்பது மிடிமை
  நிலையது சிறுமை
  நிகழ்ந்திடின் கருமை...
  உணர்வது வெறுமை
  உண்மையிது உண்மை...;’(

  ReplyDelete
  Replies
  1. உள்ளதை சொன்னால்
   நல்லதே நினைத்தாலும்
   கள்ளமில்லா மனமானாலும்
   பொல்லாதது தனிமை-இதை
   சொல்லாவிட்டால் சுடுதே மனது

   வயதான தம்பதியாய் இருந்து பிரிந்தவகளைப் பாருங்கள் .
   மீண்டும் வாங்க நட்பே தொடர்ந்து படிங்க ஆதரவு தாங்க

   Delete
 5. மகிழ்ச்சிபொங்க அன்பை மீண்டும் தருவாரோ

  அருமை

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான். எப்படி முடியும் அந்த காலம்போல் இப்போதும்.
   நீங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றிங்கம்மா

   Delete
 6. பணமோ மனமோ மாற்றுமோ-அன்பை
  பகிர்ந்து என்னுடன் வருவார் யாரோ
  good
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதானே அன்புக்கு விலையேது .இனியும் எப்படி உண்மையான நேர்மையான அன்பை எதிர்பார்க்க முடியும்

   Delete

 7. தனிமை என்பது
  கொடுமை தான் கவியாழி ஐயா.

  பாடலின் கருத்து அருமை.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் .எல்லோருக்குமே தெரியும் புரியும் ஆனால் சந்தோசமாய் இருப்பதாக சொன்னாலும் தனிமையின் தவிப்பு எல்லோராலுமே உணர முடியும்

   Delete

 8. வணக்கம்!

  தண்டமிழின் நற்றாளைத் தாழ்ந்து பணிந்திடுக!
  வண்டமிழே உன்னடைய வாழ்வு!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. அய்யா நீங்க சொன்னதுபோல் செய்கிறேன் அப்போதும் அந்த ஏக்கத்திற்கு மருந்துண்டோ .விருந்து வேண்டாம்

   Delete
 9. nalla sonneenga...!

  mannikkavum tamilil ezhuthi past panna mudiyala en
  sysdathil...!

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை நீங்க சொல்ல வேண்டியதை சொல்லுங்கள் எல்லோருக்கும் புரியும்,ஆனால் தொடர்ந்து வாங்க படிங்க சீனி

   Delete
 10. தனிமை பல நேரங்களில் தேவையும்படும் இனிமையாகவும் இருக்கும் சில நேரம் கொடுமையாகவும் இருக்கும் நல்ல கவிதை

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஆனால்தனிமை என்பது வெறுமைதான்

   Delete

 11. இதுதான் இன்று நான் உணரும் அனுபவப் பூர்வமான உண்மை!

  ReplyDelete
  Replies
  1. அப்படிங்களா அய்யா ஒருவேளை உங்களை பற்றியதல்ல .இது பொதுவான கருத்துதான்

   Delete
 12. தனைமையை வேதனையை
  உணரச் செய்த கவிதை
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. எத்தனையோபேர் இப்படித்தான் இருக்கிறார்கள் உண்மையைச் சொல்லாமல்

   Delete
 13. தனிமை ரொம்ப கொடுமைதான்!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அம்மா கொடுமையிலும் கொடுமை

   Delete
 14. தனிமையை பற்றி மிக அருமையான சிந்தனை. இரண்டு மூன்று முறை படித்துவிட்டேன். தனிமை ஒரு நோய் அதை அண்டவிடாதீர்கள்.

  இதைப்பற்றி பேசும்போது கண்ணதாசனின் எழுத்து நியாபகத்திற்கு வருகிறது.

  தனிமையிலே இனிமைகாண முடியுமா
  நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
  தனிமையிலே இனிமைகாண முடியுமா

  துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
  அதைச்சொல்லிச்சொல்லித்திரிவதனால் துணை வருமா
  மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா..........

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் .தனிமையை போக்க இப்போது நிறைய சமூக வலைத்தளங்கள் உள்ளதால் அங்கு சென்று படித்தாலே தனிமை வெறுமை ஆகிடும். நீங்க வந்ததுக்கு நன்றி

   Delete
 15. அனுபவிக்கும் தனிமையின் வேதனையையும் தகிப்பையும் எவராலும் வார்த்தைகளால் விளக்க இயலாது. தாங்களோ தமிழின் துணைகொண்டு இனிய கவியாகவே காட்டிவிட்டீர்கள். துணையில்லாது வாடும் பறவையின் துயரக்குரலாகவே தொணிக்கிறது வரி ஒவ்வொன்றும். மனந்தொட்ட கவிதை ஐயா.

  ReplyDelete
 16. உண்மைதான் ,என்ன செய்வது தனிமை என்பது வசந்தமில்லாத வெறுமை மட்டுமே

  ReplyDelete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்